Published:Updated:

பூகம்பத்தைப் புரட்டிப்போடும் புயல்காற்று : முரசொலிக்கு வைகோ எழுதிய வாழ்த்து!

பூகம்பத்தைப் புரட்டிப்போடும் புயல்காற்று : முரசொலிக்கு வைகோ எழுதிய வாழ்த்து!
பூகம்பத்தைப் புரட்டிப்போடும் புயல்காற்று : முரசொலிக்கு வைகோ எழுதிய வாழ்த்து!

தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலிக்கு பவளவிழா. தி.மு.க தலைவர் கருணாநிதி கையெழுத்துப் பிரதியாக ஆரம்பித்த அந்தப் பத்திரிகை, 75 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.  தி.மு.க கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்த எமர்ஜென்சி காலகட்டத்திலும், அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சி அதிகாரத்தை இழந்தபோதும் முரசொலியின் பயணம் ஒருநாளும் தடைபட்டதில்லை. வெளிவருவது மட்டும் ஒரு நாளும் நின்றதில்லை. 75 ஆண்டுகளாக தொடர்ந்து அந்தப் பத்திரிகை வெளியாகிறது. அதற்காக பவள விழாக் கொண்டாட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு காலத்தில் தி.மு.க-வில் செல்வாக்காகவும், முன்னணித் தளபதியாகவும் திகழ்ந்து, பிறகு தி.மு.க-வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க-வைத் தொடங்கிய வைகோவுக்கும் அழைப்பிதழ் நேரில் போய்க் கொடுக்கப்பட்டது. ஆனால், பவளவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், முரசொலி தொடங்கி 50-வது ஆண்டு நிறைவடைந்ததையொட்டி 1992-ல் பொன்விழா மலர் வெளியிடப்பட்டது. அதில் முரசொலியைப் புகழ்ந்து வைகோ எழுதிய கட்டுரையின் தலைப்புத்தான் ‘பூகம்பத்தை புரட்டிப்போடும் புயல்காற்று’. அந்தக் கட்டுரை... 

மனித குலத்தின் மூத்த இனமான தமிழ் இனம், ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்னரே, வீரத்தால் தரணியெங்கும் தன் பெருமையை நிலைநாட்டிட எழுப்பிய போர்ப் பரணியின் ஒலியே ''முரசொலி". முரசொலியின் முழக்கத்தோடுதான் அன்றைய மனிதன், ஆதி மனிதன் தன் தேட்டையை நிறைவு செய்ய வேட்டைக்குப் புறப்பட்டான்; விலங்கினங்களை வென்றான்; முரசொலியின் முழக்கத்தோடுதான் கொல்ல வந்த பகையினத்தை வெல்லும் களங்களுக்குத் தமிழன் அன்றைக்குப் புறப்பட்டான். ஆம், விண்ணை இடிக்கும் தலை இமயம் என்னும் வெற்பை இடிக்கும் திறத்தை நிலைநாட்டி, இமய விண்ணிலும், ஈழ மண்ணிலும், கங்கை மண்ணிலும், கலிங்க மண்ணிலும், காலத்தால் அழிக்க முடியாத வெற்றிச் சுவடுகளை வீர முத்திரைகளைத் தமிழன் முரசொலியின் முழக்கத்தோடு தான் பதித்தான்.

பொங்கி வரும் அலைகடலைப் பந்தய மைதானமாக்கிப் படை நடத்தி, எங்கும் புலிக்கொடியின் வெற்றிப் பட்டொளியை விரியச்செய்த பொன்னியின் புதல்வன் இராஜராஜசோழனும் - கங்கைச் சமவெளியையும் கடந்து, இமயத்தின் உச்சியில் விற்கொடியை நாட்டிய சேரன் செங்குட்டுவனும் - ஆரியப் படை கடந்து வீரத்தை நிலைநாட்டி மீன்கொடியுடன் வெற்றியுலா வந்த நெடுஞ்செழியப் பாண்டியனும், முரசொலியின் தாலாட்டில் வீரம் கேட்டு, போர்க்களத்தின் மத்தியிலே மரணப்பாட்டை விளையாட்டாய்ப் பாடிய வெற்றிக் காவியங்களை இலக்கியங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. காலத்தால் முற்பட்ட நாகரிகத்துக்குச் சொந்தக்காரன் தமிழன் என்பதை ஞாலத்தார்க்குக் காட்டுவதற்குத் தமிழனுக்குக் கிடைத்துள்ள அத்தாட்சிகளில் தலையாயது ஆதி மனிதனின் தோற்கருவியின் போர்க்குரலாகிய - முரசொலி!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இன்றளவும், கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றலுடைய தமிழ்மான மறவர்களின் குருதித் துடிப்பிலே எதிரொலித்து வரும் முரசொலிதான், கங்கையை வென்று கடாரம் கொண்டு, சிங்களம், சாவகம், புட்பகம் உள்ளிட்ட பன்னீராயிரம் தீவுகளிலும் தமிழனின் ஆற்றலை நிலை நாட்டிய போற்றலுக்குரிய வெற்றியின் ஜீவ நாதம்.

இவைகள் புராணக் கதையல்ல; கவிஞர்களின் கற்பனையல்ல; சாய்ந்த தமிழினத்தின் சாகாத வரலாறு!

"முரசு முழங்குதானை
மூவரும் கூடி
அரசவை இருந்த
தோற்றம் போல!" - பொருநாராற்றுப்படை

"முரசு மாறிரட்டும் அருந் தொழில்"
-ஐங்குறுநூறு

"முரசு கடிப்பிகுப்பவும்"
-புறநானூறு. 

"குருதிவேட்கை உருகெழு முரசம்"
-புறநானூறு.

"போர்ப் புறமுரசங் கறங்க
ஆர்ப்பெழுந்தன்றால்..."
-புறநானூறு. 

"இனிது முரசு இயம்ப..."
-புறம் 

"முரைசுகெழு செல்வநகர்"
-புறம்.

"முரசுடைச் செல்வர்..."
-அகநானூறு.

இப்படிப் பெருஞ்சத்தனாரும், மோசி கீரனாரும், மூலங்கிழாரும், முடமோசியாரும், முதுகண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் பலராலும் போற்றப்பட்ட பெருமை ‘முரசொலிக்கு உண்டு'. முரசொலி முழக்கம் கேட்டால் வீரனின், வேலுக்கும் வாளுக்கும் வேலைவந்து விட்டது என்றுதான் பொருள்.

நம் சிந்தையணுவெங்கும் சிரிக்கும் செந்தமிழாய் வீற்றிருந்து, சிலிர்ப்பூட்டி நம்மைச் செயலாற்ற ஊக்கிவரும்-நம் ஆருயிர்த்தலைவர்-அண்ணன் கலைஞர் அவர்கள், பள்ளிப்பருவத்தில் துள்ளியெழுந்த உணர்வோடு ஆதிக்க இந்தியை மோதிச் சாய்த்திட முற்பட்டுத் திருவாரூர் வீதிகளில் உலாவந்த நாள்களில், அவர்தம் கையிலே முதன் முதலில் ஏந்திய ஜனநாயகத்தின் போர் வாளாம், அவரது ஏட்டுக்குத் தேர்ந்தெடுத்த பெயர் முரசொலி. தமிழாய்ந்த தமிழிலேயே தோய்ந்த நெஞ்சத்தை - இன்றைக்கு அல்ல தலைவர் முரசொலியை துண்டறிக்கையாக வெளியிட்ட சீரிளமைப் பருவத்திலேயே பெற்றிருந்தார் என்பதன் சாட்சியமன்றோ "முரசொலி". முன்னேற்றக் கழகத்தின் பெருமையே முரசொலி. தமிழ் இனத்தின் விடியலுக்காக அரை நூற்றாண்டு காலமாக திசையெட்டும் சிலிர்த்திட முழங்கிடும் பூபாளமே முரசொலி. கிறிஸ்து இயேசுவின் அருள்மொழிகளை பூமிப்பந்தெங்கும் சீடர்கள் சுமந்து பரப்பியது போல, பெரியாரின் சிந்தனையை, அறிஞர் அண்ணாவின் உணர்வுகளை திராவிட இனத்தின் நரம்புகளில் ஊட்டிய ஆற்றலும் கீர்த்தியும் உரித்தது முரசொலி. ‘எழுத்து’ கலைஞரின் பிறவிக்கலை. கலைஞருக்கு நிகரான தமிழ் இலக்கியப் படைப்பாளி இருபதாம் நூற்றாண்டில் எவரும் இல்லை என்பதை மாச்சரியங்களைக் கடந்து விமர்சகர்களும் ஒப்புக்கொள்வர். மணிமேகலை கரத்து அமுத சுரபி போல் கலைஞரின் எழுதுகோல் வற்றாது வளம்மிக்க படைப்புக்களை வழங்கிக்கொண்டே உள்ளது. கழகம் கண்ட போர்க்களங்களுக்குக் கட்டியம் கூறியதும் முரசொலி தான்; அக்களங்களில் படை சேர்த்ததும் முரசொலிதான்; வெள்ளம் போல் வந்த பகையை வென்றிட காரணமானதும் முரசொலிதான்; கழகப் பாசறைகளில் வெற்றிப் பாதைகளை விண்முட்டப் பறந்திடச் செய்ததும் முரசொலிதான்.

சோஷலிசப் புரட்சியை நடத்திய மாமேதை லெனின் நடத்திய ஏடு - இஸ்க்ரா கூட (தீப்பொறி) முடங்கியதுண்டு. கலைஞரின் முரசொலியோ இமயமலைகளையே எதிர்த்து இடறி வென்று காட்டியுள்ளது. இரத்தம் பொங்கிய ‘65' போர்க்களத்தின் எக்காளச் சத்தமே ‘முரசொலி’ தான். அதனால் அன்றோ கலைஞருக்குப் பாளைச் சிறை! சரியாகப் பத்தாண்டுகளுக்குப் பின் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போரைத் தொடங்கிய ஏடு, இந்திய உபகண்டத்திலேயே முரசொலிதான்; இந்திராகாந்தி அம்மாயாரை ஹிட்லராகச் சித்திரித்த முரசொலியின் கார்ட்டூன், அமெரிக்கா-ஐரோப்பிய ஏடுகளில் பிரசுரமாயிற்று.‘சென்சார்’ விலங்குகளை முரசொலி எனும் சம்மட்டி கொண்டு கலைஞர் உடைத்தெறிந்து ஜீவாதார உரிமைகளைப் பாதுகாத்த வல்லமை இந்தியாவில் ஜனநாயகம் வாழும் காலம்வரை வரலாற்று வெற்றியாகவே விளங்கும். இருண்ட சிறைகளில் கழகப் போர் மறவர்கள் அடைபட்டுக்கிடந்த அந்த நாள்களில் ‘முரசொலி’  ஏடு ஒன்றுதான் அவ்வீரர்களுக்கு தெம்பூட்டும் அமுதமாயிற்று. முன்னேற்றக் கழகத்தின் உயிர்மூச்சாக முரசொலி திகழ்கிறது. தன்மான தமிழர்களின் இதய ஒலியாக ‘முரசொலி’ ஒலிக்கிறது.

அம் முரசொலிக்குப் பொன்விழா - முரசு ஒலிக்கப் பொன்விழா எண்ணும் போதே சிந்தையணு ஒவ்வொன்றும் சிலிர்க்கிறதே. கந்துகொல் வேட்கையுடன் முந்திக்களம் சென்று, புதையம்பில் பட்டுப் பாடூன்றும் களிறுகளாம் கலைஞரின் லட்சோலட்சம் உடன் பிறப்புக்களின் இதயத்துடிப்பில், குருதியோட்டத்தில் இலட்சியப் பண் மீட்டி முரசொலி முழக்கம் கேட்கிறது! பதவி வெளிச்சத்தில் முட்டி மோதி விழும் விட்டில் பூச்சிகள், ‘நாங்கள் விமானப் படையாவோம்’ என்று தம்பட்டம் அடித்தால், வேழப் பெரும்படை வேங்கைக் கூட்டம் - வேடிக்கையா பார்க்கும் என்று எக்காளம் எதிரொலிக்க முரசொலி முழக்கம் கேட்கிறது! முரசொலி முழக்கம் என்றுமே நிற்காது! முடிவேந்தர் மூவர்தம் வழிவந்த குடிமாந்தர் மடிமையிலும் மிடிமையிலும் சிக்கி மதி மயங்கி மாற்றார்க்கு அடிமைகளாய் - அடிவருடிகளாய் ஆலவட்டம் சுற்றி வாழலாம் என்று நிலை மாளும் வரை - மாண்ட தமிழ்ப் பெருமை மீளும் வரை நிற்காது; ஆம் முரசொலி முழங்கிக் கொண்டேயிருக்கும்.

வெங்கொடுமைச் சாக்காட்டில், விளையாடும் வெற்றித் தோள்களில் தினவெடுக்க - பொங்கும் வெங்குருதிதனில் கமழ்ந்து வீரஞ்செய் தமிழ் மூச்சைச் சுமந்து, கணைக் கால் இரும்பொறையின் மானத்தையும் கரிகால் பெருவளத்தானின் வீரத்தையும் நினைவூட்டி முரசொலி முழக்கம் கேட்கிறது.

ஆண்ட தமிழினத்தின் அடிமையுற்ற நிலைமாற்றி மீண்டும் எழுச்சியுற வேண்டும். புதுயுகத்தைத் தமிழ்க் கலாசார மறுமலர்ச்சிப் பொன்யுகத்தை உருவாக்க ஓய்வறியாச் சூரியனாம், நம் ஒப்பற்றத் தலைவர் கலைஞர் அவர்களின் தூதுவனாய் முரசொலி முழக்கம் கேட்கிறது!

வாரீர் அணி வகுப்போம்!
வாரீர் பணி முடிப்போம்!
வாரீர் பிணி துடைப்போம்!
முழங்கட்டும் வாரீர் அணி வகு! 
முன்னேறட்டும் நம் பட்டாளம்! 
ஆதிக்கக் கோட்டைகளைத் தகர்த்தெறிவோம்!

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் உருவாக்கிய திராவிட உணர்வுகளின் சின்னமாம் தலைவர் கலைஞரின் ஆட்சியைப் பொய்யால் வஞ்சத்தால், சூதுமதியால் சாய்த்த சூனியக்காரியின் ஆதிக்கத்தை வேரடி மண்ணோடு சாய்த்து வெற்றி முரசு கொட்டும் வரை தரணியில் மீண்டும் தமிழ் இனம் ஏற்றம் பெறும் வரை, பூங்காட்டில் நுழைந்துவரும் தென்றல் ஆக அல்ல; பூகம்பங்களைப் புரட்டி வரும் புயற்காற்றாக முழங்கிக் கொண்டேயிருக்கும் முரசொலி!