Published:Updated:

''வாங்கிய கடனைக் கட்டாதவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும்!''

வங்கி ஊழியர்கள் போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி

'தகுதி இருந்தும் கடன் செலுத்தாதோர்’  என அறிவித்து

விஜய் மல்லையாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா. கோடிகளில் கடனைப் பெற்று அதை செலுத்துவதில் அக்கறை காட்டாத முதலாளிகளுக்கு

குட்டு வைக்கும் விதமாகத்தான் இந்த திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம், இது சம்பந்தமாக வாராக்கடன் பட்டியலை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

''ரிசர்வ் வங்கியின் சட்டத் திட்டங்களின்படி ஒருவருடைய வங்கிக் கணக்கை வெளியிடக் கூடாது என்பது விதி. ஆனால், மக்கள் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பட்டியலை வெளியிட்டோம். இதற்காக ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்''  என்கிறார் சி.ஹெச்.வெங்கடாசலம் துணிச்சலாக.  அவரிடம் பேசினோம்.

''வாங்கிய கடனைக் கட்டாதவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிய வேண்டும்!''

''பிரதமர் நரேந்திர மோடியின் ஜன்தன் யோஜனா திட்டத்தை வரவேற்கிறீர்களா?''  

''கடை கோடியில் உள்ள இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட வேண்டும் என்பதைப் பல வருடங்களாக வற்புறுத்தி வருகிறோம். மேலும், வங்கி சேவையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். அதனால் இந்தத் திட்டத்தை வரவேற்கிறோம். இதில் சில விமர்சனங்களும் உள்ளன.  வங்கிக் கணக்கு அனைவரையும் சென்றடைய வேண்டுமென்றால் பொதுத் துறை வங்கிகளை மக்கள் இருக்கக்கூடிய இடத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். வெறும் 40 ஆயிரம் கிராமங்களில்தான் இன்று அரசு வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் 5 லட்சத்து 60 ஆயிரம் கிராமங்களுக்கு வங்கிச் சேவை சென்றடையவில்லை. ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் வங்கிக் கணக்குக்கு மட்டுமே சலுகைகள் கொடுக்கப்படுவதால் ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்துள்ள ஒருவர் மீண்டும் புதிய கணக்கு தொடங்கும் சூழல் உள்ளது.

பொதுத் துறை வங்கிகளை விரிவுபடுத்த வேண்டும். கிராமம்தோறும் புதிய கிளைகள் அமைத்து ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும். அரசு ஏஜென்ஸிகளைக் கொண்டு உண்மை பயனாளிகளை அடையாளம் காண வேண்டும்.''

''வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதா?''

''இந்தியா, 125 கோடி மக்கள் தொகையைக்கொண்ட நாடு. எதற்கெடுத்தாலும் அமெரிக்க நாட்டையே நாம் மேற்கொள்காட்டுகிறோம். அங்கு 35 கோடி மக்கள்தான் உள்ளனர். அவர்களுக்கு 3,000 வங்கிகள் உள்ளன. இந்தியாவிலோ 25 அரசாங்க வங்கிகளும், 25 தனியார் வங்கிகளும் இருக்கின்றன. இங்கு வங்கித் துறை இன்னும் வளர வேண்டிய அவசியம் உள்ளது. வங்கித் துறை வளர்ச்சியே பெற முடியாது என்ற நிலையில் அதனை சுருக்கலாம். வங்கிகளை இணைத்தால் முதலில் வங்கிக் கிளைகளை மூடுவார்கள். அது சேவையை பாதிக்கும். பெரிய வங்கிகளாக உருமாறியவுடன் பெரிய ஆட்களைத்தான் கவனிப்பார்கள். மக்களிடமிருந்து விலகி உலக அளவில் போட்டிப் போட தயாராக வேண்டிய சூழல் ஏற்படும். அந்தப் போட்டி அவசியமற்றது. வங்கிகள் இணைப்பால் ஜன்தன் யோஜனா திட்டத்தை செயல்படுத்த முடியாது.

வங்கிகள் இணைப்புக்கான ஆலோசனைகளையும் அதற்கான தக்க நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. நாங்கள் ஆரம்பத்திலிருந்து வங்கிகள் இணைப்பை எதிர்த்து வருகிறோம். மத்திய அரசு அது தொடர்பாக நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.    

''வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாதவர்களால் வங்கித் தொழிலே மோசமடைந்து வருகிறது என்று பிரசாரம் செய்து வருகிறீர்கள். இதை எப்படி தடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?''

''வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை கிரிமினல் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லி வருகிறோம். வருமானம் இருந்தும் கடனை செலுத்தவில்லை என்றால் அதுவும் ஏமாற்றுதல்தான். மக்கள் பணத்தை ஏமாற்றுபவர்கள் கிரிமினல் குற்றவாளிகள். அவர் மீது மத்திய அரசு  கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

''பொதுத் துறை வங்கிகளில் உள்ள வாராகடன் தொகை எவ்வளவு?''  

''கடந்த 7 ஆண்டுகளில் பெரும் மற்றும் சிறு முதலாளிகள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4,95,000 கோடி ரூபாய். இதில் 24 பொதுத் துறை வங்கிகளில் 406 பேர் மட்டும் செலுத்த வேண்டிய தொகை 70,300 கோடி ரூபாய். கிங்ஃபிஷர் ஏர்லைன் அதிபர் விஜய் மல்லையா 2,673 கோடி ரூபாய், வின்சம் டைமண்ட் 2,660 கோடி ரூபாய், எலக்ட்ரோ தெர்ம் நிறுவனம் 2,211 கோடி ரூபாய், ஸ¨ம் டெவலப்பர்ஸ் 1,810 கோடி ரூபாய், ஸ்டெர்லிங் பையோ டெக் 1,732 கோடி ரூபாய், எஸ்.குமார் நேஷன் வைட் நிறுவனம் 1,692 கோடி ரூபாய், சூர்யா விநாயக் நிறுவனம் 1,446 கோடி ரூபாய், இஸ்பாட் அல்லாய்ஸ் 1,360 கோடி ரூபாய், ஃப்ரெவர் பிரிஷியஸ் 1,254 கோடி ரூபாய், ஸ்டெர்லிங் ஆயில் 1,197 கோடி ரூபாய் என இது போன்று 406 நிறுவனங்கள் கடன் பாக்கி வைத்துள்ளார்கள். மாநில அளவில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. தமிழக கடனாளிகள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை 5,003 கோடி ரூபாய்!'    

''கடன் கொடுப்பதில் கொண்டு வரப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் என்ன?''  

''விவசாயம், சுய வேலைவாய்ப்பு, கிராமப்புற முன்னேற்றம் என ஏழை மக்களுக்கென கடன் கொடுப்பதில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி குறைந்த வட்டியில் சுலபமான தவணையில் துரிதமாகக் கொடுக்க வேண்டும். அறுவடை முடிந்தபின் விவசாயிக்கு கடன் கொடுப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதேபோல், சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் கொடுக்க முன்வர வேண்டும். ஆனால், வங்கிகள் இன்று 70 சதவிகிதம் பெரு முதலாளிகளுக்கே கடனை அள்ளிக் கொடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள 13 கம்பெனிகளுக்கு 6 லட்சம் கோடி ரூபாய் வங்கிகள் கடனாக கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் அம்பானிக்கு 1,13,000 கோடியும், பூஷன் ஸ்டீலுக்கு 41,000 கோடி ரூபாயும் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களை விரட்டியும், கார்ப்ரேட்களுக்கு நாய் போல வாலாட்டியும் பழகிவிட்டதால் ஏற்பட்ட விளைவு.  மேலும், மோசடிகளாக இருக்கக் கூடிய வங்கிக் கொள்கைகளை சீராய்வு செய்ய வேண்டும். வங்கிக் கடன் கொள்கை மாற்றப்பட்டு சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும்.''

'சிட் ஃபண்டுகள் வங்கிகளாக மாறினால்  ஆதரிப்பீர்களா?'    

'பெரிய மோசடிகள்தான் நடைபெறும். ஏற்கெனவே, பெங்காலில் சாரதா ஸ்காம் 30,000 கோடியை காணவில்லை என்கிறார்கள். சாஹாரா நிறுவன தொழிலதிபர் 30,000 கோடியை ஏமாற்றிவிட்டார் என்கிறார்கள். இதுபோன்ற சூழலில் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் வங்கிகளாக உருமாறினால் எந்தவித கட்டுப்பாடுகள் இல்லாமல் மக்களை ஏமாற்றக்கூடிய தன்மையாகத்தான் இருக்கும். கடன் கொடுப்பதில் குளறுபடி ஏற்பட்டு தற்கொலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.'    

கறுப்புப் பணம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுமா ?    

'எழுதி வேண்டுமானால் தருகிறேன் கண்டிப்பாக கறுப்பு பணத்தை யாராலும் இந்தியாவுக்கு கொண்டு வரமுடியாது. கறுப்புப் பணம் உருவாகாமல் எப்படி தடுப்பது என்பதை கடந்த 40 வருடங்களாக சொல்லி வருகிறோம். கறுப்பு பணத்தை வைத்து மிகப் பெரிய அரசியல் நடந்து வருகிறது. பி.ஜே.பி-யை சேர்ந்தவர்களே அதன் பயனாளிகளாக இருக்கும்போது கறுப்புப் பணத்தை மீட்டெடுத்து வருவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். குழுக்கள் எல்லாம் கண்துடைப்புக்காக நேரு காலத்திலிருந்தே அமைக்கப்பட்டு வருகிறது. பிரச்னையை தள்ளிப் போட குழு அமைப்பதுதான் சிறந்த வழி என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.'

- நா.இள.அறவாழி

படம்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு