Published:Updated:

மிஸ்டர் கழுகு: முன்கூட்டியே ராஜினாமா?

மிஸ்டர் கழுகு: முன்கூட்டியே ராஜினாமா?

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: முன்கூட்டியே ராஜினாமா?

கழுகார் உள்ளே நுழையும்போதே, ''எங்கே போனாலும் 'செப்டம்பர் 20-ம் தேதி என்ன நடக்கும்?’ என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்று சொன்னபடியே வந்தார்.

''சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வைத்துத்தானே அனைத்து நகர்வுகளும் இருக்கப்போகிறது. அதனால்தான் அனைவரும் அதைப்பற்றியே கேட்கிறார்கள்'' என்றோம் நாம். தலையாட்டியபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

''ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வரப்போகிறது. தீர்ப்பின் வடிவத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதிக்கொண்டு வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம், நீதிபதியின் வீடு மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் மத்திய, மாநில அரசின் உளவுத் துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அனைவருமே கண்காணிக்கப்படுகின்றனர். நீதிபதி குன்ஹா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களை உளவுத் துறையினர் வேவு பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் மூலமும் வாட்ச் செய்துகொண்டு இருக்கிறது உளவுத் துறை. தவிர, தனியார் உளவு நிறுவனங்களும் வேவு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

நீதிபதி குன்ஹா கடமையே கண்ணாக இருக்கிறார். 2004-ல் இருந்து இந்த வழக்கைக் கையாண்டு வரும் நீதிமன்ற ஊழியர்களைக்கூட தன் அறைக்குள் அனுமதிப்பது இல்லை. ஊழியர்களின் பாக்கெட்டில் 100 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்று அவர் ஆர்டர் போட்டுள்ளதாக ஊழியர்கள் சொல்கிறார்கள். 'அவரே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்துவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது’ என்கிறார்கள் ஊழியர்கள். 75 சதவிகிதப் பணிகள் நிறைவுபெற்று இருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள்.''

மிஸ்டர் கழுகு: முன்கூட்டியே ராஜினாமா?

''அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமே... போவார்களா?''

''நீதிமன்றத்தின் உத்தரவு இது. அதன்படி நடந்தாக வேண்டும். தோட்டத்தின் உள்விவரங்களை அறிந்தவர்களிடம் பேசினேன். 'அம்மா பெங்களூரு செல்ல முடிவெடுத்துவிட்டார்’ என்றுதான் சொல்கிறார்கள். 'சசிகலா, இளவரசியை முன்கூட்டியே போகச் சொல்லிவிட்டார். 20-ம் தேதி காலையில் ஸ்பெஷல் விமானம் மூலமாக அவர் செல்லத் திட்டமிட்டுள்ளார்’ என்கிறார்கள். நேரடியாக கோர்ட்டுக்குச் செல்வாரா அல்லது ஏதாவது ஹோட்டலுக்குச் சென்று தங்கிவிட்டுச் செல்வாரா என்று இன்னமும் திட்டமிடவில்லையாம். அதற்கு முன்னதாக சட்டரீதியான ஆலோசனைகள்தான் தினமும் நடந்து வருகின்றன.''

''என்ன நினைக்கிறாராம் முதல்வர்?''

''தீர்ப்பு என்னவாக இருந்தாலும், அதனை எதிர்கொள்ள முதல்வர் தயாராகிவிட்டார் என்றே சொல்கிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து நிறுவனங்கள், தங்களை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. அந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 'இந்த நிறுவனங்களின் நிதி நிலைமை என்னவென்று தெரியவில்லை. தெரிந்தால்தான் இந்த வழக்கை எந்த நீதிமன்றம் நடத்துவது என்று முடிவெடுக்க முடியும்’ என்று சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜெயலலிதா தரப்பு விடவில்லை. மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், 'குற்றப்பத்திரிகையில் உள்ள கூட்டுச்சதி மற்றும் கூட்டுச்சதிக்கு தூண்டுதல் ஆகிய குற்றங்கள் மீதான பிரிவுகளை நீக்க வேண்டும்’ என்று சொல்லி மனுத் தாக்கல் செய்தனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் தனித்தனியாக மனு போட்டனர். 11-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ஆஜராகி, 'மனுவை வாபஸ் வாங்குகிறோம்’ என்று சொல்லிவிட்டார். 'எதற்கு வாபஸ் பெறப்போகிறீர்கள்? எதற்காக மனுத் தாக்கல் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார் நீதிபதி அரவிந்த பைரா ரெட்டி. 'திங்கள்கிழமை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம்’ என்று பன்னீர்செல்வம் சொன்னார். 'வாபஸ் வாங்குவதாக இருந்தால், உடனே வாங்க வேண்டியதுதானே! அதற்கு ஏன் கால அவகாசம்?’ என்று கேட்டார் நீதிபதி. இப்படி என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில்தான் ஜெயலலிதா தரப்பு இருக்கிறது!''

''சொல்லும்!''

''இதுசம்பந்தமான விவாதங்கள் கோட்டையிலும் தோட்டத்திலும் நிறையவே நடக்கின்றன. 'செப்டம்பர் 20-ம் தேதி முதலமைச்சர் அந்தஸ்துடன் கோர்ட்டுக்கு போவதா?’ என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்துள்ளது. 'முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டு அங்கு செல்லலாம்’ என்று ஒரு தரப்பு முதல்வருக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறதாம். 'முதலமைச்சராக இருந்துகொண்டு கோர்ட் படி ஏறினார் என்று வரக்கூடாது. அதனையும் தவிர்த்துவிடலாம். பதவியைப்பற்றி கவலை இல்லை என்றும் இதன் மூலம் அறிவிக்கலாம். நீதிமன்றம் நிரபராதி என்று விடுதலை செய்யும்பட்சத்தில், கம்பீரமாக மீண்டும் பதவியேற்கலாம்’ என்பது இந்தத் தரப்பினரின் கருத்து. அதற்கு இன்னொரு தரப்பினர், 'அப்படி முன்கூட்டியே ராஜினாமா செய்தால், நாமே தண்டனை வரும் என்பதை உணர்ந்ததுபோல ஆகிவிடும். அதனால், ராஜினாமா செய்யத் தேவையில்லை. சூழ்நிலையைப் பொறுத்து அன்று முடிவு செய்யலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். முன்கூட்டியே ராஜினாமா செய்வது பற்றி அதிகமான ஆலோசனைகளை சட்ட வட்டாரத்தினர் விசாரித்து வருகிறார்கள்.''

''என்ன மாதிரிச் சொல்கிறார்களாம் சட்ட மேதைகள்?''

''மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (1), (2) மற்றும் (3) ஆகியவற்றில் வரையறுத்துள்ளபடி, மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் மூலம் தண்டனை பெறும்பட்சத்தில், அவர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும்.  தண்டனையின் வகை, தண்டனைக் காலம் போன்ற காரணிகள் எதுவும் இந்தப் பதவிப் பறிப்பைக் கட்டுப்படுத்தாது.''

''இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால் முன்பு தேர்தலில் போட்டியிட தடை இருந்தது. கடந்த ஆண்டு அளித்த தீர்ப்புப்படி தண்டனை பெற்றதும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இருக்கிறது. அப்படித்தானே?''

''இரண்டு ஆண்டு வரையறை என்பது மற்ற குற்றங்களுக்கு மட்டும்தான். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி வழங்கும் தண்டனையாக இருந்தால், அது என்ன தண்டனையாக இருந்தாலும் சிக்கல்தான். நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு சிறைத் தண்டனை வழங்கும் பட்சத்தில், அது ஒரு வருட தண்டனையா அல்லது ஒரு நாள் தண்டனையா என்பதும் கருத்தில் கொள்ளப்படாது. அவர் தண்டனை பெற்றாரா, இல்லையா என்பது மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தண்டனை பெற்றவர் என்றால், உடனடியாக அவருடைய பதவி பறிக்கப்படும். அதுபோல தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி ஒருவர், தனக்கு எதிரான கைது நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சிறை செல்வதற்குத் தடை வாங்கலாம். கைது நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பிரதிநிதி மேல்நீதிமன்றத்தில் வாங்கும் தடை என்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் பதவி பறிக்கப்படுவதை எந்த வகையிலும் பாதிக்காது. இதையும் சிலர் சுட்டிக்காட்டி வருகிறார்கள்!''

''ஓஹோ!''

''அதுபோல தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி ஜாமீனில் விடுதலையானாலும், அந்த விடுதலையைக் காட்டி தன்னுடைய பதவியைத் திருப்பிக் கேட்க முடியாது. ஏனென்றால், ஜாமீன் விடுதலை என்பது குற்றவாளிக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணம்தானே தவிர, அது அவர் குற்றமற்றவர் என்று சொல்லி வழங்கப்படும் விடுதலை அல்ல. எனவே, தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதி ஜாமீனில் விடுதலையானாலும், அவர் தன்னுடைய பதவிக்கான உரிமையைத் திருப்பிக் கேட்க முடியாது. குறைந்தபட்சம் அபராதம் மட்டுமே அவர்களுக்குத் தண்டனையாக விதிக்கப்பட்டாலும்கூட, உடனடியாக அவர்கள் பதவி பறிக்கப்பட வேண்டும். ஒருவேளை குற்றவாளி மேல்முறையீட்டுக்குச் சென்றாலும், அந்த மேல்முறையீட்டு வழக்கில் அவர் விடுதலையாகும் வரை அவர் பதவி வகிக்க முடியாது என்பதையும் இவர்கள் விளக்கிக்கொண்டு இருக்கிறார்கள்!''

''அ.தி.மு.க-வினர் என்ன நினைக்கிறார்கள்?''

''அம்மா நிச்சயம் விடுதலையாகி வெளியில் வருவார் என்ற நம்பிக்கை அபரிமிதமாக அவர்களுக்கு இருக்கிறது. கடந்த 29-ம் தேதி தலைமைக் கழகம் வந்த ஜெயலலிதாவின் பேச்சு, அவர்களைக் கொஞ்சம் குழப்பிவிட்டதாகத் தொண்டர்களுக்குள் பேச்சு இருக்கிறது!''

''என்ன சொல்லியிருந்தார் அவர்?''

''கட்சியின் பொதுச்செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி அது. அப்போது பேசிய ஜெயலலிதா, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு. ஒற்றுமையாக வாழ்வதாலே உண்டு நன்மையே. வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே’ என்று ஒற்றுமையை அதிகம் வலியுறுத்திப் பேசினார். 'தொடர்ந்து நாட்டு மக்களின் நலனுக்காக நான் பாடுபடுவேன்’ என்றும் சொன்னார். மேலோட்டமாகப் பார்த்தால் இவை சாதாரண வார்த்தைகள்தான். ஆனால், 'செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு’ என்று அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு மறுநாள் (29-ம் தேதி) தலைமைக் கழகத்தில் ஜெயலலிதா இதனைச் சொன்னார். 'தீர்ப்பு எப்படி இருந்தாலும் நான் நாட்டு மக்களின் நலனுக்காக உழைப்பேன், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் போதும்’ என்ற அர்த்தத்தில் இதனைச் சொன்னதாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு இருக்கிறது. தீர்ப்பு அன்று எந்த அசம்பாவிதமும் பழைய மாதிரி நடந்துவிடக் கூடாது என்பதிலும் போலீஸார் தெளிவாக இருக்கிறார்கள். செப்டம்பர் 20-க்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது!'' என்றபடி தி.மு.க மேட்டருக்குத் தாவினார் கழுகார்.

''தி.மு.க.வில் நடந்து வரும் விஷயங்கள் பற்றி முதன்முறையாக கருத்துச் சொல்ல ஆரம்பித்து உள்ளார் மு.க.ஸ்டாலின். 'தலைவருக்கும் எனக்கும் கழக முன்னணியினருக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்கு கூறிக்கொள்வேன்... ஆப்பசைத்த குரங்கின் நிலைதான் பின்னர் உங்கள் நிலையும் ஆகும் என்பதை உணர்வீர்! சிண்டு முடியும் வேலையைத் தொடராமல் இனியாவது நிறுத்துங்கள்’ என்று ஒரு அறிக்கையில் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். 'தலைவர் கலைஞரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகங்கள், ஓய்வறியா உழைப்பு என அத்தனை குணங்களையும் பெற்றவர்கள் தோன்றுவது எளிதல்ல. தலைவரின் அடியொற்றி நடப்பவன் நான்’ என்றும் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்!''

''எல்லாமே யாரோ உருவாக்குகிறார்கள் என்கிறாரே ஸ்டாலின்?''

''ஆமாம்! அந்த யாரோ, யார் என்பதுதான் இப்போதைய பிரச்னையே! 'தி.மு.க-வில் இருந்துகொண்டு கருணாநிதிக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் இணையதளங்களில் எழுதிவருபவர்கள் யார் என்பது தளபதிக்கு தெரியுமா? இப்படிச் சிலருடன் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஐக்கியமாக இருப்பதை தளபதி அறிவாரா?’ என்றும் கட்சிக்குள் பேச்சுக்கள் கிளம்பிவருகின்றன. 'இதுவரை கருணாநிதியை எதிர்த்து தி.மு.க-வின் எதிரிகள்தான் எழுதிக்கொண்டு இருந்தார்கள். இப்போது தி.மு.க உறுப்பினர்களே எழுதுவதற்கு யார் காரணம்?’ என்றும் உள்விவரங்களை அறிந்தவர்கள் கேட்கிறார்கள்.''

''ம்!''

''இந்த அறிக்கையைப் பார்த்த சிலர், 'தலைவர்தான் நிரந்தரத் தலைவர். அவரது பதவியை அடைய நான் விரும்பவில்லை’ என்பது மாதிரி ஸ்டாலின் சொல்லவில்லையே என்றும் சொல்கிறார்கள்.''

''அ.தி.மு.க பொதுச்செயலாளராக 7-வது முறையாக ஜெயலலிதா தேர்வான பிறகு ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலாளர் மகாலிங்கத்துக்கு 10 ஆயிரம் சம்பள உயர்வு கொடுத்துள்ளாராம் ஜெயலலிதா. அவரைத் தவிர அங்கு 15 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய்தான் உயர்த்தப்பட்டுள்ளதாம். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருக்கும் பூங்குன்றன், அடையாறு வீட்டில் இருந்து போயஸ் கார்டனுக்கு வந்து போக ஏ.சி பொருத்தப்பட்டுள்ள கார், கட்சி பெயரில் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கென்று ஸ்பெஷலாக டிரைவரும் போடப்பட்டுள்ளது. 'தினமும் காரிலேயே போயஸ் கார்டன் வாருங்கள்’ என்று ஜெயலலிதா கூறிவிட்டாராம். இனி தைரியமாக அலுவலக காரில் வரலாம். ஆனால், தனியாக டிரைவர் போட்டுள்ளதால், இனி முன்புபோல பூங்குன்றன் இஷ்டப்படி அங்கும் இங்கும் போய் வர முடியாது; அவரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டார் என்கிறார்கள்.''

''ஓஹோ!''

மிஸ்டர் கழுகு: முன்கூட்டியே ராஜினாமா?

''அ.தி.மு.க.-வில் இப்படி என்றால் தி.மு.க-வின் கதை வேறுமாதிரி இருக்கிறது. தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவர் தனது பேத்தியை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அளவுக்கு மார்க் எடுக்காவிட்டாலும், நல்ல மதிப்பெண் எடுத்திருந்ததால் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கலாம் என்று கருணாநிதியைச் சந்தித்தார். பாசுரம் சொல்லும் பழைய மந்திரிக்கு பரிந்துரை செய்தாராம் கருணாநிதி. பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் நடத்தும் அந்த முன்னாள் மத்திய அமைச்சரைப்  பார்க்க அவரது அலுவலகத்துக்குப் போனாராம் முன்னாள் மாவட்டச் செயலாளர். தலைவர் சொன்னதால் ஃப்ரீயாக ஸீட் தருவார்கள் என்று நினைத்தாராம். ஆனால், அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள், 'உங்களால் முடிந்த தொகையைக் கட்டுங்கள்’ என்றவுடன் அவரும் ஒரு தொகையைக் கட்டினார். மருத்துவக் கல்லூரியில் இருந்து சேர்க்கைக்கான அழைப்பு வரும் என்று காத்திருந்தார். அழைப்பே இல்லை என்றவுடன் வகுப்புகள் தொடங்கும் தேதியை தெரிந்துகொண்டு அந்த மருத்துவக் கல்லூரி அலுவலகத்துக்குப் போனாராம். அவர்கள், அந்த முன்னாள் அமைச்சர் சொன்னால்தான் ஸீட் ஓகே ஆகும் என்று சொல்லிவிட்டார்களாம். இரண்டு நாள் அலைந்த பிறகுதான் அவரைப் பார்க்க முடிந்ததாம். 'இந்த வருஷம் கூடுதல் ஸீட் கிடைக்கவில்லை. நிறைய செலவுசெய்தும் ஒன்றும் நடக்கவில்லை. பண கஷ்டத்தில்தான் நாங்களும் இருக்கிறோம்’ என்று கூறிவிட்டு, மேலும் ஒரு தொகையைக் கட்டச் சொன்னாராம். அதை கட்டிய பிறகுதான் அட்மிஷன் போட்டார்களாம்.''

''கட்சி விசுவாசத்தைவிட பணப்பாசம் முக்கியமானது அல்லவா?'' என்று நாம் சொல்ல, சிரித்தபடி பறந்தார் கழுகார்!

அட்டை மற்றும் படம்: சு.குமரேசன்

நிலைக்குழு பாலிடிக்ஸ்!

இரண்டு நிலைக்குழுத் தலைவர் பதவிக்குப் பெயரைக் கேட்டிருக்கிறது பி.ஜே.பி. ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒன்று. அடுத்து, மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் சட்ட விதிமுறைகளை ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் பதவி. இதை ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு போனார்களாம். அ.தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருவள்ளூர் எம்.பி-யுமான வேணுகோபாலுக்கும், அடுத்ததை திருச்சி எம்.பி-யான குமாருக்கும் தரும்படி ஜெயலலிதா சொன்னதாகத் தகவல். ''இந்தத் தகவலை கேட்டு வந்த தம்பிதுரை, வேணுகோபால் பெயரை மட்டுமே சொன்னராம். குமார் பெயரை ஏனோ சொல்லவில்லையாம். முறைப்படி கடிதம் போனதும், வேணுகோபாலுக்கு ஊரக வளர்ச்சித் துறை கிடைத்துவிட்டது. குமாரை சிபாரிசு செய்யாததால், அவர் விடுபட்டார். முக்கியமான அந்தப் பதவியைப் பெற தம்பிதுரையே முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பி.ஜே.பி 'நோ’ சொல்லிவிட்டதாம். தற்போது எம்.பி தொகுதி வளர்ச்சி நிதி விவகாரங்களை கவனிக்கும் குழுவின் தலைவர் பதவிக்கு தம்பிதுரை பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாம். 'ஏற்கெனவே ஐந்து குழுக்களை நிர்வாகிக்கும் பொறுப்பு துணை சபாநாயகரான தம்பிதுரைக்கு இருக்கிறது. இத்துடன் இன்னொரு பதவியா'' என மைத்ரேயன் ஆதரவாளர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

மிஸ்டர் கழுகு: முன்கூட்டியே ராஜினாமா?

சகாயம் கையில் லகான்!

ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயத்தை கோ-ஆப்டெக்ஸில் இருந்து இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்கள். ஒரே நாள் இரவில் அங்கிருந்து அறிவியல் இயக்கம் என்ற துறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க குழு அமைக்கக்கோரி சமூக ஆர்வலர் 'டிராஃபிக்’ ராமசாமி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், புஷ்பா சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு  முன்பு 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ''கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை பற்றி விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கவும், 2 மாதங்களில் விசாரணை அறிக்கையை  தாக்கல் செய்யவும் உத்தரவிடுகிறோம்'' என்று சொன்ன நீதிபதிகள், தமிழக அரசிடம் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். ''ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை அடிக்கடி ஏன் இடம் மாற்றம் செய்கிறீர்கள். இனி அடிக்கடி அவரை இடமாற்றம் செய்யக் கூடாது'' என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். சகாயம் கையில் லகான் போக கிரானைட் வழக்குகளில் சிக்கியவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு