பிரீமியம் ஸ்டோரி

தி.சொக்கலிங்கம், பொள்ளாச்சி.

  எதற்கெடுத்தாலும் காந்தி, காந்தி என்கிறார்களே.... காந்தியைப் போல எல்லோரும் வாழ முடியுமா என்ன?

கழுகார் பதில்கள்!

காந்தி என்றால் 21 நாள் உண்ணாவிரதம் இருப்பது, எரவாடா சிறைக்குள் போவது, தண்டிக்கு யாத்திரை நடத்துவது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காந்தி என்பது எளிமையும் உண்மையும்தான். தினமும் நான்கு மணிக்கு எழுந்தார். வழிபாடு செய்தார். காபி, டீ குடிக்க மாட்டார். சுடுநீரில் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து அதில் கொஞ்சம் தேன் விட்டு அருந்தினார். எளிய காலை உணவு உண்டார். வேகவைத்த காய்கறிகளையே சாப்பிட்டார். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி, பூசணியை விரும்பி உண்டார். எதிலும் உப்பு சேர்ப்பது இல்லை. ஆடம்பர ஆடைகளை உடுத்த மாட்டார். இரண்டு உடுப்புகளை மட்டுமே வைத்திருந்தார். ஒருஜோடி செருப்புதான் அவரிடம் உண்டு. அனைத்து மத தெய்வங்களையும் வழிபட்டார். புலால் மறுத்தார். மதுவைத் தொடவில்லை. சிகரெட், பீடி கிடையாது. வாரத்துக்கு ஒருநாள் மௌனவிரதம் இருந்தார். கோபமே படமாட்டார். கோபம் வந்தால் அடக்கிக் கொள்வார். ஒருவரை முறைத்துப் பார்ப்பதுகூட தவறு என்று சொன்னார். தனது பொருட்களை தானே சுத்தம் செய்தார். தனது கழிவறையை சுத்தமாக வைத்துக்கொண்டார். இரண்டு கைகளாலும் எழுதுவார். ஒருகை வலித்தால் இன்னொரு கையைப் பயன்படுத்தி எழுதுவார். தண்ணீரைச் சிக்கனமாக செலவு செய்வார். முகம் கழுவும்போதும் இன்னொரு வாளியில் அந்தத் தண்ணீரைப் பிடித்து, மீண்டும் பயன்படுத்துவார். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எது கஷ்டமானது என்று சொல்கிறீர்கள்? மகாத்மாக்கள் மட்டுமல்ல சாதாரண ஆத்மாக்களும் பின்பற்றுவதற்காகத்தானே இவை இருக்கின்றன!

 சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

தி.மு.க-வில் குஷ்புவின் இடத்தை தமிழச்சி தங்கபாண்டியன் பிடித்துவிடுவாரா?

அவர் தி.மு.க-வில் இருக்கிறாரா?

 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பி.ஜே.பி-க்கு மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு கொடுத்தால் அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி ஏற்படுமா?

அப்படி ஒரு சூழ்நிலை இல்லையே! பி.ஜே.பி-யை விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோர் மட்டுமே ஆதரிக்கிறார்கள். களத்தில் தி.மு.க போட்டியிடவும் இல்லை, தனது ஆதரவு யாருக்கு என்று சொல்லவும் இல்லை. இடதுசாரிகள் தனியாக போட்டியிடுகிறார்கள். எனவே, அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக பி.ஜே.பி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை!

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

'முல்லை பெரியாறு அணை பிரச்னையை தீர்க்க முயற்சிப்பேன்’ என்று கேரள மாநிலத்தின் புதிய கவர்னர் சதாசிவம் சொல்லியிருக்கிறாரே?

இப்படிப் பேசி புதிய பிரச்னைகளை சதாசிவம் உருவாக்காமல் இருந்தால் போதும். அவர் போன இடம் எல்லாம் பிரச்னையாகக் கிடக்கிறது.

 மயில், சென்னை.

உலக வரலாற்றிலேயே மிகக் கொடூரமான கொடுங்கோல் ஆட்சியாளன் யார்... அதிக மக்களின் உயிரைக் குடித்த ஆட்சியாளன் யார்?

கொடூரங்களுக்கு என்ன அளவுகோல்? வரலாறே ரத்தங்களால் ஆனதுதான்! அமெரிக்காவில் நடத்தப்பட்ட செவ்விந்தியர்கள் படுகொலை முதல் ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழர் படுகொலை வரை ஏராளமான கொடூரங்களை உலகம் பார்த்தது. ஜெர்மனியில் ஹிட்லரும், கம்போடியாவில் பால் பர்ட்டும், மியான்மரில் கறீம் இனம்மீது நடத்தப்பட்ட கொலைகளும், திபெத்திலும், சூடானிலும், போஸ்னியாவிலும், ருவாண்டாவிலும், காங்கோவிலும் நடந்தவற்றை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவருவதை இப்போது பார்த்துவருகிறோம். படுகொலைகளில் எண்ணிக்கை அல்ல, எண்ணமே முக்கியம்!

 ரேவதிப்ரியன், ஈரோடு-1.

டெல்லியில் ஆட்சி அமைக்க பி.ஜே.பி முயல்கிறதே?

இது அவர்களுக்குக் கெட்ட பெயரைத்தான் கொடுக்கும். ஆட்சி அமைக்கும் ஆசை இருந்தால் அப்போதே அவர்கள் அமைத்திருக்கலாம். வேறு வழியில்லை, மீண்டும் இன்னொரு தேர்தல் டெல்லியைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாதது!

 தாமரைச்செல்வன், திருவானைக்காவல்.

திருவனந்தபுரத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்தது பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லியிருக்கிறார். இது அப்போராட்டத்தை நடத்திய தலைவர்களைக் கேவலப்படுத்துவதுபோல இல்லையா?

'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ - என்கிறது தொல்காப்பியம். வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிக் கடலும் தமிழகத்தின் எல்லை என்பது இதன் பொருள். இந்த எல்லைகளைக் காப்பதற்காக ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. 1956 நவம்பர் 1-ம் தேதிக்கு முன்பு வரை கன்னியாகுமரி மாவட்டமும் செங்கோட்டையும் தமிழகத்துடன் இல்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. இதனை தமிழகத்துடன் இணைப்பதற்காக 1810 முதல் ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தப் போராட்டம் 1945-க்குப் பிறகு மிகத் தீவிரமாக நடந்தது.

1948-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளில் மலையாளிகளைவிட தமிழர்களே அதிகமாக இருந்தார்கள் என்பதால் இந்தப் பகுதிகளை தமிழகத்துடன்தான் இணைக்க வேண்டும் என்று அன்றைய திருமூலம் சட்டசபை தமிழ்க் கட்சிகள் சொன்னார்கள். இதனை மொழிவாரி விசாரணைக் குழுவும் ஏற்றுக்கொண்டது. இந்த 200 ஆண்டு கால வரலாற்றைப் புரியாமல் கருத்துச் சொல்லக்கூடாது! ஆனால், தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்படவில்லை.

 பொன்விழி, அன்னூர்.

படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடித்த தேங்காய் சீனிவாசன், அவரோடு அரசியலில் சேர்ந்தாரா? அவருக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா?

கழுகார் பதில்கள்!

வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று எம்.ஜி.ஆரை தேங்காய் சீனிவாசன் விளிக்கும் போது வெறித்தனமான ரசிகனின் குரல் அதில் புலப்படும். திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர் அவர். கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.

அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் சென்றிருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக்கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது. உடனேயே செட்டுக்கு போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். தனது இறுதிக்காலத்தில் மோகனை கதாநாயகனாக வைத்து 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை தேங்காய் சீனிவாசன் எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் நின்றது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததும் அவரை வரவைத்து பணம் கொடுத்து அனுப்பினார். தேங்காய் சீனிவாசன் இறந்தபோது எம்.ஜி.ஆரே உடல்நலம் பாதிக்கப் பட்டுத்தான் இருந்தார். அவர் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்லும்போது அவரது மகளையும் ஏற்றிக்கொண்டு சென்றார் எம்.ஜி.ஆர். சிறிது நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கினார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பினார்.

தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணைபிரியாதவர்களாக வாழ்ந்தார்கள்!

 ஆர்.எஸ்.சீனிவாசன், மதுரை.

சமீபத்தில் மதுரையில் நடந்த முல்லை பெரியாறு அணையின் வெற்றி விழாவுக்கு சர்ச்சைக்குரிய கிரானைட் அதிபர் ஒருவர்தான் செலவு செய்தார் என்று மதுரையில் பேசிக் கொள்கிறார்களே?

ஓ... அப்படியா!! அந்த விவகாரத்துக்கும் ஸ்வாகாவா!!!

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு