Published:Updated:

வேட்புமனுத் தாக்கலின்போதே வீழ்த்துவது எப்படி?

அ.தி.மு.க. உள்ளாட்சி வியூகம்

பிரீமியம் ஸ்டோரி

தேர்தலில் வென்று எதிரிகளை வீழ்த்துவது பழைய கதை. தேர்தலுக்கு விண்ணப்பிக்கும்போதே வீழ்த்துவதுதான் புதுசு!

தமிழ்நாடு முழுதும் உள்ளாட்சித் தேர்தலில் நேருக்கு நேர் நின்றன அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும். மனுத் தாக்கல் செய்வதற்கான இறுதிநாளின்போது சில பி.ஜே.பி வேட்பாளர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட... சிலர் தாங்களாகவே வாபஸ் வாங்க... அ.தி.மு.க போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட... என்னதான் நடக்கிறது என்று குழம்பித்தான் போனார்கள் வாக்களிக்கத் தயாராக இருந்த அப்பாவிகள்.

வேட்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.

விண்ணப்பப் படிவத்தில் தவறு இருந்தால் அது எங்கள் தவறா?

வேட்புமனுத் தாக்கலின்போதே வீழ்த்துவது எப்படி?

குன்னூர் பி.ஜே.பி வேட்பாளர் பத்மநாதன், ''குன்னூர் நகராட்சியில் பி.ஜே.பி போட்டியிடுவது என முடிவெடுத்து, 3-ம் தேதி என்னை வேட்பாளராக அறிவிச்சாங்க. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்தோம். வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, அ.தி.மு.க வேட்பாளர் சரவணக்குமார், மாற்று வேட்பாளர் ஆனந்தகுமார் ஆகியோர் வேட்புமனுக்களை ஏத்துக்கறதா அறிவிச்சாங்க. அடுத்து என்னோட வேட்புமனுவை எடுத்துப் பாத்தாங்க. அப்போ அ.தி.மு.க-வினர் என்னோட உறுதிமொழி பத்திரத்தில் சந்தேகம் இருக்குறதா சொன்னாங்க. பத்திரத்துல 2-ம் பக்கத்தின் 6-வது பத்தியில 'அஸ் பெர் அர்பன் லா’ எனும் ஒரு வாக்கியம் இல்லை. எனவே, இந்த வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்யணும்னு சொன்னாங்க. அதிகாரிகள் உடனே தள்ளுபடி செஞ்சுட்டாங்க. இதே மாதிரி பி.ஜே.பி மாற்று வேட்பாளர், சுயேச்சை வேட்பாளர்னு ரெண்டு பேரோட வேட்பு மனுவையும் தள்ளுபடி செஞ்சாங்க. சுயேச்சை வேட்பாளர் வாபஸ் வாங்க, போட்டியின்றி ஜெயிச்சதா அறிவிச்சுட்டாங்க.

உறுதிமொழி பத்திரத்தை அரசு பதிவு பெற்ற விற்பனையகத்தில் இருந்துதான் எல்லோரும் வாங்கினோம். அதில் ஒரு தப்பு இருக்குனு சொல்லி எதிர்த்து போட்டியிட்ட எல்லோரோட வேட்பு மனுவையும் தள்ளுபடி செஞ்சிருக்காங்க. படிவத்தைப் பூர்த்தி செஞ்சதுல ஏதாவது தப்புனா பரவாயில்லை. விண்ணப்பத்திலேயே பிரச்னைனா இதுக்கு நாங்க எப்படி பொறுப்பாவோம்? அதிகாரிகள் ஆளும் கட்சி ஜெயிக்கணுங்கறதுக்காக இதையெல்லாம் செஞ்சிருக்காங்க.

குன்னூர்ல தேர்தல் நடந்தால் நிச்சயம் நாங்க ஜெயிச்சிருப்போம். ஏன்னா குன்னூர் நகராட்சியில் அந்த அளவுக்கு அ.தி.மு.க மேல மக்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க. நகராட்சியில எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்னை, ரோடு பிரச்னை, மின் விளக்கு பிரச்னைனு ஏகப்பட்ட புகார்கள். இப்போ எம்.பி-யா இருக்குற கோபாலகிருஷ்ணன், குன்னூர் நகராட்சித் தலைவரா இருந்தப்போ ஒண்ணுமே செய்யலை. இதனால குன்னூர் நகராட்சி பகுதிகள்ல நாடாளுமன்ற தேர்தல்ல 4 ஆயிரம் ஓட்டு குறைவா வாங்குச்சு அ.தி.மு.க.

இப்போ தேர்தல் நடந்திருந்தா இன்னும் அதிக ஓட்டு வித்தியாசத்துல தோத்திருக்கும். தி.மு.க-வின் வாக்குகளும் எங்களுக்குத்தான் கிடைச்சிருக்கும். இதை எல்லாம் யோசிச்சுதான் போட்டியிட்ட எல்லோருடைய வேட்பு மனுவையும் தள்ளுபடி செஞ்சுட்டாங்க.

தேர்தல்ல போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த அன்னைக்கே என்னை வாபஸ் வாங்கவைக்க முயற்சி செஞ்சாங்க. மூன்றாவது நபர் மூலமா என்கிட்ட பேச முயற்சி பண்ணாங்க. ஆனா, அதற்கு எல்லாம் நான் ஒப்புக்கலை'' என்றார்.

மிரட்டியது அ.தி.மு.க அல்ல; பி.ஜே.பி-தான்!

வேட்புமனுத் தாக்கலின்போதே வீழ்த்துவது எப்படி?

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க-வை எதிர்த்து பி.ஜே.பி மட்டுமே களத்தில் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் பி.ஜே.பி சார்பில் போடியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த வெள்ளையம்மாள் தனது மனுவை வாபஸ் பெற்றார். ஆளும் கட்சியின் மிரட்டல் காரணமாகவே அவர் தனது மனுவை வாபஸ் பெற்றதாக, அக் கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்திரராஜன் பரபரப்பைக் கூட்டினார். ஆனால், மனுவை வாபஸ் பெற்ற சூட்டோடு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு மீடியா மட்டும் அல்லாமல் பி.ஜே.பி-யினரிடம் இருந்தும் விலகி இருக்கும் வெள்ளையம்மாளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

அவரது சார்பாக வழக்கறிஞர் கே.வி.மகாராஜன் பேசினார். ''வெள்ளையம்மாளின் கணவர் கணேச பெருமாள்ராஜா பிளாஸ்டிக் குடம், பக்கெட் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரது கம்பெனிக்கு நான் சட்ட ஆலோசகர் என்கிற முறையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எனக்கு அவருடன் நல்ல நட்பு இருப்பதால் அவரது சார்பாக சில கருத்துக்களைத் தெரிவிக்கச் சொல்லியிருக்கிறார். கணேச பெருமாள்ராஜா, 1991 முதல் 2001 வரை அ.தி.மு.க-வில் இருந்தவர். எம்.ஜி.ஆர் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிரமான விசுவாசி.  

கடந்த காலத்தில் முன்னாள் அ.தி.மு.க எம்.பி-யான முருகேசனுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்ததுடன், அ.தி.மு.க-வின் சார்பாக நடந்த அனைத்து கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங்கெடுத்தவர். கடந்த சில வருடங்களாகத் தேசிய கட்சியான பி.ஜே.பி-யில் இருந்தபோதிலும், மாநில அளவில் அ.தி.மு.க-வின் அனுதாபியாகவே இருந்து வந்தார். அவரது மனைவி வெள்ளையம்மாளை தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம் கிடையாது. அவர்களாகவே அவரது பெயரை அறிவித்துவிட்டார்கள்.

நிர்பந்தத்தின் பேரில் தேர்தலில் போட்டியிட முன் வந்த சூழலில், அவரை குமரி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்திக்க வைத்துவிட்டு தொடர்ந்து நிர்பந்தம் செய்தனர். வேட்பாளராக அறிவித்த நிமிடம் முதல் ஒரு அடிமையைப் போல அவர்கள் நடத்தினார்கள். இதனால் மனதளவில் சோர்வடைந்த கணேச பெருமாள்ராஜாவும் அவரது மனைவியும் குடும்பத்தினருடன் கலந்து பேசிய பிறகு தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து மாறினார்கள்.

உண்மை இப்படி இருக்க, அ.தி.மு.க-வினர் மிரட்டல் விடுத்தது போலவும் பணம் வாங்கியது போலவும் அவர் மீது அவதூறுகளை பி.ஜே.பி-யினர் பரப்பி வருகிறார்கள். உண்மையில் அவர்களை மிரட்டியதே பி.ஜே.பி-யினர்தான்'' என்று முடித்துக் கொண்டார்.

நியமிச்சுட்டுப் போகலாமே...

எதுக்கு தேர்தல் நடத்தணும்?

வேட்புமனுத் தாக்கலின்போதே வீழ்த்துவது எப்படி?

கொடைக்கானல் நகரமன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஸ்ரீதர் என்பவரும் காங்கிரஸ் சார்பில் கொடைக்கானல் காங்கிரஸ் கமிட்டி தலைவரான அப்துல்கனிராஜாவும் சில சுயேச்சைகளும் போட்டியிட்டனர். கடந்த 5-ம் தேதி மனுக்கள் பரிசீலனையின்போது, அ.தி.மு.க வேட்பாளர் மற்றும் சில சுயேச்சைகளின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சரியாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அப்துல்கனிராஜாவிடம் பேசினோம். ''காமராஜர் காலத்துல இருந்து காங்கிரஸ்ல இருக்கிற பாரம்பர்யமான குடும்பத்தைச் சேர்ந்தவன். நாம வாழுறது ஜனநாயக நாடா..? ன்னு சந்தேகமா இருக்கு. கடந்த உள்ளாட்சி தேர்தல்ல சேர்மன் பதவிக்குப் போட்டி போட்டு குறைஞ்ச வாக்குல தோற்றேன். இந்த முறை வேட்புமனு தாக்கல் செய்றதுக்கு மொத நாளே மனுவை ஒன்னுக்கு ரெண்டு தரம் நல்லா செக் பண்ணிட்டுதான் மனு தாக்கல் செஞ்சோம். அ.தி.மு.க-வைத் தவிர மற்ற அனைத்து கட்சிகள், கொடைக்கானல்ல இருக்கற சிறுபான்மையினர் ஆதரவோட பலமான வேட்பாளரா இருந்த என்னை, தேர்தல் நடந்தா ஜெயிச்சிடுவேன்னு தெரிஞ்சதும் திட்டம் போட்டு காலி பண்ணிட்டாங்க. அவங்க ஆளுங்க சிலரையே சுயேச்சையா நிக்க வெச்சு, மனுக்களை வாபஸ் வாங்க வெச்சுகிட்டாங்க. மனுபரிசீலனை அன்னிக்கு 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-காரங்க குவிஞ்சிருந்தாங்க. டி.எஸ்.பி. தலைமையில போலீஸும் அதிகமா இருந்தாங்க. எங்க டம்மி வேட்பாளர் மனு, என்னோட மனு ரெண்டையும் முறையா பூர்த்தி செய்யலன்னு சொல்லி தள்ளுபடி செய்றதா சொன்னாங்க. 'எதை பூர்த்தி செய்யலைன்னு காட்டுங்க’ன்னு கேட்டதுக்கு, 'அதெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. கோர்ட்ல பாத்துக்கங்க''ன்னு சொல்லி வெளியே தள்ளி விட்டுட்டாங்க. அஞ்சு வருஷம் நகராட்சி கவுன்சிலரா இருந்திருக்கேன். போன முறை நகரமன்றத் தலைவருக்குப் போட்டியிட்டிருக்கேன். 24 வார்டுக்கும் கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கேன். எனக்கு மனுவை பூர்த்திசெய்யத் தெரியலைன்னு சொல்றாங்க. நியாயமா சொல்லுங்க? தேர்தல் தொடர்பா வழக்குப் போட முடியாதபடி தடை ஆணை வாங்கியிருக்காங்க. இதுக்கான பதிவுத் தபாலை பரிசீலனை நடந்த அன்னிக்கு மதியம் 12.40-க்கு புக் பண்ணியிருக்காங்க. இதிலிருந்து இது மிக திட்டமிட்ட வேலைன்னு தெளிவா தெரியுது. இப்படி அடாவடி செஞ்சு பதவியைப் பிடிக்க எதுக்கு தேர்தல் நடத்தணும்? எல்லா பதவிகளையும் நியமனம் செஞ்சிட்டுப் போக வேண்டியதுதானே?'' என்றார் வேதனையுடன்.

உள்ளே போகவே விடவில்லை!

வேட்புமனுத் தாக்கலின்போதே வீழ்த்துவது எப்படி?

புதுக்கோட்டை நகரமன்றத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடந்த அத்தனை விவகாரங்களும் அ.தி.மு.க தலைமையின் சிக்னல்படிதான் நடந்திருக்கிறது என்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட பி.ஜே.பி-யினர்.

இதுகுறித்து பி.ஜே.பி வேட்பாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பழ.செல்வத்திடம் பேசினோம். ''வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளான 4-ம் தேதி புதுக்கோட்டை நகரமன்றத் தலைவருக்கான வேட்பாளராய் தலைமை என்னை அறிவித்தது. உடனே எங்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவரான ஆறுமுகத்தை அனுப்பி வேட்புமனு வாங்கச்சொன்னோம். காலை பத்தே கால் மணிக்கு நகரமன்ற அலுவலகத்துக்குப் போகும்போது தேர்தல் அலுவலர் கலெக்டர் ஆபீஸுக்குப் போயிருக்கிறார். நீங்கள் பதினோரு மணிக்கு வாங்க என்று திருப்பிவிட்டுவிட்டார்கள். அவரும் 12 மணி வரைக்கும் போராடிப் பார்த்துவிட்டு எங்களுக்குத் தகவல் சொன்னார். நான், எங்க மாவட்டச் செயலாளர் மற்ற நிர்வாகிகள் எல்லாரும் உடனே அங்கே போனோம். ஆளும் கட்சி ஆட்கள்கூட்டமா நாமினேஷன் தாக்கல் பண்ணப்போகிற மாதிரி வரிசையில நின்றிருந்தார்கள். ஆளுக்கொரு வெள்ளைப் பேப்பரைக் கையில் வைத்திருந்தார்கள்.

இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தது காவல் துறை. மூன்று மணியானதும் ஒட்டு மொத்த கூட்டமும் எங்களைக் குண்டுகட்டா தூக்கி வந்து வெளியில் போட்டுவிட்டு, கேட்டை இழுத்து மூடிவிட்டது. அப்புறம் அவர்களே அ.தி.மு.க வெற்றி என்று கூச்சல் போட்டார்கள். தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்திருக்க வேண்டியதே இல்லை. இன்னார்தான் தலைவர் என்று சிம்பிளாக அறித்துவிடலாம்'' என்றார் கொதிப்போடு.

தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுப்பதுதான் தேர்தல்... இது?

- ஆண்டனிராஜ், ஆர்.குமரேசன், வீ.மாணிக்கவாசகம், ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய், எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு