Published:Updated:

சதாசிவம் செய்தது சரியா?

வழக்கறிஞர் ந.ஜோதி

பிரீமியம் ஸ்டோரி

உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதியாக இருந்த மெகர் சந்த் மகாஜன் டார்ஜிலிங் பகுதிக்குச் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார். தவறை ஏற்று அபராதம்

சதாசிவம் செய்தது சரியா?

கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார். ''உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ''மகாஜன்'' என்றார். ''என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்ட போது, ''சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார். உடனே அந்த மாஜிஸ்திரேட் ''மை லார்டு'' என பதறி எழுந்து மகாஜனை வணங்கினார். ''உட்காருங்கள். உங்கள் டூட்டியை செய்யுங்கள்'' என்றார் மகாஜன். ''முதல் முறையாக தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. அதனால் உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட். மகாஜன் வெளியில் வந்தார்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.சத்தியதேவ் ஒருநாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை. அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் சத்தியதேவ், தனது மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்ப வந்துவிட்டார். அவருக்கு தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை. தலைமை நீதிபதி ஆறு வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால் 'பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம். அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆறு வாரம் விடுமுறை எடுத்தார். அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!

குரு பிரசன்ன சிங். மத்திய பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர். ''பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. அதனால் ஓய்வு பெறுகிறேன்'' என சொல்லி கிளம்பிவிட்டார். குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்னரை ஆண்டு இருந்து, பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனச்சாட்சிக்கு பயந்து நேர்மையோடு நடந்து கொண்ட புண்ணியவான்!

சதாசிவம் செய்தது சரியா?

நீதிபதி கே.பி.சுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிவப்பு விளக்கைத் தாண்டி வந்துவிட்டது. அந்த காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள். இவரை பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ''அபராதம் கட்ட தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும் பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுதான் போனார் நீதிபதி பழனிசாமி.  

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுப்பிரமணிய ஐயர். அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார் சுப்பிரமணிய ஐயர். இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டு படிக்க முயன்றும் முடியவில்லை.

பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார். என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்கு போன சுப்பிரமணிய ஐயர், ஆளுநருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார். 'கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ என பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம்  என்ன தெரியுமா? ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி. அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். ''என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ''இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று வழக்கறிஞர்கள் சொன்னார்கள். உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ''இதோ வருகிறேன்'' என சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்காக ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.

- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறையப் பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள். அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஆனால் இப்போது,  உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்து கேரள கவர்னராக ஆகியிருக்கும்  சதாசிவம் மீது எழுந்துள்ள விமர்சனம் விதிவிலக்கானது. அவர் மீது எழுந்த  விமர்சனங்கள்போல வேறு யாருக்கும் எழுந்ததில்லை!

நீதித்துறையில் இருப்பவர்கள் அர்ப்பணிப்போடு ரிஷி மாதிரி தவ வாழ்க்கை வாழ வேண்டும். தன்னை வருத்திக்கொண்டு மெழுகுவத்தி போல பணியாற்றுபவர்கள் நீதிபதிகள். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பணியாற்றுபவர்கள் நீதிபதிகள் அல்ல.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சுப்பாராவ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். அஸ்ஸாம் நீதிபதி பகருல் இஸ்லாமும் ஒரிஸ்ஸா நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவும் ராஜ்யசபா எம்.பி. ஆனார்கள். மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா, இந்திரா அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார். இவையெல்லாம் அவர்களின் ஓய்வுக்கு மிகமிகப் பின்னால் நடைபெற்றவை. இவர்கள் அரசியலில் கால்பதித்தபோது அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட தீர்ப்புகளை வைத்து விமர்சனங்கள் எழுந்ததில்லை. சதாசிவம் மீது அமித் ஷா வழக்கு விமர்சனமாக எழுப்பப்படுகிறது. நீதித்துறையின் மாண்பு நேர்மையும் இப்போது களங்கப்பட்டு நிற்கிறது.

ஆட்சியைக் கவிழ்க்கக் கூடிய வல்லமை படைத்தவர்களுக்குத்தான் கவர்னர் பதவி வழங்கப்படுவது இந்தியாவின் சாபக்கேடு. அப்படிப்பட்ட அரசியல் சார்புடையவர்கள் வகிக்கக் கூடிய பதவிக்கு சதாசிவம் ஏன் போனார்? சட்டம் சார்ந்த பதவியில் ஏன் அவர் அமர விரும்பவில்லை? கவர்னர் வேலைக்கு சட்டம் தேவையா? அரசியல் நிபுணத்துவம் தேவையா? என்றால் அரசியல்தான் தேவை. சட்டம் படித்த சதாசிவம் கவர்னர் நாற்காலியில் அமர்ந்து 'அரசியல்’ செய்வாரா? உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் இம்ப்பீச் கொண்டு வந்து மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே நீக்க முடியும். ஆனால் உள்துறைச் செயலாளர் போன் செய்தாலே கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டியதுதான். ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவியில் இருந்துவிட்டு கவர்னர் பதவியில் போய் சதாசிவம் ஏன் அமர்ந்தார்? இப்படிப்பட்ட இக்கட்டில் தன்னை ஏன் ஈடுபடுத்திக்கொண்டார் என்கிற கேள்விக்கு சதாசிவம் பதில் சொல்லட்டும்.

நான் முன்பு சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வரிசை தொடருவதுதான் நீதி தேவதைக்கு மரியாதை. கேரள நடப்புகள் அல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு