Published:Updated:

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

Published:Updated:

பெரும்பாலும் பெங்களூரிலேயே முகாமிட்டு உள்ளார் கழுகார். அங்கிருந்து நேராக நம்முடைய அலுவலகத்​துக்கு வந்தார்.

''சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 20-ம் தேதி வரப்போகிறது. அதற்குத் தடை ஏற்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் காலாவதி ஆகிவிட்டன. 16-ம் தேதிக்கும் 19-ம் தேதிக்கும் இடையில் ஏதாவது புதிய மனு போடப்போகிறார்களா எனத் தெரியவில்லை. 15-ம் தேதி காலை ஜெயலலிதா தரப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவைப் பார்க்கும்போது 20-ம் தேதி அன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் நீதிமன்றத்தில் நிச்சயம் ஆஜராவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது!''

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்ன மனு அது?''

''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வந்த இடம் சிட்டி சிவில் கோர்ட். இதனைப் பாதுகாப்பற்ற இடமாக ஜெயலலிதா தரப்பு நினைக்கிறது. பெங்களூரு நகரத்தின் மையப்பகுதியில் இது இருப்பதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இந்த இடத்துக்கு ஜெயலலிதா வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. மாற்று இடம் சம்பந்தமாக கர்நாடக அரசும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களும் முதலில் எந்த யோசனையும் செய்யவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, 'நான் அனைவரையும் ஒரே மாதிரிதான் பார்க்கக் கூடியவன். ஜெயலலிதா தரப்போ, அரசு தரப்போ பாதுகாப்பு கருதி வேறு இடத்துக்கு நீதிமன்ற வளாகத்தை மாற்றினால் அங்கு வந்து என் தீர்ப்பை அறிவிப்பேன். நானாக அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அரசிடம் கேட்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15-ம் தேதி ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம், ஒரு மனுவை தாக்கல் செய்தார். 'என் மனுதாரர் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். அவருக்குப் பாதுகாப்பு வேண்டும். இந்த நீதிமன்ற வளாகத்தில் 96 நீதிமன்றங்கள் இருக்கிறது. பல்லாயிரம் பேர் வருகிறார்கள், போகிறார்கள். இங்கு அவருக்குப் பாதுகாப்பாக இருக்காது. அதனால் ஏற்கெனவே உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 2011-ல் தன்னிலை விளக்கம் கொடுக்க பெங்களூரு வந்தபோது பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனில்தான் நீதிமன்றம் நடைபெற்றது. அதேபோல பாதுகாப்பு கருதி இந்த முறையும் அங்கே நீதிமன்றத்தை மாற்றி தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று மனுவைக் கொடுத்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி குன்ஹா, அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வராததால் விசாரணைய 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.''

''ஓஹோ!''

''அரசு தரப்பு விளக்கத்தைக் கேட்ட பிறகு நீதிபதி முடிவை எடுப்பார். இந்த மனு பதிவாளருக்கு சென்று, அவர் உயர் நீதிமன்றப் பதிவாளரின் அனுமதி பெற்று, கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள்.''

''பாதுகாப்புக் குறைபாடு உள்ளதா அந்த நீதிமன்றம்?''

''வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றம் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இது பெங்களூரு சிட்டியின் மையப்பகுதியான மெஜஸ்டிக் அருகே காந்தி நகரில் இருக்கிறது. இந்த கோர்ட் வளாகத்துக்குள் சிட்டி சிவில் நீதிமன்றங்கள் 53, விரைவு நீதிமன்றங்கள் 15-ம், சிறு நீதிமன்றங்கள் 19-ம், பெங்களூரு சிட்டி புறநகர் நீதிமன்றங்கள் 9 என மொத்தம் 96 நீதிமன்றங்கள் இருக்கிறது. 7 அடுக்கு மாடிகளைக் கொண்டது. இதில் 1500-க்கும் மேற்பட்ட நீதிமன்ற ஊழியர்களும், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வழக்கறிஞர்களும் இருக்கின்றனர். ஒரு நாளில் குறைந்தது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கிறார்கள். இதற்கு இரண்டே நுழைவாயில்கள்தான் இருக்கிறது. இந்த நீதிமன்ற வளாகத்தின் முதல் மாடியில் 37-வது நீதிமன்ற அறையில்தான் தனி நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்குள் முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு ஊழல் வழக்குக்காக 2012-ம் ஆண்டு வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரை போட்டோ எடுத்தார்கள். அதை அவரது வழக்கறிஞர்கள் தடுக்க, பத்திரிகையாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்குமான கலவரம் மூண்டது. அதைத் தடுக்க வந்த காவல் துறையினரையும் தாக்க மும்முனைக் கலவரமாக வெடித்தது. இதில் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டது. 23 நாட்கள் நீதிமன்றமே நடைபெறவில்லை. அன்றிலிருந்து இந்த நீதிமன்ற வளாகத்துக்குள் எந்தப் பத்திரிகையாளர்களும் வருவதில்லை. இந்தக் கலவரச் சம்பவத்தை சி.பி.ஐ விசாரித்து வருகிறார்கள். இவ்வளவு ராசியான இடம் அது!''

''அப்படியா?''

''குறிப்பிட்ட இடம்தான் வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு கேட்டுள்ளது. இவ்வழக்கில் 313 விதிப்படி ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுக்க பெங்களூரு வந்தபோது பாதுகாப்புக் கருதி 3 இடங்களை தேர்வு செய்தார்கள். நாகராஜபுரத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள பெங்களூரு மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்திபவன் அரங்கம், ஆனந்தபுரத்தில் உள்ள குடும்ப நீதிமன்றம், எலெக்ட்ரானிக் சிட்டி ஏரியாவில் உள்ள கூட்டுறவு சங்க கோர்ட் ஆகிய மூன்றும் அப்போது பரிசீலனை செய்யப்பட்டது. இதில் பரப்பன அக்ரஹாரம் தேர்வு செய்யப்பட்டது. இதில் பரப்பன அக்ரஹாரம் இடத்தைத்தான் கேட்கிறது ஜெயலலிதா தரப்பு. மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஹெச்.ஏ.எல் விமான நிலையம் பெங்களூரு மெஜஸ்டிக்கில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சிறப்பு விமானத்தில் வந்து இங்குதான் ஜெயலலிதா இறங்க வேண்டும். ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து வன்னார்பேட்டை, நீலச்சந்திரா, ஆஸின் டவுன் கடந்து 23 கிலோ மீட்டரில் உள்ளது பரப்பன அக்ரஹாரம். அவ்வளவு தூரம் அவர் காரில் பயணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும் பரவாயில்லை, காந்தி நகர் கோர்ட் மட்டும் வேண்டாம் என்பதில் ஜெயலலிதா தரப்பு உறுதியாக இருக்கிறது.''

''என்ன காரணம்?''

''காந்தி நகரில் தற்போது செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோதுதான் பல்வேறு பிரச்னைகள் வந்தது. தீர்ப்புக்கான நாளைக் குறித்ததும் அந்த நீதிமன்றத்தில்தான்! அது மட்டுமல்ல... 'இந்த ஹாலின் வாசல் வடக்கு நோக்கியிருக்கிறது. நீதிபதி மேற்கு நோக்கி உட்கார்ந்திருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர் கிழக்கு நோக்கி நிற்க வேண்டியிருக்கும். கிழக்கு நோக்கி நிற்பது அவருக்கு ராசியானது அல்ல... வடக்குதான் உகந்தது!’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால் காந்தி நகரை தவிர்க்க நினைக்கிறார்கள். அத்துடன் இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். காந்தி நகர் கோர்ட் ஆக இருக்கும்பட்சத்தில் மீடியா எளிதாக அவரை நெருங்கிவிடும். படியில் ஏறும்போதும், இறங்கும்போதும் எளிதாக படம் எடுக்கலாம். பரப்பன அக்ரஹாரம் என்றால் மீடியா கண்ணில் படாமல் கோர்ட்டுக்குள் போகலாம். வரலாம் என்பது அவர்களின் கணக்கு!''

''20-ம் தேதி என்ன நடக்கும்?''

''குற்றம்சாட்டப்பட்டவர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆஜரானதும் நீதிபதி முதலில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா... நிரபராதியா? என்பதை மட்டும் அறிவிப்பார். நிரபராதி என்கின்ற பட்சத்தில் தீர்ப்பு அறிவித்ததும் எழுத்துப்பூர்வமான ஷரத்துகளை வாங்கிக்கொண்டு கிளம்பிவிடலாம். மாறுபட்டதாக இருந்தால் தீர்ப்பின் இதர விவரங்களை மறுநாளோ அல்லது வேறு நாளோ தள்ளிவைப்பார் நீதிபதி. இந்த வழக்கைப் பொறுத்தவரை பாதுகாப்புக் காரணத்தையொட்டி காலையில் வழக்கின் தீர்ப்பையும், தேவைப்பட்டால் மதியம் இதர விஷயங்களையும் சொல்லிவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.''

''ம்!''

''கடந்த இரண்டு வாரங்களாக கோயில் கோயிலாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் சசிகலா. திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதிக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கு அமர்ந்து வழிபட்டார். ஜெயலலிதாவுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டபோது சசிகலா அடிக்கடி சென்று வந்த இடம் அதுதான். 'மீண்டும் எல்லாம் சுபமாக நடக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் இங்கு சென்றாராம். மங்களூர் மஞ்சுநாத சுவாமி கோயிலிலும் சசிகலாவுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினரான மகாதேவனும் பூஜைகள் நடத்தி உள்ளார். இப்படி பக்திப் பரவசம் பொங்குகிறது. சசிகலா உறவினர்கள் அனைவரையும் அழைத்து, 'அடக்கமாக இருக்க’ வலியுறுத்தப்பட்டுள்ளதாம். அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றனவாம்!'' என்ற கழுகார் உள்ளாட்சி இடைத்தேர்தல் மேட்டருக்கு வந்தார்!

''கிட்டத்தட்ட எம்.எல்.ஏ இடைத்தேர்தலுக்கான பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல். 20 அமைச்சர்கள் மாநகரம் எங்கும் தேர்தல் பணிகளை பம்பரமாக சுழன்று கவனிக்க... மாலை நேரமானால் 'உங்கள் பொன்னான வாக்குகளை எல்லாம்...’ என அ.தி.மு.க-வின் தலைமைக் கழக பேச்சாளர்கள், நடிகர்கள் மைக் பிடிக்கத் தொடங்கிவிடுகின்றனர். வையாபுரி தொடங்கி ராமராஜன் வரை எல்லோரும் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்து, பிரசார பீரங்கியாக இருந்த நாஞ்சில் சம்பத்தை மட்டும் காணவில்லை. அதேபோல், கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரும், தற்போதைய எம்.எல்.ஏ ஒருவரும் தேர்தல் பிரசாரத்தில் காணவில்லை. 'வரவேண்டாம்’ என்று தலைமை தடை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள்!''

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

''பி.ஜே.பி-க்கு எதிராக கர்ஜிக்க ஆரம்பித்துவிட்டாரே ஜெயலலிதா?''

''ஆமாம்! சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமான தீர்ப்புக்குத் தேதி அறிவிக்கப்படும் அதேநாள், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அ.தி.மு.க-வுக்கு எதிராக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பி.ஜே.பி வரிந்துகட்டிக் கொண்டிருக்கும் அதேவேளையில், 'கூட்டணியில் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க எங்கள் நட்பு கட்சி’ என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி கொடுக்கிறார். அதேபோல், 'முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு இருந்தபோது’ என்று கவனமாக ஜெயலலிதா சில நாட்கள் வரைக்கும் சொல்லிவந்தார். ஆனால், இப்போது 'பி.ஜே.பி-யோடு போட்டிபோட பயந்து வேட்பாளர்களை விலைபேசுகிறார்கள். விலைபேசுபவர்கள் மக்களால் வீழ்த்தப்படுவார்கள்’  என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த 12-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசி கொந்தளிக்க வைத்தார். 14-ம் தேதி பிரசாரத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, 'பி.ஜே.பி இரட்டை வேடம் போடுகிறது’ என்று  தூத்துக்குடியில் பேசி கனலைக் கூட்டினார்.''

''மத்திய மாநில அரசை நடத்தும் இரண்டு கட்சிகளும் நேருக்கு நேராக மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டதே?''

''பலரையும் போட்டியில் இருந்து விலக வைத்து, வேட்புமனுவைச் செல்லாதது ஆக்கிவிட்டதாக ஆளும் கட்சி மீது கொந்தளிக்கிறது பி.ஜே.பி நெல்லையில் போட்டியிட்ட பி.ஜே.பி வேட்பாளர் வெள்ளையம்மாள் போட்டியிலிருந்து விலகியதோடு மட்டுமில்லாமல் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் சேர்ந்துவிட்டார். இதுவும் பி.ஜே.பி-யை கோபப்பட வைத்தது. மேலும் தேர்தல் வேலை பார்க்கும் தங்கள் கட்சிக்காரர்களை அ.தி.மு.க மந்திரிகள் அழைத்து மனமாற்றம் செய்து வருவதாகவும் கமலாலயத்துக்கு தகவல் வந்துள்ளது. இதன் உச்சமாக பி.ஜே.பி-யை வெளிப்படையாக திட்டிப் பேச ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா!''

''தூத்துக்குடியில் தொடங்கிவிட்டாரே?''

''வழக்கத்துக்கு மாறாக ஒரு மாநகரப் பகுதியான தூத்துக்குடியில் மட்டும் மூன்று இடத்தில் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. பொதுவானவர்கள், கிறிஸ்தவர்கள், மீனவர்கள் என பல தரப்பினரையும் சந்திப்பதுபோல் அமைந்திருந்தது அந்தப் பிரசாரம். ஏற்கெனவே தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளான, 'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆட்டோ நகரம்’ போன்றவைகள் பயனுக்கு வராத நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள், செயல்பாட்டுக்கு வரவிருக்கும் சில திட்டங்கள் குறித்தும் பேசினார். அப்போது, 'தமிழக மக்கள், மீனவ மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க மட்டும்தான். மீனவர்கள் பிரச்னையில் பி.ஜே.பி இரட்டை வேடம் போடுகிறது’ என ஆவேசத்தைக் கொட்டினார். அ.தி.மு.க-வுக்கும் பி.ஜே.பி-க்குமான மோதல் இனி நாளடைவில் உச்சத்தை அடையும் என்கிறார்கள்!'' என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், தி.மு.க பற்றி மூன்று தகவல்களை உதிர்த்துவிட்டுப் போனார்.

''விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி_ புஷ்பராஜ் மோதல் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் இருந்துவிட்டார் பொன்முடி. புஷ்பராஜ் ஏராளமானவர்களை அழைத்துக் கொண்டு விழுப்புரம் மாவட்டக் கழக அலுவலகத்தில் இருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டார். 'புஷ்பராஜ் விழுப்புரம் மாவட்டத்தை ஆக்கிரமித்துவிட்டார்’ என்று இப்போதே ஒரு குரூப் சொல்ல ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். சென்னையில் இருந்த பொன்முடி தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து திட்டித் தீர்த்துவிட்டாராம்!’

அடுத்த தகவல்.... சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் 'ரசிகன்’ என்ற தலைப்பில் 'கலைஞருக்காக ஒரு பயணம்’ என்ற தொடர் 20 வாரங்கள் ஒளிபரப்பானது. சில நாட்களுக்கு முன், அந்தத் தொடரின் இயக்குநரை அழைத்து கருணாநிதி பேசியிருக்கிறார். மீண்டும் அந்தத் தொடரை கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்ப உத்தரவு போட்டார். கடந்த 14-ம் தேதியில் இருந்து மீண்டும் 'கலைஞருக்காக ஒரு பயணம்’ ஆரம்பம் ஆகிவிட்டது. 'நான் முன்னைக்காட்டிலும் வலிமையுடன் இருக்கிறேன்’ என்று சொன்ன கருணாநிதி அதனைக் காட்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்’ என்று சொல்கிறார்கள்!''

''மூன்றாவது தகவல் என்ன?''

''கருணாநிதியின் ஃபேஸ்புக் இணைய​தளத்தை 2 லடசம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதில் அவரைத் தரக்குறைவாக விமர்சனம் செய்து சிலர் போடும் விமர்சனங்களை அப்படியே விட்டுவிடுகிறார்களாம். அதனைக் கண்காணிக்கும் இரண்டு பேரிடம் இது சம்பந்தமாக தி.மு.க-வினர் சிலர் சொன்ன பிறகும் அது தடுக்கப்படவில்லையாம். 'தலைவருக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கலாம். அதற்காக இதையெல்லாமா தாங்குவது?’ என்று சொல்லி வருத்தப்படுகிறார்கள்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!

படம்: கே.குணசீலன்

'யாரும் நம்ப வேண்டாம்!’

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

தி.மு.க-வின் முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின், ''தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், வைகோ ஆகியோர் வெளியேறியபோது தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க தலைநிமிர்ந்து நின்றது. என்னைப் பற்றி கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, 'உழைப்பு... உழைப்பு... உழைப்பு!’ என்று சொன்னார். இதைவிட எனக்கு என்ன பாராட்டு இருக்க முடியும். எனக்கும் தலைவருக்கும் இடையே பிரச்னை இருப்பதாக சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். 2016-ல் நம் தலைவர் கலைஞர் தலைமையில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்!'' என்று பேச... கருணாநிதி தலையை உயர்த்தி ஸ்டாலினைப் பார்த்தார்.

அமைச்சர்களை மிஞ்சிய அர்னால்டு!

மிஸ்டர் கழுகு: காந்தி நகர் to பரப்பன அக்ரஹாரா!

ஷங்கரின் 'ஐ’ பட பாடல் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்தார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்சுநீகர். முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அர்னால்டு தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. 15-ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக கோவை செல்வது ஜெயலலிதாவின் திட்டம். இருந்தாலும், அர்னால்டுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டது. கோட்டையில் அர்னால்டு வந்து காத்திருக்க... ஜெயலலிதாவும் அங்கே வந்து சேர்ந்தார். அரை மணி நேரம் அவருடன் பேசியிருக்கிறார் முதல்வர். ''தமிழ்நாடு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அதற்காக முதல்வரைப் பாராட்டினேன். கல்விக்கும் தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்கிறார் ஜெயலலிதா!'' என்று வெளியில் வந்த அர்னால்டு சொல்லிவிட்டுக் கிளம்பினார். 'அம்மாவைப் புகழ்வதில் நம்மையே மிஞ்சிட்டாரு அர்னால்டு!’ என்று அமைச்சர்கள் சிலரே கமென்ட் அடித்தார்களாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism