Published:Updated:

'பார்த்து கவனமாக இருங்க... கடத்திடப் போறாங்க!'

பதறிய சகாயம் மனைவி

'பார்த்து கவனமாக இருங்க... கடத்திடப் போறாங்க!'

பதறிய சகாயம் மனைவி

Published:Updated:

'ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை அடிக்கடி இடம் மாற்றுவது ஏன்?’ என உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பும் அளவுக்கு, லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தியதாலேயே பலமுறை இடம் மாற்றம் செய்யப்பட்டவர் சகாயம். கடந்த 23 ஆண்டுகளில் அரசுப் பணியில் 24 டிரான்ஸ்ஃபர்களைச் சந்தித்து​விட்டார் சகாயம்.

கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநராக இருந்த சகாயம், கடந்த வாரம் இந்திய மருத்துவம் மற்றும்

'பார்த்து கவனமாக இருங்க... கடத்திடப் போறாங்க!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹோமியோபதி கமிஷனராக மாற்றப்பட்டார். அங்கு சென்று பதவியேற்பதற்குள், அவர் 'அறிவியல் நகர’த்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழ்நிலையில்தான் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல்கொள்ளை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்தப் பரபரப்பான சூழலில் திருப்பூர் மாவட்டம் நத்தக்கடையூரில் உள்ள இ.பி.இ.டி கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் மாணவர்களிடம் பேசுவதற்காக வந்திருந்தார் சகாயம். மாணவர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மைக் பிடித்தார் சகாயம். 'இன்றைக்கு நான் இந்தக் கூட்டத்தில் கலந்து​கொள்ள முடியுமா? என்ற ஐயம் எனக்கு இருந்தது. செய்தித்தாள்களைப் பார்த்தவர்களுக்கு எல்லாம் தெரியும். தமிழகம் முழுவதும் இருக்கிற கனிமவளச் சுரங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறிக்கையை விசாரித்து அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த நேரத்தில்கூட தொலைக்காட்சிகளில் அது பற்றிய விவாதம்தான் நடந்து கொண்டிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்பு என் மனைவி என்னை அழைத்தார். 'எங்கு இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டார். 'நான் ஈரோடு அருகே இருக்கிறேன்’ என்றேன். 'பார்த்து கவனமாக இருங்கள். யாராவது உங்களைக் கடத்திக்கொண்டு போய்விடப் போகிறார்கள்’ என மனைவி சொன்னார். என் மனைவியும், என்னைச் சார்ந்தவர்களும் பயப்படும் அளவுக்கு கடுமையான பணியை நிகழ்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சமூகத்தை வடிவமைக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. டாக்டர்.அப்துல் கலாம் தன் வாழ்க்கையில் பிரதமர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று பலரைச் சந்தித்திருக்கிறார். பலருக்கு ஆலோசகர்களாகவும் இருந்திருக்​கிறார். ஆனால், அவர் தன் மனம் கவர்ந்த கதாநாயகன் என்று குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? ராமேஸ்வரத்தில் தனக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்த சிவசுப்ரமணிய ஐயர் என்பவரைத்தான். அந்த அளவுக்கு ஆசிரியர் பணி என்பது சக்தி வாய்ந்தது.

இன்று நான் பெரும்பாலான வீடுகளில் பார்க்கிறேன்... அம்மா, அப்பா, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி என்பதெல்லாம் காணாமல் போய்விட்டது. குழந்தைகள் மம்மி, டாடி, ஆன்டி, அங்கிள் என்றுதான் அழைக்கிறார்கள். நம் நாட்டில் தலைவர்களோ, கவிஞர்களோ தமிழை வளர்ப்பதில்லை. 'உலகின் மூத்த மொழி’ என்று தேவநேயப் பாவாணரால் அழைக்கப்பட்ட எம் தமிழ் மொழியை வளர்ப்பது அரசு பள்ளி மாணவர்கள்தான். எங்களின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளி மாணவர்கள்தான்!

காந்தி தன்னுடைய சத்திய சோதனையில் எழுதியிருக்கும் ஒரு தகவலை இந்த நேரத்தில் நான் நினைவுகூற விரும்புகிறேன். காந்தி ஆரம்பப் பள்ளியில் மற்ற மாணவர்களோடு தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறார். அப்போது ஒரு கேள்விக்கான பதிலை தவறாக எழுதுகிறார். தேர்வை கண்காணித்த ஆசிரியர் இதை கவனிக்கிறார். அவர் காந்தியிடம், 'உன் பக்கத்துல இருக்கிறவன் சரியா எழுதியிருக்கான். அவனைப் பார்த்து எழுது. இது தவறான பதில்’ என்று சொல்கிறார். ஆனால் காந்தி அதைக் கேட்காமல் தவறு என்று தெரிந்தும் அதே பதிலை எழுதுகிறார். இது அவரது நேர்மைக்கான உதாரணம்.

நான் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்பது என்னுடைய இலக்கு. நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது என் லட்சியம். இலக்கு எனக்கானது. லட்சியம் இந்தச் சமூகத்துக்கானது. எனவே, எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் என் நேர்மை மட்டும் எப்போதும் மாறாது. கடந்த 23 ஆண்டுகளில் 24 முறை மாற்றப்பட்டுள்ளேன். இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றுங்கள். ஆனால், என்னுடைய நேர்மை மட்டும் என்றுமே மாறாதது. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கு உங்களுக்கானதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியம் சமூகத்துக்கான லட்சியமாக இருக்க வேண்டும். மாணவர்கள் அந்த லட்சியத்தை அடைய ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும்!'' என்று பேசி முடித்தார்.

விழா முடிந்த பிறகு கல்லூரி வளாகத்தில் ஒரு மரத்தை நட்டார். அது நேர்மைக்கான விதை!

- ச.ஜெ.ரவி, படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism