Published:Updated:

பொறுமையை சோதித்த விழா..

அவசரமாக வெளியேறிய அர்னால்டு!

சாதனை விழாவாக எதிர்பார்க்கப்பட்ட 'ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சர்ச்சைகளோடு முடிந்திருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கியது முதலே ரசிகர்களின் ஆர்வமும் பற்றிக்கொண்ட படம் இது. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் கெட் அப், ரகுமானின் இசை... என பரபரப்பாகப் பேசப்பட்டது. 'ஐ' படத்தை ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்துவிட்ட நிலையில்தான், 'ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி எதிர்பார்ப்பை எகிறவைக்க, அர்னால்டை வரவைத்தனர்.

பொறுமையை சோதித்த விழா..

அர்னால்டும் சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்தவர்... ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பதால் இருவரையும் இசை வெளியீட்டு விழா அன்றே சந்திக்க வைக்கலாம் என ஏற்பாடுகள் ஆனது. அதன்படியே கோவை பிரசாரத்துக்குச் செல்லும் நேரத்தைத் தள்ளிவைத்து ஜெயலலிதாவும் காத்திருந்தார். இருவரின் சந்திப்பும் இசை விழாவும் கடந்த 15-ம் தேதி அன்று இனிதாக முடிந்தது.

ஆனால், விழா ஏற்பாடுகள் குறுகிய காலத்தில் செய்யப்பட்டதால் ஏகப்பட்ட குழப்பங்கள். நிகழ்ச்சிக்கான சரியான திட்டமிடல் இல்லை. அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் 5.30 மணிக்குள் அரங்குக்குள் வந்துவிடவேண்டும் என்பது நிபந்தனை. அனுமதிச்சீட்டு பெற்றவர்களும் பத்திரிகையாளர்களும் 5 மணிக்கே அரங்கை நிரப்ப... அப்போதுதான் மேடையை வடிவமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. நிகழ்ச்சியின் ரகசியங்கள் வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக மொபைல், நெட்வொர்க் ஜாமர்களையும் வைத்து முடக்கியிருந்தார்கள். சில மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் ரசிகர்களும் கொஞ்சம் சூடாகத் தொடங்கினார்கள்.

நிகழ்ச்சிகள் நடக்கும் மேடைக்கு எதிராகப் பிரபலங்கள் அமரும் மேடை அமைக்கப்பட்டிருந்தது. முதல் ஆளாக மேடைக்கு வந்தவர் சூப்பர் ஸ்டார்தான். சோலோவாக அமர்ந்திருந்ததைப் பார்த்த, பப்ளிசிட்டி பவர் ஸ்டார், அவருக்குக் கைகொடுக்க அதிர்ந்தது அரங்கம். என்ன ரியாக்ஷன் கொடுப்பது என திக்குமுக்காடிப் போனார் சூப்பர் ஸ்டார். ஷங்கர், அர்னால்டு, ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்தடுத்து மேடைக்கு வர... இப்படியாக நிகழ்ச்சியைத் தொடங்கும்போது இரவு 8 மணி.

பொறுமையை சோதித்த விழா..

பாடகி சின்மயி, நடிகர் சிம்ஹா இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். 'ஐ’ படத்தில் இடம்பெறும் மிருக மனிதன் கெட்டப்பிலேயே என்ட்ரி கொடுத்து அசத்திய விக்ரம், எமி ஜாக்ஸனுடன் இணைந்து படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடினார். அர்னால்டை இம்ப்ரஸ் செய்வதற்காக, பல பாடி பில்டர்களைக் களமிறக்கி நிகழ்ச்சி சூடுபிடிக்க... அர்னால்டின் ஆஸ்தான 'பாடிபில்டிங் போஸ்’கள் அதில் இடம்பிடித்தன. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ரொம்பவே நெகிழ்ந்துவிட்ட அர்னால்டு, இருக்கையில் இருந்து எழுந்து அனைத்து பாடி பில்டர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்தி, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  

புகைப்படம் எடுத்த கையோடு மைக் பிடித்து, 'உலகின் திறமையான பலபேர் இந்தியாவுலதான் இருக்காங்க. நானும் இவங்களமாதிரி பாடி பில்டரா இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். என்மேல அன்பா இருக்குற இத்தனை ரசிகர்கள் இங்கே இருக்குறது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது’ என நெகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, தொகுப்பாளர் சிம்ஹா, அர்னால்டு தோளில் அசால்டாக கைபோட்டு காதில் ஏதோ கிசுகிசுக்க... அடுத்த நொடியே மேடையில் அர்னால்டு, ''இவர் என்னை நிகழ்ச்சி இறுதியில் பேசச் சொல்கிறார். நான் என்னுடைய பாதையில்தான் போவேன். இப்போதுதான் பேசுவேன்'' என்று ஒரே போடு போட்டுவிட்டு, ''உங்களுடைய படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க ஷங்கர்’ என இயக்குநர் ஷங்கரிடம் முறையிட்ட அர்னால்டு, இசை வெளியீட்டை முடிக்காமலேயே விறுவிறுவெனக் கிளம்பிவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அர்னால்டும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளவும் இல்லை, புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் இல்லை.

இறுதியாக வேறு வழியில்லாமல் ரஜினிகாந்த் இசையை வெளியிட, கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அதைப் பெற்றுக்கொண்டார். இசை வெளியீடு நடக்கும்போது படத்தின் நாயகன் விக்ரம், நாயகி எமிஜாக்ஸன் ஆகியோரும்கூட தென்படவில்லை. 'இன்னும் பல பிரமாண்டமான நிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கு...’ என சின்மயி பில்டப் கொடுத்தாலும், அர்னால்டு கிளம்பிய சில நிமிடங்களில் ரசிகர்கள் இடத்தை காலி செய்துகொண்டிருந்தார்கள்.

இறுதியாக, மைக் பிடித்த ரஜினி ''படத்தின் பாடல் வெளியீட்டு விழாவைப் பார்க்கும்போது, படத்தின் வெள்ளி விழாவைப் பார்ப்பது போல உள்ளது. மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் அளவுக்கு எடுக்க ஷங்கரால் மட்டுமே முடியும். விக்ரம் மாதிரி திறமையான கலைஞர்கள் கோலிவுட்டில் இல்லை. ஹாலிவுட்டுலயும் கிடையாது. இந்த படம் பிரமாண்டமாக வெற்றி பெற வாழ்த்துகள்'' என அமர்ந்தார்.

இசை விழா முடிவதற்குள் பலரும் 'ஐ’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் இதுதான் என ஒரு ஹாலிவுட் படத்தின் பெயரை வாட்ஸ் அஃப் மெசேஜில் தட்டிவிட... அதுவும் வைரலாகப் பரவி வருகிறது.

- நா.சிபிச்சக்கரவர்த்தி,

கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு