Published:Updated:

''எதிரிகளே இல்லை என்றால் ஏன் தெருத் தெருவாய் பிரசாரம் போக வேண்டும்!''

கொட்டும் மழையில் கொட்டிய வைகோ!

கொட்டும் மழையில், சுழன்றடிக்கும் காற்றில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை பூந்தமல்லியில் நடத்தி அரசியல் சூறாவளியில் பெருத்த சலனத்தை ஏற்படுத்தி இருக்கிறார் வைகோ!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழகத்தின் ஏதாவது ஓர் ஊரில் மாநாடாக நடத்தும் வழக்கத்தை ம.தி.மு.க வைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான விழா திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பூந்தமல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளரான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகு நடக்கும் மாநாடு என்பதால் கட்சிக்காரர்கள் இதனை உன்னிப்பாக எதிர்பார்த்து இருந்தார்கள். அதேநேரத்தில், வைகோ உடல்நலக் குறைவு காரணமாக இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்று வந்ததால் அவர் பேச்சுக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. பந்தல் சிவாவின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட மேடையில் மாநாடு மாலை நேரத்தில் தொடங்கியபோது அமைதியாக இருந்த வானம், இருட்ட ஆரம்பித்தது.

''எதிரிகளே இல்லை என்றால் ஏன் தெருத் தெருவாய் பிரசாரம் போக வேண்டும்!''

வைகோ மைக் முன்னால் வந்தபோது, இதமாக வீசிய காற்றோடு பலத்த மழையும் கைகோத்துக் கொண்டது. வைகோ பேச்சைக் கேட்க ஆவலோடு காத்திருந்த தொண்டர்கள் தலையில் சேர்களைத் தூக்கி வைத்துக் கொண்டார்கள். 'தோழர்களே பலத்த தோல்விக்குப் பிறகு இங்கே நாம் கூடியிருக்கின்றோம். மழை கொட்டுகின்றது. இந்த மழையிலும் நிற்கிறீர்கள். இயக்கமும் அப்படித்தான்! நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை. மூன்று ஆண்டுக்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தக் கட்சி இதோடு காலாவதியாகிவிடும் என்று கருதினார்கள். சூன்யப் படுகுழியிலே தூக்கி எறியப்பட்டுவிடும் என்று நினைத்தார்கள். இதற்குப் பின்னாலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருக்கிறார்கள். இது கொள்கைக்காக இருக்கின்ற கூட்டம் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

முதல்வர் அவர்களே, 37 இடங்களிலே ஜெயித்துவிட்டோம் என்று சொல்கிறீர்களே... நீங்கள் கொள்கையால் ஜெயித்தீர்களா? இல்லை, பணத்தால் ஜெயித்தீர்கள்!  முல்லைபெரியாறுக்கு எதற்கு உங்களுக்கு பாராட்டுக் கூட்டம்? ஏனென்றால், நீங்கள் கால்கடுக்க நடந்தீர்கள் அல்லவா? பட்டினிப் போராட்டம் நடத்தி உங்களையே வருத்திக் கொண்டீர்கள் அல்லவா? முல்லைபெரியாறுக்கென்று ஒரு போராட்டம் நடத்தியதுண்டா? ரூ.100 கோடி செலவிலே உங்களுக்கு பாராட்டுக் கூட்டத்தை நடத்தினீர்கள். அந்த முல்லைபெரியாறை காக்க தங்களைத் தீக்கிரையாக்கிக் கொண்டார்களே ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராமமூர்த்தி, இடுமலை சேகர் அவர்களின் பெயர்களையாவது மேடையிலே உச்சரித்தீர்களா?

இன்றைக்கு தமிழ்நாட்டிலே மக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகளுக்குப் பஞ்சமே கிடையாது.  அதற்கெல்லாம் காரணம் மதுக்கடைகள்தான். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.24,000 கோடி வருமானம் வருகிறது. அனைத்து குற்றங்களுக்கும் பின்னாலே ஆல்கஹால் இருக்கிறது. மதுவுக்குப் பேர்போன கேரளாவிலே மதுவுக்கு எதிராகத் துணிச்சலாக முடிவெடித்திருக்கிறார் உம்மன்சாண்டி. அவரைப் பாராட்டுகிறேன்!

பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்திலே பீகார் 10.89 சதவிகிதம், இரண்டாவது இடத்திலே மத்தியப்பிரதேசம், கடைசி இடத்திலே 3.39 சதவிகிதத்தில் தமிழ்நாடு. இது மத்திய அரசின் புள்ளி விவரம். எல்லாத் தொழில்களும் அயல் மாநிலத்துக்குப் போகின்றன. ஆனால் இங்கே, அம்மா உணவகம், அம்மா காய்கறி கடை, அம்மா உப்பு, அம்மா விதை, அம்மா கத்திரிக்காய், அம்மா உருளைக்கிழங்கு... என்று சொல்லிக் கொள்கிறீர்களே? 'களத்தில் நிற்கின்றேன் எதிரிகளையே காணோம்’ என்று சொல்கிறீர்கள். எதிரிகளே இல்லாதபோது தூத்துக்குடியிலும், கோயம்புத்தூரிலும் எதற்கு தெருத் தெருவாக நின்று பேசுகிறீர்கள்?'' என்று ஜெயலலிதாவை விமர்சித்த வைகோ, அடுத்து மத்திய அரசு பக்கமாகத் திரும்பினார்.

''நரேந்திர மோடி பதவியேற்புக்கு ராஜபக்ஷேவை அழைக்கிறார்கள் என்றதும் பதறிப்போனேன். மோடியை சந்தித்து எதிர்ப்பைக் காட்டினேன். எனக்கு சுயநலம் இருக்குமானால், ராஜ்யசபா பதவி ஆசை இருக்குமானால், இந்த அரசை அனுசரித்துப் போகலாம். எந்தச் சலுகையும் கிடைக்கும் என்ற எண்ணம் இருக்குமானால் எப்படி வேண்டுமென்றாலும் இருந்திருக்கலாம். பதவியேற்பு நடக்கும்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். 'இந்தியாவின் பொது மொழி இந்தி படியுங்கள்’ என்கிறார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 'இந்தியா முழுவதும் இந்தியைத் திணிக்க வேண்டும்’ என்று பிரணாப் முகர்ஜி பேசுகிறார். உத்தரப்பிரதேசத்தோடும், பீகாரோடும் இந்தியா அடங்கிவிடவில்லை. இந்தி மட்டும் இருக்கின்ற இந்தியா வேண்டுமா... ஒன்றிணைந்த இந்தியா வேண்டுமா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். எங்களுடைய நிலைப்பாடு இதுதான், ஜனநாயகத்தைக் காக்க எந்த எதிரியையும் எதிர்ப்போம்! லட்சியங்களைக் காக்க எந்த நண்பர்களையும் ஆதரிப்போம்! எந்தப் போர்க்களத்தையும் சந்திப்போம். எந்தத் துன்பங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்வோம்!' என்றதும் கரகோஷத்தால் மைதானம் அதிர்ந்தது.

வைகோ பேசி முடிக்கும்வரை குளிர்ந்த மழையில் நனைந்திருந்தார்கள் தொண்டர்கள். சூடாகவே இருந்தது களம்!

    - பா.ஜெயவேல், க.தனலட்சுமி

படங்கள்: கு.கார்முகில்வண்னன்

அடுத்த கட்டுரைக்கு