Published:Updated:

“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்!” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு

“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்!” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு
“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்!” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு

“அடக்கம் செய்ய வழியில்லாம கணவர் சடலத்தை வெச்சிருந்தேன்!” - 20 ஆண்டுகள் தொடரும் கலப்புத் திருமண புறக்கணிப்பு

ருத்துவமனையில் இறந்த கணவனின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பெண் ஒருவர் பலமணி நேரம் தவித்திருக்கிறார். இந்த வேதனையான சம்பவம் ஜெயங்கொண்டத்தில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராணி. இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இதை ஏற்றுக்கொள்ளாத இரண்டு வீட்டாரும் ராணி-துரைராஜை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

துரைராஜ்- ராணி இருவரும் சிந்தாமணி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்திவந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். இவர்கள் அனைவரும் தா.பழூர் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக துரைராஜ் காசநோயால் பாதிப்பு ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

நேற்று காலை துரைராஜின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவருடைய குடும்பத்தினர், துரைராஜை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் துரைராஜ் இறந்துவிட்டார். அவருடைய உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால், தன் பிள்ளைகளுடன் நான்கு மணி நேரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தவித்துக் கொண்டிருந்தார் ராணி.

இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாசில்தார் முன்னிலையில் துரைராஜின் இறுதிச் சடங்கு நடத்தி முடிக்கப்பட்டது.

கணவரை இழந்த ராணியிடம் பேசினோம்.

"நாங்க இருபது வருஷத்துக்கு முன்னாடியே காதலிச்சு வீட்ட எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு குழந்தை பொறந்துச்சுனா எங்களை ரெண்டு வீட்டுப் பெத்தவங்களும் ஏத்துப்பாங்கனு நினைச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ஆனா எவ்வளவோ கெஞ்சியும், பல முறை நேர்ல பார்த்து மன்னிப்புக் கேட்டும்கூட எங்க ரெண்டு வீட்டுப் பெத்தவங்களும் மனசு எறங்கல. மொத குழந்தை பொறந்தப்ப அவளை எடுத்துக்கிட்டு என் அப்பா அம்மாகிட்ட போனேன். எவ்வளவோ பேசிப்பார்த்தேன். ஆனா சாதியைக் காரணம் காட்டி எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ள சேர்க்க மறுத்துட்டாங்க. 

ரெண்டாவது புள்ளை பொறந்தப்பவும் அம்மா அப்பா வீட்டுக்குப் போனேன். ''உங்களை வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டா, எங்களை சொந்தக்காரங்க தள்ளி வைச்சிருவாங்க''னு திட்டி அனுப்பிட்டாங்க. என் வீட்டுக்காரரும் அவங்க வீட்டுல எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார். ஆனா ஒண்ணும் நடக்கலை.

ஒரு பக்கம் மனக்கவலை; இன்னொரு பக்கம் பணக் கவலைகளோடு தனிக்குடித்தனம் நடத்தினோம். நல்லா போயிட்டிருந்த குடும்பம், அவருக்கு காச நோய் வந்தவுடனே ஆட்டம் காண ஆரம்பிச்சது. அவருக்கு மருத்துவ செலவு செய்யவே காசு கரைஞ்சு போச்சு. அப்பகூட அவர் அப்பா அம்மா மனசு இறங்கலை. அவருக்கு நோய் முத்தினதும் ஆஸ்பத்திரி கொண்டு போக எல்லார்கிட்டேயும் கெஞ்சினேன். 108 ஆம்புலன்ஸ் டிரைவர் என் நிலைமையைப் பார்த்து 500 ரூபாய் பணம் கொடுத்து இலவசமா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தார்.

விதி விடல. அவர் காசநோய் முத்தி இறந்துபோயிட்டார். அடக்கம் பண்ணக்கூட வழியில்லாம நாலு மணி நேரம் அவர் பொணத்த ஆஸ்பத்திரி வளாகத்துல கெடத்திட்டு கதறினேன். யாரும் கண்டுக்கலை. அதுகப்புறமா நான் கதறினதை நேர்ல பார்த்தவங்க கவர்ன்மென்ட்டு  அதிகாரிங்களுக்குத் தகவல் தெரிவிக்கவும். அவங்க வந்து இலவசமா அடக்கம் பண்ணினாங்க. இனி நான் எப்படி என்னோட மூணு புள்ளைகளையும் வெச்சுகிட்டு தனியா வாழப்போறேனு தெரியல'' என்றார் கண்ணீர் மல்க.

அடுத்த கட்டுரைக்கு