Published:Updated:

’வீடியோவை வெளியிட்டால் நட்பில் களங்கம் ஏற்படும் என சின்னம்மா சொன்னார்’ – எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்

’வீடியோவை வெளியிட்டால் நட்பில் களங்கம் ஏற்படும் என சின்னம்மா சொன்னார்’ – எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்
’வீடியோவை வெளியிட்டால் நட்பில் களங்கம் ஏற்படும் என சின்னம்மா சொன்னார்’ – எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்

’வீடியோவை வெளியிட்டால் நட்பில் களங்கம் ஏற்படும் என சின்னம்மா சொன்னார்’ – எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன்

தேனி மாவட்டம் போடிச் சாலையில் உள்ளது மாவட்ட அ.தி.மு.க தலைமைக் கட்டடம். இன்று காலை அங்கே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன். உடன் பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன், “இன்று மதுரை மேலூரில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு தேனி மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். மேலும், வரும் 29-ம் தேதி தேனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தை நாம் சிறப்பாக நடத்த வேண்டும். அந்த கூட்டத்துக்கான நம் இலக்கு ஒரு லட்சம் பேராக இருக்க வேண்டும். இப்போதே அதற்கான பணிகளை அனைவரும் ஆரம்பித்துவிட வேண்டும். பொதுக்கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்திக்காட்ட வேண்டும்” என்றார். எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், டி.டி.வி தினகரன் அணியில் இருப்பவர் மட்டுமல்லாமல், தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் அவரே. மேலும், தேனியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடியைத் தவிர, பெரியகுளம், கம்பம், ஆண்டிபட்டி என மற்ற தொகுதிகள் தங்கத்தமிழ்ச்செல்வன் பக்கம்தான் இருக்கிறார்கள். அதாவது பன்னீர்செல்வத்தை தவிர மாவட்டத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரன் அணியில் தற்போது இருக்கிறார்கள். சமீபத்தில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் தவறான கருத்தைச் சொல்கிறார்கள் :

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர வேண்டும். அதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாடுபட வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படி பல அணிகளாக பிரிந்துகிடப்பது சரியில்லை. பத்து அமைச்சர்கள் மீண்டும் மீண்டும் தவறான கருத்தைக் கூறிக்கொண்டு கழகத்துக்குள் குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு, நாங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்ற ஆசை இல்லை. கழகம் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதே நாங்கள் நினைப்பது. மேலும், கட்சி நிர்வாகிகளை நியமிக்க, நீக்க, பொதுச்செயலாளரான சசிகலாவால் மட்டுமே முடியும். மற்றவர்கள் அதனைச் செய்ய நினைத்தால் அவர்கள்தான் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் கட்சியை எங்களிடம் விடு. ஆட்சியை நீங்கள் நடத்துங்கள்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தை தாக்கிப்பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன்:

ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய தங்கத்தமிழ்ச்செல்வன், “அ.தி.மு.க வரலாற்றில் தினகரனால் அதிகம் ஆதாயம் தேடிக்கொண்டது ஓ.பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும். 2000-ம் ஆண்டு பன்னீர்செல்வம் எப்படி இருந்தார். இப்போது எப்படி இருக்கிறார் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். உருவாக்கிய ஒரு குடும்பத்தை வேண்டாம் என்று சொல்வது நியாயம் இல்லை. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார். ஆட்சியில்தான் அமர்ந்தாரே, தேனி மாவட்டத்துக்கு என்ன செய்தார்? இதுவரை எதுவும் செய்யவில்லை. என்னையும் அதிகாரத்தில் அமரவிடாமல் தடுத்தது பன்னீர்செல்வம்தான். தானும் செய்யாமல் என்னையும் செய்ய விடாமல் தடுத்தது மட்டுமல்லாமல், அடுத்த கட்டமாக கட்சியையும் தேனியையும் கெடுக்க நினைக்கிறார். அது நடக்காது.

வீடியோவை வெளியிட சின்னம்மாவிடம் சொன்னேன் :

கூட்டத்தில் ஆவேசமாக பேசிய தங்கத்தமிச்செல்வன், “சிறையில் இருக்கும் சின்னாம்மாவை சந்தித்துப் பேசியபோது, மருத்துவமனை வீடியோவை வெளியிடுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர், ‘அந்த வீடியோவை  வெளியிட்டால் எனக்கும் ஜெயலலிதாவுக்குமான நட்புக்கு களங்கம் ஏற்படும். நானே பழியை ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார். நானும் அமைதியாக வந்துவிட்டேன்.” என்றார்.

முன்னதாக, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவர் இறந்த பிறகு அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியும் கட்சிக்குள் இருந்த பன்னீர்செல்வம் கொடியை உயர்த்தினார். எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்குக்கு கோரிக்கைகள் வைக்க, ஜெயலிதாவின் சிகிச்சை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் வெளியிடுவோம் என்று கூறினார். இந்நிலையில், இன்று தங்கத்தமிழ்ச்செல்வன் பேசும்போது, ’எனக்கும் ஜெயலலிதாவுக்குமான நட்பில் களங்கம் ஏற்படும்’ என்று சசிகலா கூறியதாக குறிப்பிட்டார்.

முப்பதாண்டுகாலத்திற்கு மேலான நட்பில் களங்கம் ஏற்படும் அளவுக்கு அந்த வீடியோவில் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

அடுத்த கட்டுரைக்கு