என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

வெற்றி - தோல்வி யாருக்கு என்ற விவாதம் இதில் தேவை இல்லை. காந்திய வழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அதற்கு நாடாளுமன்றத்தை இணங்கவைத்திருக்கும் அண்ணா ஹஜாரே என்பவரைத் தனியரு மனிதராகப் பார்க்க முடியாது. அவருக்குப் பின்னால் தேசம் எங்கும் திரண்டு நின்ற மக்களின் ஆர்வத்தைப் பார்த்தாலே, ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். குரல்கள்தான் பல கோடி... முகம் ஒன்றே!

ஊழலுக்கு எதிராக இனியும் சகிப்புத்தன்மை காட்ட நாடு தயாராக இல்லை.இதைப் புரிந்துகொள்ளாமல், இத்தனை நாளும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை தூரம் மக்களைவிட்டு விலகி இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தமே மேலோங்குகிறது. கசப்பான உண்மையைக் கட்டாயத்தின்பேரில் புரிந்துகொள்ளும்போது, வலியும் எரிச்சலும் இருக்கத்தான் செய்யும். ஆனால், அண்ணா ஹஜாரேவின் கோரிக்கைகளை ஏற்பதாக இப்போது இவர்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான அரசியல் தந்திரத்தையும் காட்டிவிடக் கூடாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, உடனே வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், அதை திரும்பத் திரும்ப சமூக ஆர்வலர்கள் பயன்படுத்திய பிறகு, அரசுத் துறைகளின் பல ஊழல்கள் அம்பலத்துக்கு  வந்தன. பொது வாழ்க்கையிலும் அரசாங்கப் பொறுப்பிலும் இருப்பவர்கள் மத்தியில் ஓரளவு பய உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. கடமை வேகமும் நேர்மை உணர்வும் மிகுந்த அரசு ஊழியர்களுக்கு மத்தியில் ஒரு சில பதர்கள் தவறு செய்யும்போது, ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமே கெட்ட பெயர். எனவே, அண்ணா ஹஜாரே வலியுறுத்தும் புதிய சட்டங்களின்படி அரசாங்கப் பணியில் இருப்போர் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவது நல்லதே. யாருக்கு மடியில் கனம் உண்டோ, அவர்கள்தான் அலற வேண்டும், கட்டுப்பாடுகளைப் பார்த்து!

நீதிபதியையே அவை நடுவில் நிறுத்திக் கேள்வி கேட்பவர்கள், அந்த நீதியின் முழுக் கட்டுப்பாட்டில் வந்தால்தானே நாட்டில் தர்மம் தழைத்து ஓங்கும்?