Published:Updated:

முதல்வருக்கு வாய்ப்பூட்டு... மோடி அரசின் ‘எமர்ஜென்சி’!

முதல்வருக்கு வாய்ப்பூட்டு... மோடி அரசின் ‘எமர்ஜென்சி’!
முதல்வருக்கு வாய்ப்பூட்டு... மோடி அரசின் ‘எமர்ஜென்சி’!

முதல்வருக்கு வாய்ப்பூட்டு... மோடி அரசின் ‘எமர்ஜென்சி’!

ம் தேசத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’ அமலில் உள்ளதோ என்று அச்சப்படும் அளவுக்கு அதிரடிகள் அரங்கேறுகின்றன. ‘இப்படியெல்லாம் பேசினால் உங்களுடைய உரை ஒலிபரப்பப்படாது’ என்று சொல்லி, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையே தூதர்ஷனிலும் அகில இந்திய வானொலியிலும் ஒளி-ஒலிபரப்பாமல் நிறுத்திவிட்டார்கள். இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி காலம் தவிர, இந்திய வரலாற்றில் வேறு எந்தவொரு காலகட்டத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை.

இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வர், எளிமையான முதல்வர், நேர்மையான முதல்வர் என்றெல்லாம் ஊடகங்களால் புகழப்பட்டவர், திரிபுரா மாநிலத்தின் முதல்வர்  மாணிக் சர்க்கார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார், தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிபுராவின் முதல்வராக உள்ளார். அவருடைய சுதந்திர தின உரையைத்தான், ஒளி-ஒலி ஒளிபரப்ப முடியாது என்று பிரசார் பாரதி மறுத்துவிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் ஆகியோரின் உரைகள் தொலைக்காட்சியிலும், அகில இந்திய வானொலியிலும் ஒளி-ஒலிபரப்பாகும். இந்த ஆண்டு, மாணிக் சர்க்காரின் ஆறு நிமிட சுதந்திர தின உரை பதிவுசெய்யப்பட்டு தூதர்ஷனுக்கும் அகில இந்திய வானொலிக்கும் அனுப்பப்பட்டது. அந்த உரையில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் உள்ளன என்றும், எனவே, அந்த உரையை மாற்றுங்கள் என்றும் பிரசார் பாரதியிடமிருந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், ‘உரையை மாற்ற முடியாது’ என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் சென்றது. அதனால், சுதந்திர தினத்தன்று காலை 6.30 மணிக்கு ஒலிபரப்பாக வேண்டிய முதல்வர் மாணிக் சர்க்காரின் உரை, ஒலிபரப்பு செய்யப்படவில்லை.
அந்த உரையில், அப்படி என்னதான் சொல்லியிருந்தார் மாணிக் சர்க்கார்?

“வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் பாரம்பர்யம். மதச்சார்பின்மையின் மகத்தான விழுமியங்கள், இந்தியாவை ஒரு தேசமாக ஒன்றுபடுத்த உதவிபுரிந்துள்ளன. அவை இன்றைக்கு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. நம் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிற, விரும்பத்தகாத சிக்கல்களையும் உண்டாக்குகிற முயற்சிகள் மற்றும் சதிகள் தற்போது நடக்கின்றன. மதத்தின் பெயராலும் ஜாதியின் பெயராலும், பசுப் பாதுகாப்பு என்ற பெயராலும் இந்தியாவை ஒரு குறிப்பிட்ட மதத்துக்கான தேசமாக மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறது. புனிதமற்ற இந்தப் போக்குகளை அனுமதிக்கவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது.

இந்த சீர்குலைவு முயற்சிகள் எல்லாம், நம் சுதந்திரப்போராட்ட லட்சியங்களும், கனவுகளுக்கும், குறிக்கோள்களுக்கும் எதிரானவை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காததுடன், தேசவிரோத சக்திகளுடன் கைகோத்துக்கொண்டு, இரக்கமற்ற - கொடூரமான, கொள்ளைக்கார ஆங்கிலேயர்களுக்குக் கொத்தடிகளாக இருந்து சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக சதி செய்தவர்களின் வழிவந்தவர்கள், இன்றைக்கு பல்வேறு பெயர்களிலும் நிறங்களிலும் தங்களை அலங்கரித்துக்கொண்டு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அடித்தளம் மீதே தாக்குதல் தொடுக்கிறார்கள்” என்று தனது உரையில் மாணிக் சர்க்கார் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேச்சுதான், மத்திய ஆட்சியாளர்களைக் கடுப்பேற்றியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் கேட்டோம்.

“பிரசார் பாரதி என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு. அதன் கட்டுப்பாட்டில்தான் தூர்தர்ஷனும், அகில இந்திய வானொலியும் வருகின்றன. தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரசார் பாரதியை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒரு துறையைப்போல மோடி அரசு பயன்படுத்துகிறது. இதை மோடி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணிக் சர்க்கார், திரிபுரா மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர். அவர் என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் முடிவுசெய்ய முடியாது. பி.ஜே.பி அரசு, தான் உருவாக்கிய அஜெண்டாவைத் தாண்டி, வேறு எந்தவொரு விஷயத்தையும் யாரும் பேசக்கூடாது என்று நினைக்கிறது. தங்கள் இமேஜை பாதிக்கிற எதையும் அனுமதிப்பதில்லை என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை. நீங்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்; நான் சொல்லும் செய்தியை வெளியிடுங்கள் என்பதுதான் அதன் நோக்கம். எல்லா இடங்களிலும் ஒரே கருத்தைத் திணிப்பதற்கான முயற்சிதான் இது. தங்கள் அஜெண்டாவைத் தாண்டி வேறு எதையும் பேசப்படக்கூடாது, விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஊடக சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள். அசாதாரணமாக ஒருவர் மரணம் அடைந்தால், அது பற்றி விவாதிக்கிற ஊடகங்கள், கோரக்பூரில் எழுபது குழந்தைகள் மரணமடைந்தது பற்றி பெரிதாக விவாதிக்கவில்லை. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது இங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.

புதிய இந்தியாவில் இதுவெல்லாம்தான் நடக்குமா?

அடுத்த கட்டுரைக்கு