Published:Updated:

சென்னையிலிருந்தும் வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்..!

சென்னையிலிருந்தும்  வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்..!
சென்னையிலிருந்தும் வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்..!

தாக்குதல் பீதி காரணமாக பெங்களூர்,ஹைதராபாத்,மும்பை உள்ளிட்ட  நகரங்களிலிருந்து மட்டுமல்லாது சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள்  வெளியேறி வருகின்றனர்.

அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும்,பழங்குடியினத்தவர்களுக்கும்  இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது.

சென்னையிலிருந்தும்  வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்..!

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது,  ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று   மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் திடீரென  பரவியது.

எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர்   போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமாக பரவியது.

இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள்,உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே   நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்த தகவல் மேலும் பரவியதால் பெங்களூரு மட்டுமல்லாது  ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல நகரங்களிலும் பிழைப்புக்காக வந்து தங்கியுள்ள  வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள்,தங்களது  இடத்தை காலி செய்துவிட்டு சொந்த மாநிலம் நோக்கி திரும்பினர்.

வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும்,தக்க பாதுகாப்பு வழங்கப்படும் என்றும்  கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் மட்டுமல்லாது அந்தந்த மாநில  அரசுகளும்,மத்திய அரசும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உறுதி  அளித்தபோதிலும்,அவர்களது அச்சம் அகலவில்லை.

இதனால் பெங்களூரு ரயில் நிலையத்தில் ஏற்பட்டதுபோன்றே,மேற்கூறிய நகரங்களில்  அமைந்திருக்கும் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.இதன் காரணமாக  அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னை

இந்நிலையில்,சென்னையிலும் இதே நிலை காணப்பட்டது.சென்னை மற்றும் தமிழகத்தின்  பிற நகரங்களில் ஏராளமான வடகிழக்கு மாநிலத்தவர்கள் பிழைப்புக்காக வந்து  குடியேறியுள்ளனர்.கணிசமானோர் மாணவர்களாகவும் உள்ளனர்.இவர்களிடத்திலும்  மேற்கூறிய தகவல் பரவியதால்,அவர்களும் தங்களது மூட்டை முடிச்சுகளுடன் சொந்த  ஊர் திரும்புவதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். 

நேற்று மாலை சுமார் 3,000க்கும் அதிகமான வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த  தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு குவிந்ததால், பெங்களூரைப் போன்றே  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயிலில் ஏற நெரிசலும்,தள்ளுமுள்ளும்  ஏற்பட்டது.இவர்களில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான்.

கவுகாத்தி செல்லும் ரயிலுக்காக கூடியிருந்த இவர்கள் சென்னை மட்டுமல்லாது  மதுரை,கோவை உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் வந்திருந்தனர்.

கவுகாத்தி செல்லும் ரயில் அதிகாலை 2 மற்றும் 4 மணிக்குதான்  என்றபோதிலும்,மாலையிலிருந்தே இவர்கள் காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக  இருந்தது.

பொதுவாக தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக யாரும் எவ்வித அசம்பாவித  சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்றபோதிலும்,முன்னெச்சரிக்கை காரணமாகவே  அவர்கள் சொந்த ஊர் திரும்பியதாக தெரிகிறது.

முஸ்லிம் தலைவர்கள் வேண்டுகோள்

இதனிடையே பிரச்னை முதலில் வெடித்த கர்நாடகாவில் வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு  முஸ்லீம்களால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும், எனவே அவர்கள்  கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை என்றும்,  மாநிலத்தைவிட்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் முஸ்லீம்  தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெங்களூர் நீலசந்திரா பகுதியில் நேற்று முஸ்லீம் அமைப்பான மெக்கா மஸ்ஜித் கமிட்டி  சார்பில் ஒரு அமைதிக் கூட்டம் நடந்தது.அதில் பேசிய முஸ்லீம் தலைவர்கள் பலரும்  வட கிழக்கு மாநிலத்தவர்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்  கொண்டனர்.

கமிட்டித் தலைவர் முகம்மது சமியுல்லா கூறுகையில்,"வதந்திகளை யாரும் நம்ப  வேண்டாம். பெங்களூரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் பாதுகாப்புடன்தான்  உள்ளனர். யாருக்கும், எந்தவிதமான மிரட்டலும் இல்லை.வெள்ளிக்கிழமை மசூதிகளில்  நடைபெறும் தொழுகைகளின் முடிவில் முஸ்லீம்களிடம், அசாம் பிரச்சினை குறித்து  அனைவருக்கும் விளக்கிக் கூறும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.அங்கு நடப்பது மத  ரீதியான மோதல் அல்ல, மாறாக சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பிரச்சினைதான்  என்பதை விளக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.