Published:Updated:

தமிழகத்தில் குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் எப்படி? ஓர் அலசல்!

தமிழகத்தில் குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் எப்படி? ஓர் அலசல்!
தமிழகத்தில் குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் எப்படி? ஓர் அலசல்!

லகிலேயே மிக அதிகமாக மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவில் தயாராகும் மருந்துகள் 150 நாடுகளுக்கும் மேல் சென்று கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், இந்தியாவில் 60 கோடிக்கும் மேலான மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அந்த அறிக்கையின் உண்மைத்தன்மைக்கு கோரக்பூரில் நிகழ்ந்த பச்சிளம் குழந்தைகளின் மரணங்களே சாட்சியாக இருக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 பச்சிளம் குழந்தைகள் இறந்துபோன சம்பவம் உலகத்தை உலுக்கியிருக்கிறது. ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்துக்கு 69 லட்சம்  ரூபாய் பாக்கி இருந்ததால், ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்திவிட்டது அந்த நிறுவனம். நான்கு மாதங்களாக, 16 முறை இதுபற்றி நினைவூட்டியும் மருத்துவமனை நிர்வாகம் அதைக்கண்டு கொள்ளவில்லை. அதனால் நிகழ்ந்த பெருந்துயரமே இது. மேலும் தன் சொந்தப் பணத்தில் ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்த கஃபீல் கான்  என்னும் மருத்துவரையும் பணிநீக்கம் செய்திருக்கிறார்கள். அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில தினங்களுக்கு முன்பாக இந்த மருத்துவமனையை ஆய்வு செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

ஏதோ இதுமாதிரி சம்பவங்கள் எல்லாம் வட இந்தியாவில் மட்டும்தான் நடக்கும் என்று திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. ஏற்கெனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொத்துக்கொத்தாக குழந்தைகள் இறந்ததைக் கண்டோம். கடந்த சில நாள்களுக்கு முன்பு செம்மஞ்சேரியில் 10 வயது சிறுவன் கார்த்திக், ட்ரான்ஸ்பார்மரில் மோதி  மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானான். உடனே செம்மஞ்சேரியில் உள்ள நகர நல்வாழ்வு மையத்துக்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவசர சிகிச்சைக்கான வசதிகள் இல்லை. அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை. வேறு வழியில்லாமல் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டான். வழியிலே இறந்து போனான்.

இந்தியாவின் மருத்துவத் தலைநகர் என்று சொல்லும் அளவுக்கு சென்னை மருத்துவத்துறையில் வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் மருத்துவம் செய்துகொள்ளும் வெளிநாட்டவர்களில் 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் விரும்பும் இடம் சென்னைதான். மற்ற மாநிலங்களில் இருந்தும் சென்னையில் சிகிச்சை பெறவே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் . ஆனால், இந்தமாதிரியான சிகிச்சைகள் எல்லாம் வசதி இல்லாதவர்களுக்குக் கிடைக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. 

சென்னையில் எந்த இடத்தில் இருந்து அழைத்தாலும் 20 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து விடும் என்று அரசு விளம்பரம் செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் கார்த்திக்கின் உயிர் அநியாயமாகப் பறிபோய் இருக்கிறது. 

சென்னையில் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  சில தினங்களுக்கு முன்பு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்த தொழிலதிபர் ஒருவரும், மூச்சுத்திணறலால் சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள் பணியில் இல்லாததால்தான் இந்தச் சம்பவங்கள் நடந்தன என்று ஊடகங்களில் செய்திகள் வந்தன.

இப்படி எண்ணற்ற சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

மருத்துவ வளர்ச்சியில் இந்தியாவின், தமிழ்நாட்டின் உண்மையான நிலைதான் என்ன ? குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகள் எப்படி இருக்கின்றன? 

"பீகார், ஒரிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் முன்னேறியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது முழுமையான முன்னேற்றமா என்றால் நிச்சயமாக இல்லை. அதற்கு செம்மஞ்சேரியில் நடந்த சிறுவன் கார்த்திக்கின் மரணமே சாட்சி. சென்னை போன்ற மாநகரங்களிலேயே இந்த நிலைமை என்றால் கிராமப்புறங்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. வட்டார அளவில் இருக்கும் மருத்துவமனைகளில் அடிப்படையான மருத்துவ வசதிகள் மட்டுமே இருக்கின்றன. உயர் மருத்துவ வசதிகள் இல்லை. சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள், இதய நோயாளிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், எல்லா மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் இல்லை.

அதேபோல், உடல் தானத்திலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.  தமிழ்நாட்டில் தானம் செய்யப்பட்ட உடல்கள் அனைத்தும் தனியார் வசம்தான் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமானது. அதற்குக் காரணம் குழந்தைகள் பிறந்தவுடனே அவர்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய  பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை. அதேபோல் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளனர். ஆரம்பகால குழந்தை பராமரிப்பு பாதுகாப்பு முறையில் அதிகமான கவனம் தேவைப்படுகிறது.

கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆண் - பெண் குழந்தைகளின் சராசரி, 1000:900 தான். கடலூர் போன்ற வளர்ந்த மாவட்டத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற மாவட்டங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.  அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியாகப் பணிக்கு வராதது மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. 

தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவ வசதிகளும் இருக்கின்றன. அது பணம் படைத்தவர்களுக்குத்தான். தனியார் மருத்துவமனைகளில் தான் அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. போதிய மருத்துவர்கள் இல்லை. இதெல்லாம் மாறவேண்டும்" என்கிறார் குழந்தை உரிமை ஆர்வலர் தேவநேயன். 

இந்தியாவில் பிறந்த ஒரு மாதத்துக்குள் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் 70 சதவிகித குழந்தைகள் ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

பிரசவ நேரத்தில் தாய் இறப்பு விகிதம் (Maternal Mortality Rate )

இந்திய அரசின் 2013ம் ஆண்டு அறிக்கைப்படி, தேசிய அளவில்  நடக்கும் பிரசவங்களில் தாயின் இறப்பு விகிதம் 1 லட்சத்துக்கு 167. தமிழகத்தில் நடக்கும் 1 லட்சம் பிரசவங்களில் 79 தாய்கள் இறக்கிறார்கள்.  கேரளாவில் பிரசவக்கால தாய் இறப்பு  61, மகாராஷ்டிராவில்  68. 

குழந்தை இறப்பு விகிதம் :(Infant Mortality Rate)

இந்தியாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் சராசரியாக 40 குழந்தைகள் இறக்கிறார்கள். தமிழ்நாட்டில்  21 குழந்தைகள். இதுவே குஜராத்தில் 36 , ம.பி - 54, உ.பி - 50, ராஜஸ்தான் - 47, கேரளா - 12, மகாராஷ்டிரா- 24,  ஒடிஷா- 51.

குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்கப்படும் சதவிகிதம்:

சிக்கிம் - 100, மணிப்பூர் - 100, தமிழ்நாடு - 86.7, கேரளா 79.7,  குஜராத் - 55.2, மத்தியப் பிரதேசம் 48.9, உத்திரப் பிரதேசம்- 29.9 , ராஜஸ்தான் - 31.9, அருணாச்சலப் பிரதேசம் -19.1.

மாநில அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை (லட்சம் மக்கள் தொகைக்கு):

தமிழ்நாடு - 149, குஜராத் - 87, மத்தியப் பிரதேசம் - 41, உத்திரப்பிரதேசம்- 31, ராஜஸ்தான் - 48.

"மருத்துவத்தைப் பொறுத்தவரை, உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழ்நாடும் கேரளாவும் முன்னோடி மாநிலங்களாகத்தான் இருக்கின்றன. அதேசமயம் கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் ஊழலும் அதிகரித்துள்ளது. மருத்துவர்கள் நியமனத்தில், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் இப்படி ஒவ்வொன்றிலும் ஊழல் மலிந்துவிட்டது..." என்று குற்றம் சாட்டுகிறார் அறப்போர் இயக்கத்தின் தலைவர் ஜெயராமன் வெங்கடேசன். 

"சுகாதாரத்துறையின் பட்ஜெட் 10 வருடங்களுக்கு முன்பு 1400 கோடி ஆக இருந்தது. கடைசியாகப் போடப்பட்ட பட்ஜெட்டில் 10,000 கோடியாக அதிகரித்து விடுகிறது. ஆனால், சுகாதாரத்துறையின் தரம் அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் பணமானது மக்களுக்கு அல்லாமல் வேறு திசையில் செல்கிறது. வெளிப்படைத்தன்மை இல்லாததால் முறைகேடுகள் மலிந்து விட்டன. 

ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் கிடைக்கக் கூடிய மருத்துவ உதவிகளில் இந்தியா மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்களின் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி. ஆனால், சென்னையில் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரைதான் இருக்கின்றனர். 

இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த உற்பத்தியில் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவான தொகைதான் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. குறைந்தது 5 அல்லது 6 சதவிகிதமாவது ஒதுக்கவேண்டும்" என்கிறார் ஜெயராமன் வெங்கடேசன்

என்னதான் தீர்வு?

மருத்துவர் புகழேந்தி சொல்கிறார்.  

"சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் கொண்டு வரவேண்டும். போதிய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். மருத்துவ உதவி கிடைக்காமல் இறப்பவர்களின் மரணங்களை கிரிமினல் வழக்காகப் பதிவுசெய்து விசாரிக்கப் பட வேண்டும். தனியாரின் தண்ணீர் வணிகத்தை தடுத்து, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குவது அரசின் கடமையாக மாற்ற வேண்டும். தாய்மார்களுக்கான சத்துணவை உறுதிப்படுத்த வேண்டும்.  

இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகளில், மருத்துவத் துறையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளோம் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த நேரத்தில்தான் குழந்தைகளின்  மரணங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் அனைத்து மருத்துவ உதவிகளும் ஏழை, எளிய, மக்களுக்கும் கிடைக்கும் நாள்தான் உண்மையான சுதந்திர நாளாக இருக்கமுடியும்..." என்கிறார் புகழேந்தி.