Published:Updated:

'இது 15 நாள் ஆபரேஷன்!'

பெங்களூரு கூடுதல் கமிஷனர் சொல்லும் சீக்ரெட்

பிரீமியம் ஸ்டோரி

தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் ஏற்கெனவே காவிரி பிரச்னை இருந்து வரும் நிலையில் ஜெயலலிதாவுக்கு கர்நாடகாவில் தீர்ப்பு வழங்கப்படுகிறது என்றதும் இரு மாநில நல்லுறவுக்கு இடையூறு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்வு நிலவி வந்தது. கர்நாடக காவல் துறை பாதுகாப்புக்கு இது பெரும் சவாலாகவே அமைந்தது.

ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோதும் கர்நாடகாவில் சிறு அசம்பாவிதமும் இல்லாமல் திறம்பட செயல்பட்டிருக்கிறது கர்நாடக காவல் துறை. அந்த டீமின் தலைவரும், பெங்களூரு குற்றவியல் கூடுதல் கமிஷனருமான ஹரிசேகரன் ஒரு தமிழர். அவரைச் சந்தித்தோம்.

'இது 15 நாள் ஆபரேஷன்!'

ஒரு மாநிலத்தின் முதல்வரும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உடையவருமான ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு கர்நாடகாவில் வழங்கப்பட்டபோது அதனால் சிறு அசம்பாவிதம்கூட நிகழாமல் சட்டம் ஒழுங்கை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து விட்டீர்களே?

''அந்த வெற்றி முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கும், எங்கள் காவல் துறைக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். 15 நாட்களுக்கு முன்னதாகவே எங்கள் போலீஸாருக்கு தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு, தீர்ப்பை காண வருபவர்களுடைய உணர்வுகள் ஆகியவை குறித்து தெளிவாக விளக்கி இருந்தேன். அதுமட்டுமல்ல, கர்நாடக எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களின் எஸ்.பி-கள் மற்றும் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளிடம் நானே நேரடியாகப் பேசினேன். கார், பஸ், ரயில் போன்றவற்றில் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதைக் கணித்து வைத்திருந்ததோடு இரு மாநில எல்லைகளிலும் டிராஃபிக்கைக் கட்டுப்படுத்த 100 சிறப்பு செக்போஸ்ட்கள் அமைக்க ஏற்பாடு செய்திருந்தேன்.

தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும், அந்த வாகனங்களுக்குக்கூட சிறு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற விஷயங்களில் முன் எச்சரிக்கையோடும், விழிப்பு உணர்வோடும் செயல்பட்டோம். இது எங்கள் டீமுக்குக் கிடைத்த வெற்றி. வீரப்பன் தேடுதல் வேட்டையும், நக்சல் ஆபரேஷனும் எனக்கு முன் அனுபவங்களாக இருந்தன. என்னை நம்பி இந்தப் பணிகளை பெங்களூரு சிட்டி கமிஷனர் எம்.என்.ரெட்டி கொடுத்தார். அதை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்.''

என்னென்ன திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினீர்கள்?

''இந்த ஆபரேஷன் 15 நாட்கள் நடந்தது. இதற்காக, தீர்ப்புக்கு 15 நாட்களுக்கு முன்பு இருந்து  இரவு, பகல் பாராமல் உழைத்தோம்.          1. சி.எம் செக்யூரிட்டி 2. ஹெலிகாப்டர் செக்யூரிட்டி 3. ரூட் செக்யூரிட்டி 4. நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கான செக்யூரிட்டி                 5. பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு 6. தமிழக அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மேயர்களுக்கு என தனி வி.ஐ.பி கேலரி என்ற ஏற்பாடுகளுடன் பாதுகாப்பு அளித்தோம். அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல், போக்குவரத்து, எல்லைப் புறங்கள் என எங்கள் பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்தி இருந்தோம். இதற்காக மத்திய ஆயுதப் படை, உளவுப் பிரிவு, விசேஷ காவல் படை முதலியவற்றைப் பயன்படுத்தி இருந்தோம்.''

தீர்ப்பின் தகவல் முன்கூட்டியே உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா?

''தீர்ப்புப் பற்றி எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை. தீர்ப்பு எப்படி வந்தாலும் வரக்கூடியவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தோம். எந்த விதத்திலும் கர்நாடக - தமிழக நல்லுறவுக்குப் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற உயர்வான நோக்கத்தை மனதில் வைத்து செயல்பட்டோம். எங்கள் டீமை கமிஷனர் பாராட்டியதோடு, கர்நாடக முதல்வரும் பாராட்டி இருக்கிறார். இதை என் சர்வீஸின் மைல்கல்லாகக் கருதுகிறேன்.''

தற்போது வரை ஜெயலலிதாவை பார்வையிட வரும் தமிழக அமைச்சர்களை கர்நாடக போலீஸார் மரியாதைக் குறைவாக நடத்துவதுபோல இருக்கிறதே?

''இது முழுக்க முழுக்க வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். எல்லா அமைச்சர்களும், எம்.பி-க்களும், எம்.எல்.ஏ-க்களும், மேயர்களும் வி.ஐ.பி-க்களும் சிறைக்குப் பார்க்க வரும்போது சிறைத் துறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு சிறை காவல் துறையை அணுகலாம். இதற்கும் காவல் துறைக்கும் சம்பந்தம் இல்லை. இதுவரை கர்நாடக காவல் துறை யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தவில்லை. யாரும் இதுபற்றி என்னிடம் புகாரும் தெரிவிக்கவில்லை.''

இன்னும் பெங்களூரு முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?

''ஆமாம்! பெங்களூரு சிட்டி உட்பட அந்த ஏரியா முழுவதும் பாதுகாப்பில்தான் இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

சிறைக்குள் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் எப்படி இருக்கிறார்கள்? வெளி ஆட்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்களா?

''ஸாரி. இதைச் சிறைத் துறையினரிடம்தான் கேட்கவேண்டும்.''

- வீ.கே.ரமேஷ்

படம்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு