பிரீமியம் ஸ்டோரி

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

'ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்பது நடைமுறையில் உண்டுதானே?

இந்தக் கேள்வி இந்த வாரத்தில் எப்படிச் சரியாக வருகிறது?

கழுகார் பதில்கள்!

ஓஷோவின் விளக்கம் என்ன தெரியுமா? 'சொர்க்கமும் உண்டு. நரகமும் உண்டு. உங்களுக்குச் சொர்க்கம் கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை உங்களுக்கு வழங்கியது யார்? கடவுளா? விதியா? அல்லது வேறு யாருமா? இல்லை... நீங்கள்தான். உங்களைத் தவிர வேறு யாராவது உங்கள் நரகத்துக்குக் காரணம் என்று நீங்கள் நினைத்தால், அந்த எண்ணம் நீங்கும் வரை உங்களால் நரகத்தைவிட்டு வெளியே வர முடியாது!’

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

கழுகார் பதில்கள்!

கருணாநிதியின் இப்​போதைய நினைப்பு எதுவாக இருக்கும்?

பெங்களூரு தீர்ப்பு டெல்லி வழக்கிலும் எதிரொலித்துவிடக் கூடாது என்பதாக இருக்கும். விக்கிரவாண்டி நகராட்சி பற்றியெல்லாம் விழுந்து விழுந்து அறிக்கைவிடும் கருணாநிதி, பெங்களூரு வழக்கு தீர்ப்பு பற்றி கருத்தே சொல்லாமல் இருப்பது 2ஜி வழக்கின் தீர்ப்பு பயம்தான். எந்தத் தீர்ப்புக்காகக் காத்திருந்தாரோ அதனை அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு நெத்தியடியாக அது அமைந்து போய்விட்டது. ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்கும் பெருத்த பீதியைக் கொடுத்துவிட்டது.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

இன்றைய காலகட்டத்தில் கடைசி வரை ஒருவரால் நேர்மையாக வாழமுடியுமா?

பேராசை இல்லாவிட்டால், கடைசி வரை நேர்மையாக இருக்க முடியும். ஏற்கெனவே ஒருமுறை சொல்லப்பட்ட மேற்கோள்தான், 'ஒரு நேர்மையாளனை விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த உலகம் வசதி படைத்தது அல்ல’. இது முதலாம் கிரிகோரி சொன்னது!

இதையே கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம். 'ஒரு பேராசைக்காரனைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு இந்த உலகம் பணம் படைத்ததும் அல்ல!’

லத்தீன் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. 'கை நிறைய பணம் உள்ளவனைவிட தூய்மையான கைகளுக்கே கடவுள் மதிப்பு அளிக்கிறார்’.

கு.மனோகரப்பாண்டியன், கோட்டார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் மாற்றங்களுக்கு எதிர்க் கட்சிகள் உறுதியான கண்டனக் குரல் எழுப்பவில்லையே, ஏன்?

நாளை இவர்கள் ஆட்சி வந்தாலும் நேர்மையான அதிகாரிகளின் கதி இதுதான் என்பதால் இருக்கலாம். தி.மு.க ஆட்சியிலும் சகாயம் இப்படித்தான் பந்தாடப்பட்டார். நாளை ஆட்சி மாறினாலும் இப்படி நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்

இன்றைய அரசியலில் எது சகஜமாகிவிட்டது? அன்றைய அரசியலில் எது சகஜமாய் இருந்தது?

யாரோடு சேர்ந்தாலும் பரவாயில்லை, எந்தக் கொள்கையை விட்டுக் கொடுத்தாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும், பதவியை அடைந்து விடவேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இன்றைய அரசியல்.

தன் மனதுக்குச் சரி என்று பட்டதைச் செய்வது, அதற்கு எதிர்ப்பு வந்தால் பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவதுதான் அன்றைய அரசியல்.  தமிழகத்தின் முதல், முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமியைப் போல அப்பழுக்கற்ற நேர்மைக்கு உதாரணமாக இன்னொருவரைக் காட்ட முடியாது. எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, சொந்த காங்கிரஸ் கட்சியிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு. யாருக்காகவும் எதையும் விட்டுத் தரமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்த ஓமந்தூரார், பதவியைவிட்டு விலகி சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பார்த்தாரே தவிர, சமரசம் செய்துகொண்டு பதவியில் தொடரவில்லை. அன்றைய அரசியல்வாதிகளின் அருங்குணமும் பெருங்குணமும் அது. இன்றைய நிலைமை சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

காலத்தால் அழியாதது என்கிறார்களே... எதைச் சொல்கிறார்கள்?

பழியும், புகழும்தான். பணம் குறைந்துபோகும். பதவி முடிந்துபோகும். புகழ், மரணம் வரை தொடரும். பழி, மரணத்துக்குப் பிறகும் தொடரும்!

செ.அ.ஷாதலி, தென்காசி.

தமிழகத்தில் தீராத பிரச்னைகளைக் கொஞ்சம் வரிசைப்படுத்துங்களேன்...?

1. தமிழகத்தின் இயற்கை வளம் அனைத்தும் கொள்ளை போய்க்கொண்டு இருக்கின்றன.

2. அரசு நிர்வாகம் ஊழல் மயமாகிக்​கொண்டு இருக்கிறது.

3. கல்வி முழுக்க தனியார் மயமாகி​விட்டது.

4. மருத்துவத்துக்குச் செலவு செய்யப்படும் தொகை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது.

5. மதுக்கடைகளால் மக்களின் மனித சக்தி நாசமாகிக்கொண்டு இருக்கிறது.

இந்த ஐந்தையும் உடனடியாகத் தடுத்துத் தீர்வு காணாவிட்டால் மிகப்பெரிய பாதாளத்துக்குத் தமிழகம் போய்விடும்.

என்.காளிதாஸ், சிதம்பரம்.

பெங்களூரு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்ததைப் பற்றி...?

30 ஆண்டு காலம் காக்கி உடையை அணிந்து தமிழக போலீஸில் உயர்பதவியில் இருந்து ஓய்வுபெற்று, இன்றைக்கு அ.தி.மு.க-வில்

10 ரூபாய் கொடுத்து உறுப்பினர் ஆகியிருக்கும் ஒருவர், 'மக்கள் கோபம்கொண்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள்’ என்று திருவாய் மலர்ந்துள்ளார். கடைகள் மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்து, பேருந்துகளுக்குத் தீ வைத்து ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத பந்த் நடத்திக்கொண்டு இருப்பதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார். அவர் காக்கி உடை அணிந்து சுழல் நாற்காலியில் சுற்றும்போது மக்கள் நடத்திய போராட்டங்களை இப்படித்தான் நினைத்துச் சும்மாவிட்டாரா? அல்லது கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை வீசச் சொன்னாரா?

எந்தக் கட்சி போராட்டம் நடத்தினாலும் மக்களுக்குப் பாதுகாப்பைத் தரவேண்டியது காவல் துறையின் கடமை. அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நடந்த இந்த வன்முறைக் காட்சிகள் தவறானவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு