Published:Updated:

பெரியகுளம் பேச்சிமுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் ஆன கதை!

பெரியகுளம் பேச்சிமுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் ஆன கதை!

பிரீமியம் ஸ்டோரி

ஜாதகம், ஜோதிடத்தில் பேச்சிமுத்துக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. நியூமராலஜிஸ்ட் ஒருவரை பேச்சிமுத்து சந்தித்தபோது, 'தம்பிக்கு இந்தப் பேரு அதிர்ஷ்டம் இல்லையே... உன்னோட பொறந்த தேதியை வெச்சு கணக்குப் போட்டு பார்த்தேன். உன்னோட பேரை இப்படி மாத்தி வெச்சா நீ ஓஹோன்னு வருவே!’ என்று கூட்டி கழித்துப்போட்டு ஒரு சீட்டைக் கொடுக்கிறார் அவர். அதை வாங்கிப் பார்க்கிறார் பேச்சிமுத்து. அந்த சீட்டில் இருந்த பெயர் பன்னீர்செல்வம். அந்தப் பேச்சிமுத்துதான் இன்றைய தமிழக முதல்வரான ஓ.பன்னீர்செல்வம்!

பெரியகுளம் பேச்சிமுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் ஆன கதை!

இவரது அப்பா ஓட்டக்காரத்தேவருக்கு பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர். பழனியம்மாளைத் திருமணம் செய்துகொண்டு இவர் பெரியகுளத்தில் வந்து செட்டிலாகிறார். அந்தத் தம்பதியருக்குப் பிறந்த தலைச்சன் பிள்ளைக்கு 'பேச்சிமுத்து’ என்று பெயர் சூட்டுகிறார்கள். பெரியகுளம் எட்வர்டு நினைவு பள்ளியில் படிக்கும்போது இருந்தே கடவுள் பக்தி நிறைந்தவர் பேச்சிமுத்து. இனி பேச்சிமுத்துவை 'பன்னீர்செல்வம்’ என்றே அழைப்போம்.

பள்ளி படிப்புக்குப் பிறகு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவருக்கு சொந்த ஊரான பெரியகுளத்தை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை. அதனால் தன் நண்பன் விஜயனுடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடையோடு சேர்ந்த கேன்டீன் ஒன்றைத் தொடங்கினார். ஆரம்பத்தில் கேன்டீனில் எல்லா வேலைகளையும் பன்னீர்செல்வமே கவனித்திருக்கிறார். அப்பா இறந்த பிறகு பன்னீர்செல்வத்துக்கும் அவரது தம்பிகளுக்கும் பாகப்பிரிவினை நடக்க... பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் ஒரு வீட்டை வாங்கி அங்கே தன் மனைவியோடு தனிக்குடித்தனம் போயிருக்கிறார் பன்னீர்செல்வம். இப்போதும் அந்த வீட்டில்தான் பன்னீர்செல்வம் இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் என்றால் பன்னீர்செல்வத்துக்கு உயிர். அதுதான் அவரை அ.தி.மு.க உதயமானபோது உறுப்பினராக்கியது. 1982-ல் பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் என்பதுதான் அவருக்குக் கட்சியில் கிடைத்த முதல் பொறுப்பு. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகும் அவர் மீது இருந்த பற்றினால் இந்த மிஸ்டர் விசுவாசம், ஜானகி அணியில் தீவிரமானார். அந்தக் காலகட்டத்தில் போடி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவை எதிர்த்து பணியாற்றினார் பன்னீர்செல்வம். 1993-ம் ஆண்டு இவருக்கு பெரியகுளம் நகர கழகச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கொடுத்த வாய்ப்பு பன்னீருக்கு வெற்றி வாய்ப்பானது. 'நம்ம டீக்கடைக்கார தம்பிதான் தலைவராகியிருக்கு...’ என்று பெரியகுளம் முழுக்கவே அப்போது பேச்சாக இருந்தது. இப்படி பெரியகுளம் வட்டாரத்தில் மட்டுமே வலம் வந்த பன்னீர்செல்வத்துக்கு, 1999 நாடாளுமன்றத் தேர்தல் திருப்புமுனையாக அமைந்தது. பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தின் வீடு தினகரனின் தேர்தல் அலுவலகமாக மாறியது. தேர்தல் வரவு செலவு கணக்கைக் கவனிக்கும் பொறுப்பும் பன்னீருக்கு வழங்கப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்து முடிக்க... தினகரனின் நம்பிக்கைக்குரியவராக மாறினார் பன்னீர்.

பெரியகுளம் பேச்சிமுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் ஆன கதை!

அந்த நம்பிக்கைதான் அடுத்த சில மாதங்களில் அவரை தேனி மாவட்டச் செயலாளராக்கியது. 2001 சட்டமன்றத் தேர்தல் வந்தபோது தினகரனால் பெரியகுளம் தொகுதிக்கு முன்மொழியப்பட்ட பெயர் பன்னீர்செல்வம். சீட் கிடைத்தது. எம்.எல்.ஏ-வும் ஆனார். அவர் பெயரை அமைச்சர் பட்டியலிலும் பரிந்துரைத்து, 'பவர்ஃபுல்’லான வருவாய்த் துறையையும் வாங்கிக் கொடுத்தார் தினகரன். அந்த ஆண்டுதான் டான்சி வழக்குத் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார் ஜெயலலிதா. 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை 162 நாட்கள் தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றிபெற்றார். அதையடுத்து, 2002 மார்ச் மாதம் முதல்வர் பதவி மீண்டும் ஜெயலலிதா வசம் சென்றது. சில வருடங்களில் அ.தி.மு.க-வின் கழகப் பொருளாளர் பதவியை அவருக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. 2006 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பெருமளவில் தோல்வி அடைந்தபோதும் பன்னீர்செல்வம் ஜெயித்ததுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ஆனார். 2011 தேர்தலில் பெரியகுளம் தனி தொகுதியாக மாற்றப்பட்டதால், போடி தொகுதியில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது. அங்கேயும் ஜெயித்தார். ஜெயலலிதா அமைச்சரவையில் நிதி அமைச்சரானார். பிறகு பொதுப்பணித் துறையும் அவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஜெயலலிதாவுடன் தமிழகம் முழுவதும் சென்றவர் பன்னீர்செல்வம் மட்டுமே. அ.தி.மு.க-வில் சொல்லப்படும் புகார்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட, நால்வர் அணியில் பன்னீர்தான் முதல்வர்.

பெரியகுளம் பேச்சிமுத்து, முதல்வர் பன்னீர்செல்வம் ஆன கதை!

'பன்னீர்செல்வத்தின் மீது பல்வேறு புகார்கள் உள்ளது. அதனால், இந்த முறை அவருக்கு முதல்வர் வாய்ப்பு கிடைக்காது’ என்று முதல்வர் பதவிக்கு பலரின் பெயரும் சொல்லப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவோ, 'விசுவாசம் என்றால் அது பன்னீர்தான்! அவரைப் பற்றி எனக்குத் தெரியும்!’ என்று சொல்லாமல் சொல்வதைப்போல மீண்டும், அவரையே முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார்.

பன்னீர்செல்வம் குடும்பத்தில் பலரும் அ.தி.மு.க-வில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா பெரியகுளம் நகராட்சித் தலைவராக உள்ளார். மூத்த மகன் ஓ.ரவீந்திரநாத் குமார், அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளர். இளைய மகன் ஜெய பிரதீப்பும் கட்சியில் உறுப்பினர். மகள் கவிதா பானு, மருமகன் காசிராஜன் இருவரும் வழக்கறிஞர்கள்.

'நம்ம டீக்கடைக்கார தம்பி ரெண்டாவது தடவையா முதலமைச்சர் ஆகிடுச்சுப்பா...’ என்று பெரியகுளம் உற்சாகத்தில் இருக்கிறது. 'இந்தப் பதவி அம்மா எனக்குப் போட்ட பிச்சை. எனக்கு வாழ்த்து சொல்றேன்னு யாராவது போஸ்டர் அடிச்சீங்கன்னா நடக்குறதே வேற. எல்லோரும் அமைதியா அவங்கவங்க வேலையை மட்டும் பாருங்க... என்னோட பேரைச் சொல்லிட்டு யாராவது அங்கே ஆட்டம் போடுறீங்கன்னு தெரிஞ்சா நான் சும்மா இருக்க மாட்டேன்!’ - முதல்வராகப் பதவியேற்ற அன்று இரவு, பெரியகுளத்தில் உள்ள தன் உறவினர்களிடமும், கட்சிக்காரர்களிடமும் முதல்வர் பன்னீர்செல்வம் இப்படித்தான் போனில் கட்டளையிட்டாராம்.

இருக்காதா பின்னே... தலையில் இருப்பது முள்கிரீடம்தானே!

- உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு