Published:Updated:

“விசாரணைக் கமிஷன் அறிவிப்பு ஏன்?” விடை சொல்லும் ஸ்டாலின் #AIADMK

“விசாரணைக் கமிஷன் அறிவிப்பு ஏன்?” விடை சொல்லும் ஸ்டாலின் #AIADMK
“விசாரணைக் கமிஷன் அறிவிப்பு ஏன்?” விடை சொல்லும் ஸ்டாலின் #AIADMK

“விசாரணைக் கமிஷன் அறிவிப்பு ஏன்?” விடை சொல்லும் ஸ்டாலின் #AIADMK

“ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது மோசடித் திட்டம்'' என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து எட்டு மாதங்கள் கழித்து, அவரது மரணம் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தி.மு.க சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பிலும் ''ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று பல மாதங்களாகத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். ஓ.பன்னீர்செல்வமும், ''ஜெயலலிதா மரணத்தில் புதைந்துகிடக்கும் மர்மங்கள் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்'' என்று அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனுக் கொடுத்தார். ஆனால், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த பி.ஜே.பி அமைச்சர் வெங்கய்ய நாயுடு (தற்போது துணைக் குடியரசுத் தலைவர்), ''ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை'' என்று கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும், ''ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது'' என்று கூறியது.

இந்த நிலையில் கடந்த வாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அயனாவரத்தைச் சேர்ந்த மியாஜான் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் மர்மான முறையில் இருந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவை வெளியே காட்டவே இல்லை. ஜெயலலிதா உடலில் பல ஊசிகள் போடப்பட்டு இருந்ததற்கான தடயங்கள் இருந்தன. ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் அனைத்தும் சசிகலாவுக்குத்தான் தெரியும். எனவே, ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது. ஆகவே, ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து முன்னணி டாக்டர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய  உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும் மத்திய உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரி இருந்தார்.

இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ''இதே கோரிக்கையுடன், ஏற்கெனவே மூன்று வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த வழக்குகள் அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்குகளுடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தச் சூழ்நிலையில்தான், ''ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்; ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லம், பொதுமக்களின் பார்வைக்காக நினைவு இல்லமாக மாற்றப்படும்'' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ''சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று கூறிய பிறகும்கூட இப்படியொரு விசாரணைக் கமிஷனை அமைக்கவில்லை. மாறாக, 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று பேட்டியளித்த டாக்டர் சீதாவை ஒரு பெண் என்றும் பாராமல் கைதுசெய்து சிறையில் அடைத்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான். இப்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்ட போதெல்லாம் 'அதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது' என்று கூறி தட்டிக் கழித்தது மட்டுமல்ல... தடயங்களை முழுவதும் மறைக்க உதவி செய்தவர்கள்தான் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும். பன்னீர்செல்வம், முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் குழு அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக ஜெயலலிதா உடல்நிலை குறித்த மர்மங்களை மறைத்தார்கள். இந்தக் கூட்டணிதான் இப்போது விசாரணைக் கமிஷன் அறிவித்திருப்பதிலும் தொடர்கிறது.

இந்த இரு அணிகளுமே, தமிழகத்தை எப்படிக் கொள்ளையடிப்பது; அரசு கஜானாவை எப்படியெல்லாம் சுரண்டுவது; மெகா ஊழல்களில் எப்படி ஈடுபடுவது போன்றவற்றை மட்டுமே கலையாகக் கொண்டு ஆட்சியில் இருந்தவர்கள்... இருப்பவர்கள். ஊழல் கடலில் மூழ்கி நீச்சலடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அணி, 'ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக் கமிஷன்' என்று அறிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டு இரு அணிகளும் இணைந்து, சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தைத் தொடங்கப் போடுகிற மோசடித் திட்டம். ஆகவே, இந்தக் கண்துடைப்பு நாடகத்தை அவர்கள் கைவிட வேண்டும். அத்துடன், உண்மை வெளிவர வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி இந்த மர்ம மரணம் குறித்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு வழிவிட்டு, தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாகத் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ''ஆறேழு மாதங்களாக எல்லாச் சாட்சியங்களையும் அழித்துவிட்டு இப்போது ஏதோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். இந்தக் கமிஷன் ஜெயலலிதா மரணத்தை ஆய்வதற்காக அல்ல... இது, ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு இழுக்கும் தூண்டில். ஜெயலலிதா வீட்டை நினைவிடம் ஆக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் இப்போது சசிகலா ஜெயிலில் இருக்கிறார். உயிரோடு இருந்திருந்தால் ஜெயலலிதாவும் அங்குதான் இருந்திருப்பார். அவரது வீடு நினைவிடமாம். இதெல்லாம் இந்த ஆட்சியின் சாதனை என்பார்கள். தேர்தலை நோக்கித் தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதைத்தான் அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு