Published:Updated:

இழுபறியில் இணைப்பு முயற்சி! உள்துறையை ஓ.பன்னீர்செல்வம் குறிவைப்பது ஏன்?

இழுபறியில் இணைப்பு முயற்சி! உள்துறையை ஓ.பன்னீர்செல்வம்  குறிவைப்பது ஏன்?
இழுபறியில் இணைப்பு முயற்சி! உள்துறையை ஓ.பன்னீர்செல்வம் குறிவைப்பது ஏன்?

“இணைப்பு பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் இணைப்பு குறித்த அறிவிப்பு வந்துவிடும்” என்று பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் சமாதியில்  ஆரம்பித்த தர்ம யுத்தத்தை அதே சமாதியின் முன்பு முடித்துக் கொள்ள ஆசைபட்ட பன்னீர் தடாலடியாக பின்வாங்கி நிற்க என்ன காரணம்?...ஜெயலலிதாவின் சமாதி சீர்செய்யப்பட்டு போலீஸார் மெரீனா வீதியில் பாதுகாப்பு அணிவகுப்பும் நடத்திய பின் திட்டம் கடைசி நேரத்தில் அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைப்புதிட்டம் காலியானதற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது  கசியத் துவங்கியுள்ளன.

“அணிகள் இரண்டும் இணையவேண்டும். இனி டெல்லிக்கு தனித்தனியே வரக்கூடாது” என்று பெரிய அண்ணன்தனத்தை டெல்லி பி.ஜே.பி தரப்பு காட்டியது, இரண்டு அணிகளுக்குமே நெருக்கடியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் மேலுாரில் தினகரன் நடத்திய பொதுக்கூட்டமும், அதில் கணிசமான அளவில் எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதும் எடப்பாடி தரப்புக்கு  நெருக்கடியை ஏற்படுத்தியது. தினகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ-க்கள் சிலரை எடப்பாடி  தொடர்பு கொண்டு சில தினங்களுக்கு முன்பு பேசியுள்ளார். 

அவர்கள் “ ஆட்சியை கவிழ்க்கும் எண்ணத்துடன் நாங்கள் போகவில்லை். அன்பினால் போனோம், நீங்களும் அன்பாக அழையுங்கள், வருகின்றோம்” என்று தங்கள் தரப்பின் 'எதிர்பார்ப்பை' சொல்லியுள்ளார்கள். அதன்பிறகு தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை 'சரி செய்யும்' பணியை மூத்த அமைச்சர் ஒருவரிடம்  ஒப்படைத்தார் எடப்பாடி. அதே நேரம் 'பன்னீர் அணியின் இணைப்பை ஓருவாரத்திற்குள் முடித்துவிடவேண்டும்'  என்ற அஜென்டாவும் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்ட நான்கு மூத்த அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்களுடன் பன்னீர் தரப்பிலிருந்து ஆரம்பத்தில் மாஃபா.பாண்டியராஜன் தான் தொடர்ந்து பேசிவந்துள்ளார். பன்னீர் அணியின் மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இணைப்பு சாத்தியமில்லை என்ற தகவல் எடப்பாடிக்குச் சென்றது. அதன் பிறகு தான், அதிரடியாக தினகரன் பதவி செல்லாது என்று முதலில் அறிவித்தார்கள். அதன்பிறகு பன்னீர் அணியினர் இறங்கிவருவார்கள் என்று எடப்பாடி அணியினர் எதிர்பார்த்தனர். ஆனால், பன்னீர் அணியின் மைத்ரேயன், முனுசாமி, மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர்  நமது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினால் மட்டுமே இணைவோம்” என்று சொல்லி அப்போதே இணைப்புக்கு தடை ஏற்படுத்தினார்கள். 

ஆனால், அதன்பிறகு தினகரன் தரப்பின் செயல்பாடுகள் வேகமெடுத்தது. டெல்லி 'மேலிடம்' ஓ,பி.எஸ் தரப்பை தொடர்பு கொண்டு எதனால் இணைப்பு தள்ளிப்போகிறது என்று கேள்விமேல் கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். எடப்பாடி தரப்புக்கும் பிரஷர் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஒருநாள் மாலை எடப்பாடி வீட்டில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இரவு நெடுநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அந்த ஆலோசனையில் தான் “ஓ.பி.எஸ். தரப்பு வைத்திருக்கும் நிபந்தனைகளால் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை.அதை நிறைவேற்றிவிட்டு அவர்களை இணைவதற்கு வழி ஏற்படுத்துவோம்” என்று பேசியுள்ளார்கள். கட்சியில் ஓ.பி.எஸ்-க்கு முக்கிய பொறுப்பினை வழங்கிவிடுவோம் என அப்போது  ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த தகவல் பாண்டியராஜன் மூலம் பன்னீருக்கு சென்றுள்ளது. 


கட்சியை நடத்த வழிகாட்டு குழு அமைக்கப்பட்டால், அதில் இரண்டு அணிகளுக்கு சமமான வாய்ப்பு வழங்கவேண்டும். அதே போல் அமைச்சரவையில் மூன்று பேருக்கு தங்கள் தரப்பில் இடம் தரவேண்டும் என்ற  நிபந்தனை பன்னீர் தரப்பிலிருந்து சென்றது. பன்னீருக்கும், பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி தருகின்றோம். முனுசாமிக்கு கட்சியில் முக்கிய பதவியை தருகின்றோம் என்று அவர்கள் சொல்லியுள்ளார்கள். இறுதியாக வெள்ளிக்கிழமை காலை அன்று பன்னீர் தரப்பு பொதுப்பணித் துறை, உள்துறை, நிதித்துறை, உள்ளிட்ட துறைகளை தர ஒப்புக்கொண்டால் இன்று இரவே இணைப்பை அறிவித்துவிடலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஆனால், பழனிசாமி தரப்பில் 'பொதுப்பணித்துறையை விட்டு தரமுடியாது. நெடுஞ்சாலைத் துறையை தருகின்றோம். நிதித்துறையும், வீட்டுவசதித் துறையும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லியுள்ளார்கள். பழனிசாமி சொன்ன தகவலை வைத்து பன்னீர் வீட்டில்  வெள்ளிக்கிழமை மதியம் வரை ஆலோசனை செய்துள்ளார்கள். உள்துறையை விட்டுக்கொடுக்க வேண்டாம், என்று பன்னீர் செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அவர்கள் கைக்குள் இருப்பதுபோல, காவல்துறை நம்கைக்குள் இருக்க வேண்டும் அப்போது தான் நமக்கு பலம் என்று பன்னீரிடம் சொல்லியுள்ளார்கள். வழிகாட்டுதல் குழுவில் முக்கிய பொறுப்பு முனுசாமிக்கு வேண்டும், மனோஜ் பாண்டியன், பொன்னையன் உள்ளிட்ட பதினோரு நபர்களுக்கும் பதவிகள் வேண்டும் என்பதையும் பழனிசாமி தரப்பிடம் சொல்லியுள்ளார்கள். பன்னீர் அணியினர் எப்படியும் இணைந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் முதல்வர் அலுவலகத்திலிருந்தே, ஜெயலலிதா சமாதியை  அலங்கரிக்கும் உத்தரவு வந்துள்ளது. 

ஆனால், மாலையில் பன்னீர் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது. அதே நேரம் எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் ஆலோசனை நடைபெற்றது. இரண்டு தரப்பிலும் போனில் தகவல்களை பறிமாறிக்கொண்டார்கள். உள்துறையை மட்டும் கேட்க வேண்டாம் என்று எடப்பாடி அணியில் இருந்து வைத்த கோரிக்கை பன்னீர் அணியில் ஏற்றுக்கொள்ளவில்லலை. நெடுஞ்சாலைத் துறைக்கு பதிலாக பொதுப்பணித்துறையை தருகின்றோம் என்று பழனிசாமி தரப்பு இறங்கிவந்துள்ளார்கள். ஆனால், உள்துறையும் ஏனைய  பதவிகள் குறித்தும் எங்களுக்கு ஒப்புதல் வழங்கினால் தான் நாங்கள் வீட்டில் இருந்தே புறப்படுவோம் என்று பன்னீர் அணியினர் சொல்லிவிட்டார்கள். பன்னீர் அணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வேலுமணி ஒருகட்டத்தில் கடுப்பாகி, 'அவர்கள் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களிடம் நாம் தனியாகவே பேசிக்கொள்ளலாம், பதவியில் இல்லாதவர்கள் தான் இப்போது இணைப்பை தள்ளிப்போடுகிறார்கள்' என்று புலம்பியுள்ளார்கள்.

 
சனிக்கிழமை காலை பன்னீர் செல்வம் “ இணைப்புக்கு நமது அணியிலே ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், டெல்லியில் இருந்து பிரஸர் வந்துகொண்டே இருக்கிறது. நாமும் கொஞ்சம் இறங்கி போவோம்” என்ற தனது ஆதரவாளர்களிடம் சொல்லியுள்ளார். அருகில் இருந்த மைத்ரேயன் “ பிரதமரிடம் நான் பேசுகின்றேன். நீங்கள் அவசரப்பட்டு இறங்கி செல்ல வேண்டாம்” என்று சொல்லியுள்ளார். “உள்துறையை வாங்காமல் நாம் இணைப்புக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டாம். செம்மலைக்கும் மந்திரி பதவியை பெற்றுவிடவேண்டும்” என்ற முடிவில் பன்னீர் அணியில் சொல்லியுள்ளார்கள்.உள்துறையை விட்டுகொடுக்க பன்னீர் மறுப்பது ஏன் என்று எடப்பாடி அணிக்கு எச்சரிக்கை உணர்வு எட்டிபார்த்துள்ளது. இதனால் மீண்டும் இரு அணிக்குள் அடுத்த சுற்றுபேச்சுவார்த்தைகயில் இரண்டு முக்கிய நபர்கள் இறங்கியுள்ளார்கள். துறை மாற்றம் ஓ.கே.வானால் இணைப்பு அறிவிப்பு நாளை மறுதினமே வந்துவிடும் என்கிறார்கள். 

உள்துறையால் இப்போது இணைப்பு தள்ளிப் போகின்றது