Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

சுந்தரம், திருப்பூர்.

புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீங்கள் சொல்ல நினைப்பது...?

கழுகார் பதில்கள்!

நல்ல ஆட்சியாளர்கள், கெட்ட ஆட்சியாளர்கள் என வகைபிரித்து 500 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் மாக்கியவல்லி. அவரது வார்த்தைகளையே பன்னீருக்கு நினைவுபடுத்தலாம்:

அரசாளும் தலைவன் அவனது குடிமக்களால் பழிக்கப்படலாம். ஆனால் வெறுக்கப்படக் கூடாது.

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன், அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான்.

அதிகாரத்தால் வெகு சுலபமாகத் தனக்கொரு பெயரைச் சூட்டிக்கொள்ள முடியும். வெறும் பெயராலேயே தனக்கோர் அதிகார சக்தியை அடைய முடியாது.

நாடாளும் மன்னன், தேவை ஏற்பட்டால் ஒருவனது உயிரை வேண்டுமானால் பறிக்கலாம். ஆனால், அடுத்தவனது உடைமையைப் பறிக்கக் கூடாது. ஏனென்றால், மக்கள் தங்கள் தந்தையின் சாவைக்கூட மறந்துவிடுவார்கள். ஆனால், பரம்பரைச் சொத்து பறிபோவதை மட்டும் பொறுக்க மாட்டார்கள்.

 போத்திராசு, பள்ளிக்கரணை.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்’ என்று முன்பு தி.மு.க சொன்னது. இப்போது அ.தி.மு.க சொல்கிறதே?

தண்டிக்கப்படும்போதெல்லாம் எல்லோரும் சொல்வதுதான். எனவே, இது தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

 பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

'ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல்செய்ய பல வழிகள் இருந்தும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சரியான வழிமுறையைப் பின்பற்றி மனுத் தாக்கல் செய்யவில்லை’ என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் சொல்லியிருக்கிறாரே?

பொதுவாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும்போது, தீர்ப்பின் விவரங்களுக்குள்ளோ, தண்டனை பற்றியோ பேச மாட்டார்கள். அதைப் பற்றிப் பேசினால் ஜாமீன் கிடைக்காது. தங்களது உடல்நிலை, மனநிலை, குடும்பச் சூழ்நிலை ஆகியவற்றைக் குறிப்பிட்டே ஜாமீன் கேட்பார்கள். 'குறிப்பிட்ட முகவரியில் 30 ஆண்டுகளாக இருக்கிறேன், நான் 20 ஆண்டுகளாக வெளிநாடு சென்றதே இல்லை. எனவே, நான் தலைமறைவு ஆக மாட்டேன்’ என்று சொல்லிக் கேட்பார்கள். இப்படி பெர்சனலான காரணங்களைச் சொன்னால்தான், ஜாமீன் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், குறுக்கு விசாரணையில் சொல்ல வேண்டியதை எல்லாம் ஜாமீன் மனு விசாரணையில் சொன்னார்கள். அதனால்தான், ஜாமீன் மனுவை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி, 'சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது’ என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜாமீன் மனு சம்பந்தமான தீர்ப்பில், ஜாமீன் உண்டு, மறுக்கப்படுகிறது என்று மட்டும்தான் சொல்லப்படும். அதனைத் தாண்டி சொல்லியாக வேண்டிய அவசியத்தை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள்தான் உருவாக்கிவிட்டார்கள்.

 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

சிலேடையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவரான கி.வா.ஜகந்நாதன் பற்றி...?

ஒரு முறை இலக்கியக் கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு நண்பர்களுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் கி.வா.ஜ. வழியில் கார் பழுதடைந்து நின்றுவிட்டது. வயதில் பெரியவர் என்பதால் அவரை காரில் இருக்கச் சொல்லிவிட்டு, மற்றவர்கள் கீழே இறங்கி காரைத் தள்ள ஆரம்பித்தனர்.

கி.வா.ஜ-வுக்கு மனசு கேட்கவில்லை. தானும் இறங்கித் தள்ளுவதாகச் சொன்னார். நண்பர்கள் கேட்கவில்லை.

கி.வா.ஜ சட்டென சொன்னார். ''நான் என்ன தள்ளாதவனா?''

 ஸ்ரீராம், சேலையூர்.

கனிமொழி ஜாமீனில் வெளியில் வந்தபோதும், ஆ.ராசா ஜாமீனில் வந்தபோதும் தி.மு.க-வினர் இப்படித்தான் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இப்போது அ.தி.மு.க-வினரின் போராட்டம் கசப்புதான் என்ற போதிலும் அந்தக் கட்சிக்காரர்களின் உணர்வை மதிக்க வேண்டுமல்லவா?

அ.தி.மு.க-வினரை போராட்டம் நடத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமையே. ஆனால், இவர்கள் யாரை எதிர்த்து  போராடுகிறார்கள்? சட்டப்படி அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் தரும் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்குவதற்கு அநாகரிகமான முன்னுதாரணமாக இவை ஆகிவிடுகின்றன. ஊழல் வழக்கில் தரப்பட்ட தீர்ப்புக்கு எதிராகப் போராடுவது... அநாகரிகத்திலும் அநாகரிகம். இப்படியே போனால், பல்வேறு குற்ற வழக்குகளில்  தண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாகவெல்லாம் போராட ஆரம்பித்தால், நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட முடியும்.

இந்த விஷயத்தில் நடைபெற வேண்டியது சட்டப் போராட்டம் ஒன்றுதான். இதை அந்தக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் உணர்ந்து, அனைவரையும் அமைதிப்படுத்தியிருக்க வேண்டும். தேவைப்பட்டால், ஜெயலலிதா சட்டப்படி வெளிவருவதற்காக அமைதியான பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், இப்போதும்கூட கோயில் கோயிலாகக் கூட்டமாக போய் பொதுமக்களுக்கு பீதியைத்தான் உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எல்லாமே, ஆட்சி கையிலிருக்கிறது என்கிற தைரியத்தில் நடத்தப்படும் போராட்டங்களே. இதுவே வேறு கட்சி இங்கே ஆட்சியில் இருந்திருந்தால் இவர்களின் போராட்டங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட முன்னுதாரணங்கள் இருக்கின்றன!

 ரேவதிப்ரியன், ஈரோடு-1.

ரஜினி பி.ஜே.பி-யில் சேர வேண்டும் என்று தமிழிசை ஆசைப்படுகிறார். ஆனால் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்று இல.கணேசன் சொல்கிறாரே?

தமிழ்நாட்டில் பி.ஜே.பி ஏன் வளரவில்லை என்று தெரிகிறதா?

 எஸ்.அசோக், கோவை -27.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கருணாநிதி தன் மௌனத்தைக் கலைக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதியின் கஷ்டம் கருணாநிதிக்குத்தானே தெரியும்?

 ஆர்.அஜிதா, கம்பம்.

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற தேவகவுடா வலியுறுத்தி இருக்கிறாரே?

இதன்மூலமாக இரண்டு மாநில மக்களுக்கும் மோதல் வந்துவிடக் கூடாது என்பதால்தான் தேவகவுடா இப்படிச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கோரிக்கையை ஜெயலலிதாதான் வைக்க வேண்டும். பெங்களூருக்கு வழக்கை மாற்றிய உச்ச நீதிமன்றம்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும்.

 தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்?

பொதுவாக ஊழல் சம்பந்தமான வழக்கின் தீர்ப்புகள் இனி கடுமையாகத்தான் இருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

 கமலேஸ்வரன், சத்தியமங்கலம்.

'மக்களின் முதல்வர்’ ஜெயலலிதா என்று ஜெயா டி.வி. சொல்கிறதே. அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கு முதல்வர்... ஆடு, மாடு, கோழிகளுக்கா?

நீங்கள் ஆடு, மாடு, கோழி என்று யாரைச் சொல்கிறீர்கள்?

கழுகார் பதில்கள்!