Published:Updated:

சட்டவிரோத வழக்கை சட்டரீதியாக உடைத்தோம்!

ரிலீஸ் மகிழ்ச்சியில் வைகோ

 சட்டவிரோத வழக்கை சட்டரீதியாக உடைத்தோம்!

ஊழல் வழக்கில் சிக்கி ஜெயலலிதா சிறையில் இருக்க.... ஜெயலலிதாவால் சிறை வைக்கப்பட்ட வைகோ, பொடா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 19 மாதங்கள் அவரை சிறையில் அடைக்கக் காரணமான பொடா வழக்கை முழுமையாக ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நீதிமன்றத்துக்கு எதிராக அ.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக்கும்போது, 'நீதி வென்றது’ என்று போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துள்ளனர் ம.தி.மு.க-வினர். வைகோவை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

''உங்கள் மீதான பொடா வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பற்றி?’

''12 ஆண்டு கால சட்டப் போராட்டம், பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் இதைப் பார்க்கிறேன். கடந்த 13--ம் தேதி மதியம் மூன்றரை மணிக்கு கழகத்தின் சட்டத் துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் என்னை அழைத்தார். 'உயர் நீதிமன்றத்தில் பொடா வழக்கில் வெற்றி பெற்றுவிட்டோம். நீங்கள் தாக்கல்செய்த மேல் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் ஏற்று, பொடா சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்துவிட்டது. உங்கள் மீதான வழக்கில் பூர்வாங்க முகாந்திரம் இல்லை என்றும் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம் என்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ராஜேஸ்வரன், நீதியரசர் மதிவாணன் அமர்வு தீர்ப்பளித்துவிட்டது’ என்று தேவதாஸ் சொன்னார். இந்த சட்டப் போராட்டத்தை இடைவிடாது நடத்தியவர் வழக்கறிஞர் தேவதாஸ். அதனால், 'உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்’ என்று அவரிடம் சொன்னேன். அடுத்த சில நிமிடங்களில் எனது பொடா சகாக்களான கணேசமூர்த்தி, புலவர் செவந்தியப்பன், பூமிநாதன், அழகுசுந்தரம், கணேசன் ஆகியோர் என்னிடம் பேசி, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். நாங்கள் விடுதலை ஆகிவிட்டோம் என்பதைவிட நீதி வென்றது என்பதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சியே!''

''எந்தச் சூழ்நிலையில் அப்போது கைது செய்யப்பட்டீர்கள்?''

''காலச் சக்கரம் விசித்திரமான நிகழ்வுகளை அரங்கேற்றுகிறது. 2002-ம் வருடம் ஜூலை 11-ம் தேதி மாலையில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டேன். அன்றும் அ.தி.மு.க ஆட்சி. செல்வி ஜெயலலிதா அப்போதைய முதலமைச்சராக இருந்தார். அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கச் சென்றிருந்தேன். 'பொடா வழக்கு என் மீது பாய்ந்துவிட்டது. என்னைக் கைது செய்ய தமிழக காவல் துறை காத்திருக்கிறது’ என்று செய்தி அறிந்து, மூன்று நாள் முன்னதாகவே சென்னை வந்தேன். 1,000 போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். என்னைக் கைதுசெய்து காவல் துறை வேனில் ஏற்றி, முன்னும் பின்னும் எண்ணற்ற காவல் துறை வாகனங்கள் அணிவகுக்க இரவோடு இரவாக மதுரைக்கு அழைத்துப் போனார்கள். மதுரை நீதிபதி இல்லத்துக்குக் கொண்டு சென்று அவர் முன் நிறுத்தினார்கள். என்னைச் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்கள்.

'தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்’ என்று இந்திய நாடாளுமன்றத்தில் 2002 ஏப்ரல் 30-ம் தேதி நான் கூறியதை ஜூன் 29-ம் தேதி அன்று திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் மேற்கோள் காட்டிப் பேசியதற்காக என் மீது பொடா வழக்குப் பாய்ந்தது.''

 சட்டவிரோத வழக்கை சட்டரீதியாக உடைத்தோம்!

''தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம்தானே?''

''இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் ஆகாது என்ற கருத்தை முன்வைத்து வேலூர் சிறையில் இருந்தவாறு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறேன். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றம் அல்ல; பொடா சட்ட குற்றப் பிரிவுகள் இதற்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புத் தந்தது. ஜனநாயகத்தின் பேச்சுரிமைக்குக் காப்புரிமை பெற்றுத் தந்தேன். இப்போது சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இன்னொரு மைல் கல்!

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் என்னிடம், 'திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் நீங்கள் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று பேசினீர்களா?’ என்று கேட்டார். 'ஆமாம், நான் பேசினேன். விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன்’ என்று நான் சொல்லி முடிப்பதற்குள் நீதிபதி குறுக்கிட்டு, 'வைகோ அவர்களே! நிதானித்து யோசித்து அடுத்துச் சொல்லுங்கள்’ என்றார். 'நீதிபதி அவர்களே, இதுபற்றி நான் ஆழமாகச் சிந்தித்து விளைவுகளையும் யோசித்துத்தான் கூறுகிறேன். விடுதலைப்புலிகளை இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்,’ என்றேன். வழக்கு வந்ததும், சொன்னதை மறைக்கவில்லை. மறுக்கவில்லை. ஏனென்றால் என்னுடைய கொள்கையை மேலும் வலியுறுத்தும் மேடையாகத்தான் இந்த வழக்கைப் பார்க்கிறேன்!''

''இந்த வழக்கில் உங்களை மாட்ட வைக்க அ.தி.மு.க அரசு எடுத்த முயற்சிகள் என்னென்ன?''

''நாடாளுமன்றத்தில் குஜராத் விவகாரம் சம்பந்தமான விவாதம் அது. 'என்னைப் பார்த்து புலி ஆதரவாளர்’ என்று ஒருவர் குற்றம்சாட்டினார். அப்போது,  'விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்’ என்று நான் சொன்னேன். இப்படி நாடாளுமன்றத்தில் பேசியதாக மதுரை திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் குறிப்பிட்டேன். பேசிய என்னை மட்டும் கைது செய்யாமல் அந்த மேடையில் இருந்த ஈரோடு கணேசமூர்த்தி, வீர.இளவரசன்,  புலவர் செவந்தியப்பன்,  பூமிநாதன்,  அழகுசுந்தரம், பி.எஸ்.மணியன், மதுரை கணேசன், நாகராஜன் ஆகியோரையும் கைதுசெய்தார்கள்.

பூந்தமல்லியில் இதற்கான சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வேலூர் சிறையில் இருந்தபடி பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு நான் வந்து போனேன்.

பொடா சட்டத்தில் திருத்தம் செய்து சில உட்பிரிவுகளைச் சேர்த்து இந்திய அரசு நாடாளுமன்றத்தில் பொடா திருத்தச் சட்ட மசோதாவை தாக்கல் செய்தது. 'இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, நாடாளுமன்றத்தில் உரையாற்ற எனக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தேன். இது சம்பந்தமாக  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தேன். எனக்காக அன்றைய மூத்த வழக்கறிஞர் சந்துரு வாதாடினார். நீதிபதி, 'வைகோவை வேலூர் சிறையில் இருந்து காவல் துறை பாதுகாப்புடன் டெல்லிக்கு அழைத்துச் சென்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கச் செய்து, அவர் அங்கு பங்கேற்ற பின் அவரை திரும்ப வேலூர் சிறைக்குக் கொண்டு வர வேண்டும். வைகோ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது’ என்று தீர்ப்பளித்தார். அன்று இரவே அந்த உத்தரவுக்கு ஜெயலலிதா தடை வாங்கினார். என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்து, நாடாளுமன்றத்தில் பேசவிடாமல் செய்தார்.

மத்திய அரசு நியமித்த மறு ஆய்வுக்குழு என் மீதான வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தமிழக அரசு ஆட்சேபனை மனு தாக்கல் செய்தது. பொடா சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிரிவுகளைச் செல்லாததாக அறிவிக்கக் கோரியும் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். எங்கள் மீது வழக்குத் தொடுத்ததற்கு எந்த முகாந்திரமும் இல்லை. என்று மறு ஆய்வுக்குழு சொன்னதையும் ஏற்கவில்லை. அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று மனு போட்டார். நான் உச்ச நீதிமன்றம் சென்று இந்த வழக்குக்குத் தடை வாங்கினேன். அதன் பிறகுதான் தமிழக அரசு வழக்கை வாபஸ் வாங்குவதாக அறிவித்தது. இதனை பொடா நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றேன். அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யச் சொன்னார்கள். அதில்தான் இந்த வெற்றித் தீர்ப்பு வந்துள்ளது. இதில் என்னுடைய மகிழ்ச்சி என்ன தெரியுமா? சட்டவிரோதமான எங்களது கைது நடவடிக்கையை சட்டரீதியாக உடைத்தோம் என்பதுதான்.

இப்போது தலை நிமிர்ந்து, நீதிமன்றத்தின் மூலமாகவே வெளியில் வந்துவிட்டோம்!''

- கே.ராஜாதிருவேங்கடம்