Published:Updated:

'பரப்பன அக்ரஹாராவில் களி தின்ன முன்னாள் அமைச்சர்கள்!'

'பரப்பன அக்ரஹாராவில் களி தின்ன முன்னாள் அமைச்சர்கள்!'

ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த பரப்பன அக்ரஹாரா ஜெயில் ஏரியாவை பகல் பொழுதில்தான் பார்த்திருக்கிறோம். இரவில் பார்த்தால் என்ன என்று தோன்றியது. விட்டேன் ஜூட். நான் பெங்களூரு போய் சேர்ந்த அதே நாள் பகலில்தான் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது.

ஏசி எஃபெக்ட்டில் இருக்கிறது பெங்களூரு. வெள்ளை வேட்டி சட்டைக்கு மாறி, ஓசூர் சாலையில் நடந்தேன். அங்கிருந்துதான் பரப்பன அக்ரஹாரா ரோடு பிரிந்து செல்கிறது. பச்சை கலர் ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. ''ஜெயலலிதா ஜெயில்... பத்து ரூபா... வாங்க... வாங்க'' என்று தமிழிலேயே கூவிக்கூவி அழைத்தனர் ஆட்டோ டிரைவர்கள்.

''பரவாயில்லையே... நல்லா தமிழ் பேசுறீயே?''என்றபடி ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்.

'பரப்பன அக்ரஹாராவில் களி தின்ன முன்னாள் அமைச்சர்கள்!'

''நான் ஓசூர் பக்கத்துலதான் சார். இங்கே வந்து செட்டிலாகிட்டேன். கடந்த 21 நாட்களாக எங்களுக்கு நல்லா பொழப்பு ஓடுச்சு... ஆளுங்க வரட்டும் கிளம்பலாம் சார்...'' என்று சொன்னவரிடம், ''டீ சாப்பிடலாமா...'' என்று கேட்டேன். ''வாங்க சார்...'' என்று பக்கத்தில் இருந்த டீக்கடைக்கு அழைத்துப் போனார். இருவரும் டீ சாப்பிட்டோம். ''நேற்று மிட் நைட் நேரத்துல யாரோ ஒரு கட்சிக்காரர் திபுதிபுன்னு ஓடி வந்தாரு. 'நான் எம்.ஜி.ஆர் வந்திருக்கேன். வண்டியை எடு'ன்னாரு. தலையில வெள்ளை குல்லா... கறுப்பு கூலிங் கிளாஸ் வேற! ஏதோ லூஸு போலிருக்குன்னு நினைச்சு நழுவப் பார்த்தேன். என் சட்டையைக் கெட்டியாப் பிடிச்சுகிட்டாரு. 'என்னைக் கூட்டிக்கிட்டுப்போயி ஜெயில் வாசல்ல விடு... நான் ஜெயலலிதாவைப் பார்க்கணும்’னு சொன்னாரு. பணத்தை முதல்ல வாங்கிட்டு கொண்டு போய் இறக்கி விட்டுட்டு வந்தேன். நிறைய பேரு இப்படி கிளம்பிட்டாங்க சார்...'' என்றார். டீ சாப்பிட்டுவிட்டு ஆட்டோவுக்கு வந்தோம். கூட்டம் இல்லை. என்னை மட்டும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது ஆட்டோ. அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் ஜீப்பில், ''144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கு. கும்பலாகத் திரியக் கூடாது. கைது பண்ணிடுவோம். போயிட்டு நாளைக்கு வாங்க. ஜெயலலிதாவை நாளைக்குத்தான்  ரிலீஸ் பண்ணப் போறாங்க. போயிடுங்க..'' என்று தெளிவாக கன்னடத்தில் அறிவித்தபடியே சென்றனர். ஆனால், அ.தி.மு.க-வினர் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

பரப்பன அக்ரஹாரா ஜெயில் செக்போஸ்ட்டில் நான் இறங்கிக் கொண்டேன். அங்கே கூட்டம் அதிகமாகவே இருந்தது. அந்தக் கும்பலில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தேன். ''அம்மா ஜெயில்ல இருந்த காலத்துல ரூம்ல தங்காம இன்னோவா கார்லயே ஜெயில் வாசல்ல இருந்தது பூங்குன்றன் மட்டும்தான். பகல் முழுக்க அவரோட கார் நிற்கும். காருக்குள்ள உட்கார்ந்தபடியே எல்லோருக்கும் ஏதாவது தகவல் சொல்லிட்டு இருப்பாரு. ராத்திரியில அப்படியே ஒரு போர்வையைப் போத்திக்கிட்டு காருக்குள்ளேயே முடங்கிடுவாரு. அதேபோல வாரிசு தர்பாரும் இங்கே நடந்துச்சு. சத்தமே இல்லாம இங்கே பல வேலைகளை கவனிச்சுக்கிட்டது அமைச்சர்கள் பலருடைய வாரிசுகள்தான். அவங்க அத்தனை பேரோட கன்ட்ரோலும் 'கீஸ் ஹோட்டல்’ல இருந்துச்சு. அங்கேதான் இளவரசியோட மகன் விவேக் தங்கியிருந்தாரு. ஜெயிலுக்கும் வெளியில இருக்கும் நிர்வாகிகளுக்கும் இணைப்புப் பாலமாக இருந்தவரு அந்த விவேக்தான். அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போன வரைக்கும் அத்தனை வேலைகளையும் பார்த்தது விவேக்'' என்றவரிடம், ''அமைச்சர்களோட வாரிசுகள் யாரெல்லாம் வந்திருந்தாங்க?'' என்று கேட்டேன்.

''முதல்வர் மகன் ரவி,  மின்வாரிய மினிஸ்டர் மகன் அமர், உயர் கல்வி அமைச்சர் மகன் எழில். இந்த மூவரும்தான் ஜெயிலுக்கு வெளியே இருந்தவங்க. ஒவ்வொருத்தரும் தனித்தனி வேலையை ஒதுக்கிக்கிட்டு செஞ்சாங்க. மாலை நேரத்துல கூடி பேசிக்குவாங்க. அம்மாவுக்காக ஸ்பெஷலா சமைக்கிறதுக்கு செட்டிநாடு சமையல்காரங்களை வர வெச்சிருந்தாங்க... அவங்களோட சமையல்தான் ஜெயிலுக்குள்ளே போனது'' என்று சொல்லிக்கொண்டே போனார்.

செக்போஸ்ட்டுக்குப் பக்கத்தில் நின்றிருந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் சதீஷ்குமார். நம்ம தமிழ்நாட்டுக்காரர். பெங்களூரு கிழக்குப் பகுதியின் டெபுடி கமிஷனராக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு பெயில் என்ற அறிவிப்பு வந்துவிட்டதால், ஜெயிலை நோக்கிப் படையெடுக்கும் கட்சித் தொண்டர்களைக் கட்டுப்படுத்துவதில் பிஸியாக இருந்தார். செக்போஸ்ட்டுக்கு பக்கவாட்டில் தஞ்சாவூர் ரிஜிஸ்ட்ரேஷன் கார் ஒன்று நின்றிருந்தது. அந்த கார் பக்கத்தில் ஒதுங்கினேன். அவர்கள் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள்.  

''அம்மா தரப்பு வக்கீல் டீம் சொதப்பிட்டாங்க... சுப்ரீம் கோர்ட்ல நடராசனும் நம்ம திவாகரும் ஏற்பாடு பண்ணின சின்னம்மா டீம் வக்கீல்கள் கலக்கிட்டாங்க. அம்மா வெளியில வந்ததும் தனக்கு எதாவது பிரச்னை வந்துடுமோன்னு நம்ம பக்கத்து ஊரு மந்திரிதான் கிலிப்புடிச்சு திரியுறாரு...'' என்று காரில் உட்கார்ந்திருந்த ஒருவர் சொல்ல... ''அவருக்கு என்ன பிரச்னை?'' என்று கேட்டார் அருகில் இருந்தவர். ''இப்போ சின்னம்மா கை ஓங்க ஆரம்பிச்சிருக்குன்னு சொல்றாங்க இல்லையா... அதுதான் அவரோட பயத்துக்கு காரணம். சின்னம்மா உறவினர்கள் சிலரை அம்மா ஜெயில்ல பிடிச்சு போட்ட சமயத்துல இவருதான் அவங்களோட ஆதரவாளர்கள் லிஸ்ட்டை கொடுத்து 40 பேரை கட்சியில் இருந்தே தூக்க வெச்சாரு. அந்த பயத்துலதான் இளவரசியோட மகன் விவேக்கை சந்திச்சு பேசிட்டு இருக்காரு மந்திரி. தலை தப்புமான்னு பார்க்கலாம்...'' என்று அவர்களின் உரையாடல் தொடர, நான் அங்கிருந்து நகர்ந்தேன்.

அவர்கள் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. ஜெயில் நுழைவாயில் அருகே ஒரு குவாட்டர்ஸ் இருக்கிறது. அதன் வாசலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மேற்கு மண்டலத்தில் உள்ள முக்கியமானவர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. ''நாளைக்கு அம்மா வெளியில வரும்போது வரவேற்பு பலமாக இருக்கணும். உதிரிப்பூ நிறைய வாங்கிடுங்க. நம்ம ஆளுங்களை செக்போஸ்ட்ல இருந்து பூவோட நிற்கச் சொல்லிடுங்க. அம்மா கார் வரும்போது அவங்களை பூபோட்டு வரவேற்கணும்'' என்று உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் செங்கோட்டையன். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பெங்களூரைவிட்டு வராதவர்களில் செங்கோட்டையனும் ஒருவர். பரப்பன அக்ரஹாரா ஜெயில் ஏரியாவில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. முன்னாள்கள் அத்தனை பேருக்கும் முனுசாமி வீட்டில் இருந்துதான் சாப்பாடு. அதில் ஒரு முக்கிய அம்சமும் உண்டு. ஜெயலலிதா சிறையில் இருந்த நாட்களில் மதிய உணவுடன் ஸ்பெஷலாக களியும் பரிமாறப்பட்டது. 'அம்மா ஜெயில்ல இருக்கும்போது நாமும் களி திங்கிறதுதான் சரி’ என்று முனுசாமி சொல்லியிருக்கிறார். மற்றவர்களும் அதை ஆமோதித்து களி சாப்பிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த கட்சிப்பிரமுகர்களும் இதே சாப்பாட்டைச் சாப்பிட்டனர்.

அவர்கள் சொன்ன வீட்டை நானும் எட்டிப் பார்த்தேன். உள்ளே களியும் காரக் குழம்பு வாசமும் மணமணத்தது. வெளியே மழையும் தூர ஆரம்பிக்க நான் அங்கிருந்து கிளம்பினேன்.

'பரப்பன அக்ரஹாராவில் களி தின்ன முன்னாள் அமைச்சர்கள்!'