Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

ஈரம் சொட்டச் சொட்ட வந்து அமர்ந்தார் கழுகார். பெங்களூரில் இருந்து நமது நிருபர் அனுப்பியிருந்த செய்திகளை முழுமையாகப் படித்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

''பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார் ஜெயலலிதா. அவருடன் சசிகலாவும் இளவரசியும் வந்தனர். பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள், அடுத்து கிளம்பிய பயணிகள் விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டனர். ஜெயலலிதா முதல்வரும் இல்லை. எம்.எல்.ஏ-வும் இல்லை. ஆனாலும் ஏர்போர்ட்டின் வி.ஐ.பி கேட் வழியாகத்தான் அம்மா ரிட்டன் ஆனார். ஜெயலலிதாவின் வருகைக்காக ஏர்போர்ட்டில் திரண்டு விட்டார்கள் தொண்டர்கள். மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. அதனால் முக்கியத் தலைகள், எம்.எல்.ஏ-க்கள் சில அமைச்சர்கள் எல்லாம் காருக்குள்ளேயே பதுங்கியிருந்தனர். ஏர்போர்ட்டுக்கு வெளியே ஜெயலலிதா வரும் வழியில் தேங்கிய மழைநீரைப் பார்த்து கடுப்பான அமைச்சர் சின்னய்யா, அதிகாரிகளைப் பார்த்து சத்தம்போட... உடனே தண்ணீரை வெளியேற்றினார்கள். எந்தப் பதவியிலும் இல்லாத ஜெயலலிதாவை வரவேற்க, அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர். ஏர்போர்ட்டின் வெளியே குவிந்திருந்த தொண்டர்களைப் பார்த்ததும் ஜெயலலிதா முகத்தில் ஏக உற்சாகம். பெங்களூரில் இருந்து கிளம்பும் வரை, உம் நிருபர் குறிப்பிட்டிருந்ததைப் போல ஜெயலலிதாவிடம் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. சென்னைக்கு வந்து இங்கே கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்ததும் உற்சாகமாகக் கையசைத்தார்.''

''ம்..!''

''ஆறாம் நம்பர் கேட் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நின்றார். அந்த இடத்தில் கார் வந்தபோது, வேல்முருகனை சைகை செய்து அருகே அழைத்தார் ஜெயலலிதா. 'அம்மா எப்படியிருக்கீங்க?’ என்று வேல்முருகன் கேட்க, 'நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?’ என்றார். 'கோடானகோடி தமிழர்களுக்கு நீங்கதான் வழிகாட்டி. உங்களைத்தான் உலகத் தமிழர்கள் எல்லோரும் நம்பியிருக்காங்க’ என்று வேல்முருகன் சொல்ல... சிரித்தபடியே வணக்கம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். ஜெயலலிதாவுக்கு நேர் பின் சீட்டில் சசிகலாவும் டிரைவருக்கு பின் சீட்டில் இளவரசியும் அமர்ந்திருந்தனர்.

ஏர்போர்ட்டில் இருந்து கார்டன் வரை அ.தி.மு.க-வினர் வழிநெடுக நிரம்பி வழிந்தார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு யார் யார் எங்கே நிற்க வேண்டும் என்று முந்தைய தினமே பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தது. கோட்டூர்புரத்தை கடந்தபோது, வரசித்தி விநாயகர் கோயில் அருகே ஜெயலலிதாவின் கார் நிறுத்தப்​பட்டது. காரில் இருந்தபடியே ஜெயலலிதாவும் சசிகலாவும் கன்னத்தில் போட்டுக்கொண்டு விநாயகர் தரிசனம் செய்தனர். வழிநெடுக ஜெயலலிதாவின் கார் மீது பூ தூவி வரவேற்பு கொடுக்கப்பட்டது. மழையும் தூறிக்கொண்டு இருந்ததால், பூக்கள் கார் கண்ணாடி மீது ஒட்டிக் கொண்டன. இதனால் காரை ஓட்ட டிரைவர் ரொம்பவே சிரமப்பட்டார்.''

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

''போயஸ் கார்டனில் வரவேற்பு எப்படி?''

''போயஸ் கார்டன் திக்குமுக்காடிப் போனது. டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் இருந்து ஜெயலலிதாவின் கார் கார்டனுக்குள் செல்வதற்குள் பெரும் போராட்டமாகிவிட்டது. செய்தித் துறையின் தலைமைச் செயலக பி.ஆர்.ஓ கலையரசன் மற்றும் ஊழியர்கள், அரசு திரைப்படத் துறை பணியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். போயஸ் கார்டன் வாசலில் உள்ள விநாயகரைக் கும்பிட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றார் ஜெயலலிதா. அவர் உள்ளே நுழைந்ததும் அந்தப் பெரிய கேட் இழுத்து சாத்தப்பட்டது. உள்ளே இளவரசியின் மகள் பிரியா ஆரத்தி எடுத்து மூவரையும் வரவேற்றார்.''

''கார்டனுக்குள் என்ன நடந்தது?''

''பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த முதல்வர் பன்னீர்செல்வமும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் நேராக கார்டனுக்குப் போயிருக்கிறார்கள். அரை மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, 'பன்னீரை மட்டும் உள்ளே வரச் சொல்லுங்க...’ என்றாராம் ஜெயலலிதா. பன்னீர் பவ்யமாக உள்ளே போனதும் ஜெயலலிதாவின் காலில் விழுந்திருக்கிறார். எழுந்தபோது பன்னீர் கண்களில் கண்ணீர். 'இப்போ எதுக்காக அழறீங்க... போய் உங்க வேலையைப் பாருங்க. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு... ஆட்சியைக் கலைக்கணும் என்று ஆள் ஆளுக்கு அறிக்கைவிடுறாங்க. அப்படி ஒரு பேச்சே இனி வரக் கூடாது. அதிகாரிகளைக் கூப்பிட்டு ரெகுலரா மீட்டிங் போடுங்க. தேவைப்படும்போது நானே உங்களைக் கூப்பிடுறேன். என்ன செய்யணும் என்பதை நான் சொல்றேன். இப்போ நீங்க கிளம்பலாம்’ என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. ''

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

''வேற யாரும் பார்க்​கலையா?''

''ஷீலா பாலகிருஷ்ணனும், டி.ஜி.பி ராமானுஜமும் ஜெய​லலிதாவைப் பார்க்க அப்பாயின்மென்ட் கேட்டிருந்தனர். இந்த விஷயத்தை ஜெயலலிதாவுக்குச் சொன்னதும், 'எனக்கு யாரையும் பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை. இப்போ யாருக்கும் நோ அப்பாயின்மென்ட்’ என்று சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் கார்டனில் இருந்து அவர்கள் இருவருக்கும் சொல்லப்பட்டதாம். 'அவங்க எப்போ சொன்னாலும் நாங்க வந்து பார்க்கத் தயாராக இருக்கோம் என்பதை மறக்காமல் சொல்லிடுங்க’ என்று சொன்னார்களாம் அவர்கள். 'கார்டன் பக்கம் கட்சிக்காரங்க யாரும் வர வேண்டாம். கொண்டாட்டங்களை கட்சி ஆபீஸோடு வெச்சுக்கோங்க. அம்மா இப்போதைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்!’ என்று கார்டனில் இருந்து முக்கிய நிர்வாகிகளுக்குத் தகவல் போனது.''

''அப்புறம்?''

''ஜெயலலிதா வந்த அன்று இரவு போயஸ் கார்டன் வாசலில் நீண்ட நேரமாக ஜெயலலிதாவின் உடன்பிறந்த அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா காத்திருந்தார். இந்த விஷயம் ஜெய​லலிதாவுக்கும் சொல்லப்​பட்டது. ஆனால், என்ன காரணமோ தெரிய​வில்லை அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா சிறையில் இருந்தபோதே பெங்களூரில் தங்கி அவரைச் சந்திக்கப் பல்வேறு வகையில் முயற்சித்தார் தீபா. ஆனால், முடியவில்லை. கார்டனில் எப்படியும் அத்தை தன்னைப் பார்த்துவிடுவார் என்று கணவர் மாதவனுடன் வந்து காத்திருந்தார். ஆனால், தீபாவின் முயற்சி பலிக்கவில்லை.''

''தீபாவைப் பார்க்க மறுப்பதற்கு என்ன காரணம்?''

''ஜெயக்குமாரும் விஜயலட்சுமியும் திருமணம் முடிந்த கையோடு போயஸ் கார்டனில் ஜெயலலிதாவோடுதான் வாழ்ந்து வந்தார்கள். அங்கேதான் தீபா பிறந்தார். அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பில் ஜெயக்குமார் குடும்பம் கார்டனில் இருந்து வெளியேறியது. இடையில் ஜெயலலிதாவை தீபா எவ்வளவோ முறை சந்திக்க முயன்றும் முடியவில்லை. ஜெயக்குமார் குடும்பம் மீண்டும் கார்டனுக்குள் வருவதை அங்கிருக்கும் சிலர் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். அதனால்தான் இந்த முறையும் சந்திக்க முடியவில்லை என்கிறார்கள்'' என்றவர் டாப்பிக்கை மாற்றி மறுபடியும் பன்னீரைப் பற்றி சில விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

''முதல்வர் பன்னீர்செல்வம் தங்கி​யிருக்கும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை பங்களாவில் கடந்த 17-ம் தேதி கேம்ப் ஆபீஸ் தயாரானது. அங்கே முதல்வரின் செயலாளர்கள் உட்கார்ந்து பணிகளைச் செய்ய அறைகள் ரெடி. பன்னீர் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, அவரது செயலாளர்கள் யாரும் வீட்டுக்கு வரவில்லை. கோட்டையில் அவர்களது அறையில் இருந்தபடியே பணிகளைக் கவனித்து வந்தனர். இனி பன்னீர் வீட்டிலும் பணிகள் தொடரும் என்கிறார்கள்'' என்று சொல்லி முடித்த கழுகார், சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

''ஐப்பசி முதல் தேதிதான் ஜெயலலிதா வெளியே வந்தார். புரட்டாசி விரதமும் முடிய... அம்மாவின் கொண்டாட்டமும் சேர, திரும்பிய பக்கம் எல்லாம் பிரியாணி வாசம் தூக்கலாக இருந்தது. கோழிகளுக்குக் கடும் தட்டுப்பாடாம்'' என்றவர்,

''என் இனிய தீபாவளி வாழ்த்துகள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.  

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.நாகமணி,

சொ.பாலசுப்ரமணியன், ஜெ.வேங்கடராஜ்    

என்ன கொடுமை?      

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

விதவிதமான ஸ்டைலில் அ.தி.மு.க-வினர் தங்களது ஜெயலலிதா விசுவாசத்தைக் காட்டி வருகின்றனர். இதில் விளாத்திக்குளம் தொகுதி எம்.எல்.ஏ-வான மார்க்கண்டேயன் செய்திருப்பது உச்சகட்ட கொடுமை! மார்க்கண்டேயனின் மனைவி ரேபோஹாஅனிதா பிரசவத்துக்காக கடந்த 15-ம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'அம்மா ரிலீஸ் ஆகாமல் என் புள்ளை வெளியில வரக்கூடாது. எப்படியாவது ஊசி போட்டு பிரசவத்தை தள்ளிவைங்க டாக்டர்!’ என்று சொல்லியிருக்கிறார் மார்க்கண்டேயன்.

இதனை மருத்துவமனை தரப்பில் ஏற்கவில்லை. ஒருவழியாக அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி, டெலிவரி தேதியை தள்ளி வைத்துவிட்டாராம். அரசியல் லாபத்துக்காக இப்படி உயிரோடு விளையாடலாமா?

சத்தமில்லாத பன்னீர் கார்!

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட அதே நாள் காலை அ.தி.மு.க-வின் 43-வது ஆண்டு விழா அந்தக் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அந்த விழா முடிந்து, முதல்வர் பன்னீர்செல்வம் கிளம்ப... எதிரில் நடக்க முடியாமல் தட்டுத் தடுமாறி வந்தார் சுலோச்சனா சம்பத். அவரைப் பார்த்ததும் காரில் இருந்து கீழே இறங்கிவிட்டார் பன்னீர். 'வந்து என்னோட வண்டியில ஏறுங்க. நான் உங்களை வீட்டுல கொண்டுபோய் விடுறேன்’ என்று பன்னீர் சொல்லவே, பதறியபடி ஓடிவந்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள், 'சாரி சார்... உங்க வண்டியில் வேற யாரையும் ஏற்றக் கூடாது’ என்று சொல்லிவிட்டனர். சுலோச்சனா வந்த காரை எடுத்து வரச்சொல்லி, அவரை அதில் அனுப்பிய பிறகே பன்னீர் கிளம்பினார். முதல்வரின் காருக்கு முன் பைலட் கார் செல்வது வழக்கம். ஆனால் பன்னீரோ, 'எனக்கு முன்னால சைரன் வெச்ச கார் எதுவும் வேண்டாம். எல்லோரையும் பின்னால வரச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட... இப்போது பைலட் கார், பன்னீர் காருக்குப் பின்னால் வருகிறது. கட்சி அலுவலகத்தில் இருந்து பன்னீர் கார் முன்னால் செல்ல, அவருக்குப் பின்னால் பைலட் கார் சைரன் ஒலித்தபடி புறப்பட்டது. கார் கண்ணாடியை இறக்கிய பன்னீர், கையை வெளியே நீட்டி சைரனை ஆஃப் பண்ணுங்க என்று சைகையில் சொல்ல... சைரன் அணைக்கப்பட்டது. சத்தமில்லாமல் புறப்பட்டது பன்னீர் கார்.

தீபாவளி ரிலீஸ்!

தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே, தீபாவளியன்று ஒரு சில படங்கள் மட்டுமே ரிலீஸாகி வருகின்றன. இந்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி,’ ஹரி டைரக்ஷனில் விஷால் நடிக்கும் 'பூஜை,’ ப்ரவீன்காந்த் இயக்கத்தில் 'புலிப்பார்வை’ போன்ற படங்கள் வெளியாகின்றன. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ஐ’ தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் நவம்பர் மாதம் வெளியாகிறது. இந்தியா முழுதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஷாரூக்கின் 'ஹேப்பி நியூ இயர்’ தீபாவளி முடிந்து 24-ம் தேதி ரிலீஸாகிறது.

பழிவாங்குவார் ஜெயலலிதா!          

ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்த அதே நாளில் திருச்சியில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, 'மாநில முதல்வர் இப்போது சிறைக்குப் போய்விட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இவருக்கு முன்பைவிட இப்போது தி.மு.க மீது கோபம் அதிகமாக இருக்கும். முன்பாவது அவருக்கு அரசு வேலை இருந்திருக்கும். நான்கு மணி நேரமாவது அதில் கவனம் செலுத்தியிருப்பார். இனி அந்த வேலை இல்லை. அதனால் நம்மைப் பழிவாங்கத் துடிப்பார். அது மட்டும்தான் அவரின் வேலையாக இருக்கும். எனவே, நாம் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். இப்படியரு சூழ்நிலையில்தான் ஸ்ரீரங்கத்தில் தேர்தல் வர இருக்கிறது. அந்தத் தேர்தல் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்.

மிஸ்டர் கழுகு: ''பார்க்கவும் பிடிக்கலை... பேசவும் பிடிக்கலை!''

நிச்சயம் இந்த முறை தி.மு.க தலைமையில் மிகச் சிறந்த கூட்டணி அமையும். தி.மு.க-வில் நன்றாகப் பணியாற்றுபவர்களுக்கும், புதியவர்களுக்கும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 80 சதவிகிதம் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தலைமை விரும்புகிறது. உண்மையாகக் கட்சிக்கு உழையுங்கள். நிச்சயம் வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.

கடந்த இரண்டு தேர்தலில் தி.மு.க மிகவும் மோசமான தோல்வி அடைந்தது உண்மைதான். அதற்குக் காரணம் புதிய வாக்காளர்கள்தான். 2ஜி ஊழலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நம்மைத் தொடர்ந்து விமர்சித்து எழுதினார்கள். இப்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பிறகு, அ.தி.மு.க-வை விமர்சித்து எழுத ஆரம்பித்துவிட்டனர். சமீபகாலமாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அ.தி.மு.க-வை மட்டும் கடுமையாக விமர்சிக்கிறார். தேர்தல் என்றால் எப்போதும் மூன்றாவது அணி பல நேரங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும். கடந்த தேர்தலில் அப்படித்தான் அமைந்தது. வரப்போகும் தேர்தலிலும் நம் தலைவர் கலைஞர் நல்லதொரு வியூகம் வகுப்பார். நாம் ஆட்சியைப் பிடிப்போம்!'' என்று முழங்கினார்.