Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.

கழுகார் பதில்கள்!

  ஜெயலலிதாவுக்கு ஏன் தண்டனை கிடைத்தது என்று மக்களிடம் விளக்கம் சொல்ல தி.மு.க தயங்குவது ஏன்?

2ஜி வழக்கு, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு போன்றவை டெல்லியிலும் வருமானத்துக்கு அதிகமாக தி.மு.க அமைச்சர்கள் சொத்து சேர்த்த வழக்குகள் தமிழகத்திலும் நடந்து வருகின்றன. 'ஒரு விரல் அடுத்தவனை நோக்கி இருக்கும்போது, மூன்று விரல்கள் உன்னை நோக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதே' என்றார் அண்ணா. ஊழல்பற்றி பரஸ்பரம் பேசும் தகுதியை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இழந்துவிட்டனர். எனவேதான், ஜெயலலிதாவின் சொத்து வழக்குப் பற்றி பேச தி.மு.க தயங்குகிறது. இனி, எந்த முகத்தை வைத்துக்கொண்டு 2ஜி பற்றி அ.தி.மு.க பேசும்?

 அருள்பாண்டியன், இ-மெயில்.

ஒருவேளை 2016-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தி.மு.க-வின் மனநிலை என்னவாக இருக்கும்?

தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கிறது என்பதைத்தான் உணர வேண்டும். தி.மு.க-வைவிட, அ.தி.மு.க மீதான எதிர்ப்பும் கோபமும் குறைவாக இருந்திருக்கிறது என்பதை அந்த முடிவு உணர்த்துவதாக இருக்கும்.

 குருமது, இ-மெயில்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பதும், ஊழல் செய்து சொத்து சேர்ப்பதும் ஒன்றா?

மூக்கை எப்படித் தொட்டாலும் ஒன்றுதான்!

 மு.ஜெயப்பிரகாஷ், தச்சங்காட்டூர்.

'பா.ம.க-வினர் கலவரம் செய்ததாகக் கூறி நஷ்டஈடாக ரூ.100 கோடி கேட்டார்கள். அ.தி.மு.க-வினர் செய்த கலவரங்களுக்கு ரூ.710 கோடி கேட்க வேண்டும்' என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?

  ராமதாஸின் கோரிக்கை நியாயமானதுதான். ''பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பவர் எவராக இருந்தாலும், அவர்களிடம் அதற்கான நஷ்டஈட்டை பெறவேண்டும். தமிழகத்தில் செப்டம்பர் 27-ம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட சொத்து சேதங்களைக் கணக்கிட கமிஷன் அமைக்க வேண்டும். இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போடப்பட்டு உள்ளது. என்ன முடிவு வருகிறது என்பதைப் பார்ப்போம்!'

மு.முகமது ரியாஸ், பட்டுக்கோட்டை.

கவிஞர்களில் சிறந்த கவிஞன் யார்?

புதுக்கவிதைகளின் முன்னோடியான ந.பிச்சமூர்த்தி, 'யாருடைய கவிதையில் கற்பனை சக்தியும் கவிதை இன்பமும் உலகில் வற்றாத லீலைகளும் ஆழ்ந்த அத்யாத்ம அனுபவமும் வாழ்வின் சிக்கல்களுக்குச் சமாதானமும் தென்படுகிறதோ, அவனே மகாகவியாவான்' என்று சொல்கிறார்.

அவர் மகாகவியாகச் சொன்னது பாரதியை. 'எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பக்கூடிய மெட்டு, இவற்றினை உடைய காவியமென்று தற்காலத்திலேயே செய்து தருவோன், நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்' என்பது பாரதியின் கூற்று. 'கவி முற்றி யோகி ஆகிறான்’ என்கிறார் கு.ப.ரா.

சிறந்த கவிஞன் யார் என்பதை இவர்கள் மூவருடைய வாக்கில் இருந்து அறிந்து இனம் காணுங்கள்.

 பிரகாஷ் குமார், கோவை.

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க-வை எதிர்க்க மெகா கூட்டணி உருவாகுமா?

சந்தேகம்தான். தி.மு.க, தே.மு.தி.க, பி.ஜே.பி, பா.ம.க, ம.தி.மு.க ஆகியவை இணைந்தால் மெகா கூட்டணி எனலாம். அது சாத்தியம் இல்லை. பி.ஜே.பி, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க சேர்ந்த கூட்டணி, எதிரணியைத் தோற்கடிக்கும் பலம்கொண்டதாக அமையவில்லை என்பது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபணம் ஆனது. இன்றைய நிலைமையில் அந்தக் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை.

தி.மு.க அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளும் இப்போது கழன்று கொண்டுவிட்டது. எனவே, இன்றைய நிலவரப்படி மெகா கூட்டணி அல்ல, சாதாரண கூட்டணிகூட அமைய வாய்ப்பு இல்லை.

 வேல்முருகன், மொரங்கம்.

சிலப்பதிகாரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். யாருடைய நூலைப் பரிந்துரைப்பீர்கள்?

ஆய்வு நோக்கம் கொண்டவராக இருந்தால், உ.வே.சாமிநாத ஐயரின் பதிப்பு வாங்கிப் படியுங்கள். கதை உணர்வுக்காகப் படிக்க நினைத்தால், புலியூர் தேசிகன் உரை பொருத்தமானது. சிலப்பதிகாரத்தின் நோக்கத்தை அறிய வேண்டுமானால், ஜீவபற்று எழுதிய 'இளங்கோவடிகள் சமயம்’ நூலைப் படியுங்கள். தொ.மு.சி. ரகுநாதனின் 'இளங்கோவடிகள் யார்?’ என்ற புத்தகம் சிலப்பதிகாரத்தைப் பிரித்து மேயும் வரலாற்று நூல். எழுச்சியையும், உணர்ச்சியையும் தூண்டுவது கருணாநிதியின் சிலப்பதிகார நாடக காப்பியம். காப்பியத்தில் உள்ள கற்பனைகளை வாங்கி விளக்கங்கள் அளித்த பெருமை மயிலை சீனி.வேங்கடசாமியையே சாரும்.

 கணேஷ்குமார், சாத்தூர்.

ராமதாஸ் மட்டுமே ஜெயலலிதாவுக்கு எதிராக அறிக்கை வெளியிடுகிறாரே?

மாமல்லபுரம் சித்திரை விழா வன்முறைகளுக்காகத் திருச்சி சிறையில் சித்ரவதைச் செய்யப்பட்ட, கோபத்தைக் காட்ட ராமதாஸ் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார். எல்லாரும் பேசத் தயங்கிய நேரத்தில் ராமதாஸ் பேசவாவது செய்தாரே!

 எஸ்.முருகேசன், திருத்துறைப்பூண்டி.

ஜெயலலிதாவுக்குக் கொடுத்தது மாதிரி அவரது படம் போட்டு முழுபக்க விளம்பரம் பன்னீருக்குக் கொடுப்பார்களா?

விளம்பரம் கொடுப்பது இருக்கட்டும். பன்னீரை எதாவது புதிய திட்டம் தொடங்குவதற்காவது அனுமதிப்பார்களா? தீபாவளிக்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கியபோதுகூட புரட்சித் தலைவியின் ஆலோசனையின் பேரில் என்றுதானே அறிக்கை வந்தது!

 கார்த்திகேயன், திருச்சி.

ஸ்ரீரங்கம்?

நாராயணா!

கழுகார் பதில்கள்!