ஸ்ரீரங்கம் ரகசியம் சொல்லும் பிரவீன்குமார்
புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணியில் பரபரப்பாக இருக்கிறார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார். ''ஆன்லைனில் வாக்காளர் பதிவு முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆன்லைன் முறை மிகவும் எளிதானது. பெயர் மாறிப்போவது, எழுத்துப்பிழை, புகைப்பட குளறுபடி போன்ற

பிரச்னைகள் ஆன்லைன் பதிவுகளில் வர வாய்ப்பு இல்லை. கடந்த முறை பட்டியலில் இணைந்தவர்களில் 20 சதவிகிதம் பேர் ஆன்லைன் விண்ணப்பதாரர்கள். அக்டோபர் 15 முதல் நவம்பர் 10 வரை வாக்காளர் சேர்ப்புப் பணி நடைபெறும். 01-01-2015 அன்று 18 வயது நிரம்பியவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தாலுக்கா அலுவலகங்களில் கிடைக்கும். புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் 6-ம் எண் படிவத்தையும் பெயர் நீக்க விரும்புகிறவர்கள் 7-ம் எண் படிவத்தையும் பெயர் திருத்தம்செய்ய விரும்புகிறவர்கள் 8-ம் எண் படிவத்தையும் முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் 8-ஏ எண் படிவத்தையும் பயன்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புபவர்கள், தங்களது பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், முகவரி மற்றும் வயதுக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
''வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா?''
''இளைஞர்களின் பதிவு விகிதம் குறைவாகவே உள்ளது. 67 சதவிகிதம் இளைஞர்கள் மட்டுமே பதிவுசெய்து உள்ளனர். இந்த முறை, இளைஞர்கள் ஆர்வமுடன் பெயரைப் பதிவு செய்ய வைப்பதற்கான சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருந்து மொத்தம் 1,400 மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்களுக்கு சில பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அவர்கள் தங்கள் கல்லூரிகளில் வாக்களிப்பது தொடர்பான விழிப்பு உணர்வு முகாம்களை நடத்த உள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், விளம்பரப் படங்கள் போன்றவற்றின் மூலமும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம். வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே பெயர் பதிவுசெய்து அடையாள அட்டை வைத்திருந்தாலும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் இருக்கிறதா என்பதைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை டைப் செய்து 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், தற்போதைய நிலவரம் அவர்களுக்குத் தகவலாக அனுப்பி வைக்கப்படும்.''
''மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு தொடர்பாக, சில அரசியல் கட்சியினர் விமர்சனங்களைக் கூறி வருகிறார்களே?''
'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்த முடியாதவை. குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை மாற்ற முடியும் என்று சிலர் கூறுகிறார்கள். அது தவறான கருத்து. கணினி போன்ற சாதனங்களில் வேண்டுமானால் அப்படி மாற்றிக்கொள்ளலாம். ஆனால், இது கால்குலேட்டர் போன்ற ஒன்று. நீங்கள் அதில் வாக்குகளைப் பதிய மட்டுமே முடியும்.''
''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்துவிட்டார்களா?''
''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 845 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 768 பேர் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர். 77 பேர் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அவர்களுக்கு மூன்று வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது.''
''ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன?''
''சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியதால், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஜெயலலிதா இழந்துள்ளார். எந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லையோ, அதுகுறித்து சட்டசபை செயலாளர் எங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், இதுவரை ஸ்ரீரங்கம் தொகுதி குறித்த தகவல் எதுவும் எங்களுக்கு முறைப்படி வரவில்லை. ஆனாலும், நாங்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அதன்படி, இன்னும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டோம். இடைத்தேர்தலில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றைச் சமாளிப்போம்.''
- மா.அ.மோகன் பிரபாகரன்