Published:Updated:

`தலைவர் பதவியை பட்டியலின பிரிவுக்கு எப்படி ஒதுக்கலாம்?!’ - ராஜினாமா செய்த 6 வார்டு உறுப்பினர்கள்

பிச்சிவிளை ஊராட்சி

``எங்க எதிர்ப்பை தெரியப்படுத்ததான் பதவியை ராஜினாமா செஞ்சிருக்கோம்” என்கிறார்கள் பிச்சிவிளை ஊராட்சியின் 6 வார்டு உறுப்பினர்கள்.

`தலைவர் பதவியை பட்டியலின பிரிவுக்கு எப்படி ஒதுக்கலாம்?!’ - ராஜினாமா செய்த 6 வார்டு உறுப்பினர்கள்

``எங்க எதிர்ப்பை தெரியப்படுத்ததான் பதவியை ராஜினாமா செஞ்சிருக்கோம்” என்கிறார்கள் பிச்சிவிளை ஊராட்சியின் 6 வார்டு உறுப்பினர்கள்.

Published:Updated:
பிச்சிவிளை ஊராட்சி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிச்சிவிளை ஊராட்சி. இங்கு, மொத்தம் 824 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2 குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. அப்போதே ஊர் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதே தேர்தல், கடந்த 2020-ல் நடந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து, ஊர் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். இவ்வூராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு யாருமே வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

ராஜேஸ்வரி - பிச்சிவிளை ஊராட்சி மன்றத் தலைவி
ராஜேஸ்வரி - பிச்சிவிளை ஊராட்சி மன்றத் தலைவி

அதிகாரிகள் நான்கு முறை சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் போனது. இந்த நிலையில், இதே ஊரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, சுந்தராச்சி ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். தேர்தல் நாளில் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மொத்தம் 13 வாக்குகள் மட்டுமே பதிவானது. இதில், 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ராஜேஸ்வரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஊராட்சியின் 1வது வார்டு உறுப்பினராக வைகுண்டச்செல்வி, 2வது வார்டு உறுப்பினராக கேசவன், 3வது வார்டு உறுப்பினராக நடராஜன், 4வது வார்டு உறுப்பினராக சுஜாதா, 5வது வார்டு உறுப்பினராக யாக்கோபு, 6வது வார்டு உறுப்பினராக பரிமளச்செல்வி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். 23-ம் தேதி நடந்த துணைத் தலைவர் தேர்தல் நாளன்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த 6 வார்டு உறுப்பினர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - எம்.பி., கனிமொழி
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - எம்.பி., கனிமொழி

இதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதையடுத்து திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவும் மீனவர் நலன், மீன் வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “இந்த ஒரு தடவை அந்தம்மா தலைவரா இருந்துட்டுப் போகட்டும். அடுத்த எலக்‌ஷன் நேரத்துல உங்க கோரிக்கையை அரசு கவனத்துக்கு எடுத்துட்டுப் போவோம். ஊராட்சி நிர்வாகம் சிறப்பா நடக்க எல்லாரும் ஒத்துழைப்பு தரணும்” என 6 வார்டு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார். விவகாரத்தைக் கேள்விப்பட்டு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியும் பேச, ஊர் முக்கியஸ்தர்களும் 6 வார்டு உறுப்பினர்களும் முடிவில் உறுதியாக இருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையிலும் பலனில்லாமல் போனதால் மாவட்ட ஆட்சியரும் குழம்பிப் போனார். பதவியை ராஜினாமா செய்த வார்டு உறுப்பினர்களில் ஒருவரான கேசவனிடம் பேசினோம், “இந்த சுத்து வட்டாரப் பகுதி முழுவதும் நாங்க ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்கதான் இருக்கோம். இந்த ஊராட்சி தொடக்கத்துல இருந்து தலைவர் பதவி இட ஒதுக்கீட்டில் பொது பிரிவிற்காகத்தான் ஒதுக்கப்பட்டு இருந்துச்சு. ஆனா, இந்த தடவை தலைவர் பதவி பட்டியலின பெண்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கு.

வி.சி.க ஆர்ப்பாட்டம்
வி.சி.க ஆர்ப்பாட்டம்

இதை எதிர்த்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினோம். 785 பேர் இருக்குற எங்க ஊராட்சியில வெறும் 6 பேர் மட்டும் இருக்குற பட்டியலின பிரிவுக்கு ஒதுக்கியது அரசோட தப்புதான். மெஜாரிட்டி ஒரே பிரிவு மக்களா இருக்கும் போது எப்படி இந்த இட ஒதுக்கீட்டை ஏத்துக்க முடியும்? தலைவர் பதவி, 6 வார்டு உறுப்பினர் பதவின்னு எந்தப் பதவிக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்யாமலும், ஓட்டுப் போடாமலும் தேர்தலைப் புறக்கணிக்கிறதுன்னு ஊர்ல கூடிப்பேசி முடிவெடுத்தோம்.

எங்க பேச்சை மீறி 2 பட்டியலின குடும்பமும் வேட்புமனுத்தாக்கல் செய்ய மாட்டாங்கன்னு நினைச்சோம். ஆனா, 2 ஓட்டு இருக்குற வீட்டுல சுந்தராச்சியும், 4 ஓட்டு இருக்குற ராஜேஸ்வரியும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செ ஞ்சாங்க. பதிவான 13 ஓட்டுல 10 ஓட்டு வாங்குன ராஜேஸ்வரி ஜெயிச்சாலும், வார்டு உறுப்பினர்கள் இல்லாத தலைவர் பதவி சும்மா பேருக்குதான். எங்க ஊருக்கு எந்த வசதியும் கிடைக்காம போனாலும் பரவாயில்ல. தலைவர் பதவியை பழைய படி பொதுப்பிரிவுக்கே ஒதுக்கீடு செய்யணும். எங்க கோரிக்கையை அரசு ஏற்கும் வரை ஊராட்சி நிர்வாகத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தர மாட்டோம்” என்றார் ஆவேசமாக. வார்டு

வார்டு உறுப்பினர் கேவன் - ஆட்சியர் செந்தில் ராஜ்
வார்டு உறுப்பினர் கேவன் - ஆட்சியர் செந்தில் ராஜ்

ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரியிடம் பேசினோம், “நான் தலைவர் பதவிக்கு வருவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. பதவிக்கு வந்ததும் எனக்குள்ள பொறுப்பை உணர்ந்தேன். ஊரே எனக்கு எதிரா இருக்குற நிலையில பேசாம நாமளும் ராஜினாமா செஞ்சுட்டா என்னன்னுதான் தோணுச்சு. நம்மளால முடிஞ்ச நல்லதைச் செய்வோம்னுதான் இப்பொ வரைக்கும் பதவியில இருக்கேன்.

நான் ஊருக்குள்ள நடந்து வந்தாக்கூட, என்னைப் பார்த்ததும் நிறைய பேரு ஒதுங்கித்தான் போறாங்க. உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம்னு அந்த ஆறு பேர்கிட்டயும் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். ஆனா, அவங்க யாருமே கேட்கல. ராஜினாமா கடிதங்களை என் கையிலக்கூட தராமா “இந்தா பிடி”ன்னு மேசையில வச்சுட்டுப் போயிட்டாங்க. அவங்களோட இந்த செய்கைகளால எனக்கு கோபம் வரலை. வைராக்கியம் இன்னும் கூடுது. பட்டியலின பெண் பதவியில இருக்கக்கூடாதா?” என்றார். மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜிடம் பேசினோம், “பிச்சிவிளை ஊராட்சியின் 6 வார்டு உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கடிதம் மட்டுமே தலைவரிடம் கொடுத்துள்ளார்கள்.

பிச்சிவிளை ஊராட்சி
பிச்சிவிளை ஊராட்சி

அவர்களின் ராஜினாமா தற்போது வரை ஏற்றுக்கொள்ளப் படவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் மினிட் புத்தகத்தில் தீர்மானமாகக் கொண்டு வந்தால் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். அவர்களை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். அத்துடன், தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் துணைத்தலைவர் தேர்தல் நடத்திட தேதி பெற்று துணைத்தலைவரை தேர்வு செய்திடவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism