2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார். அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ராகுல் காந்தி, "ஏன் அனைத்துத் திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், சூரத் மேற்கு பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான பூர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதில் ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து அவரின் வழக்கறிஞர், மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்ற யூகங்கள் பரவலாகப் பேசப்பட்டுவருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்வதைத் தடுப்பதற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தை `முட்டாள்தனமானது’ என்றும், அதைக் கிழித்து குப்பையில் வீச வேண்டும் என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். ஒருவேளை அந்தச் சட்டம் இருந்தால் இன்று ராகுல் பதவி காப்பாற்றப்பட்டிருக்குமோ என்ற கேள்வி எழுகிறது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் என்னதான் நடந்தது?
கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது பிரதமராக மன்மோகன் சிங் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அது குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்வதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இதற்கு அந்த நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அவர், "இந்த அவசரச் சட்டம் முட்டாள்தனமானது. எனவே, அதைக் கிழித்து குப்பையில் வீச வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

பழுத்த அரசியல்வாதியான மன்மோகன் சிங்கைக் கடுமையாக அவர் விமர்சித்திருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு எதிராக காங்கிரஸ் மூத்த கட்சியினரே எதிர்வினையாற்றியிருந்தனர். குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய், "ராகுல் பேச்சு வரம்பு மீறியது. இதற்காக அவர் உடனே பதவி விலக வேண்டும்" என்று கூறினார். மேலும், மன்மோகனும் தனது ஆதங்கத்தை சோனியா காந்தியிடம் வெளிப்படுத்தினார்.
பின்னர் மன்மோகனுக்கு இ-மெயில் மூலமாக விளக்கம் அனுப்பிய ராகுல், "அவசரச் சட்டத்தை கொண்டுவரும் முடிவை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக்க முயல்கின்றன. எனவேதான் நான் இப்படியொரு கருத்தை வெளியிட்டேன். நான் உங்கள்மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் அரசை வழிநடத்திவருகிறீர்கள். எனவே. நான் எதற்காக இப்படிப் பேசினேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
எனவேதான் ``தற்போது அந்த அவசரச் சட்டம் இருந்திருந்தால், ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவி குறித்த பல்வேறு யூகங்கள் எழாமல் இருந்திருக்கும்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் அவர்கள் "விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் ராகுலுக்கு எதிராக மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும்பட்சத்தில், அது ராகுலுக்குதான் மைலேஜ் ஆகும்" என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.