குடியரசு தின விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நாள்களில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மல்லமூப்பம்பட்டி பகுதியில் கிராமசபைக் கூட்டம், ஊராட்சித் தலைவர் பேச்சியம்மாள் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

அப்போது சேலம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் முருகன், மல்லமூப்பம்பட்டி பகுதியிலுள்ள மூன்று சுடுகாடுகளைக் கண்டுபிடித்துதரக் கோரியும், ஊராட்சிப் பகுதியில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டைக் கண்டித்தும், தாரை, தப்பட்டை அடித்தபடி பாடையைக் கட்டிக்கொண்டு மனு அளிக்க ஊர்வலமாக வந்தார்.
கூட்டத்தில் மல்லமூப்பம்பட்டி பகுதியில், குப்பைகளைச் சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்று புகார் தெரிவித்த முருகன், ``மல்லமூப்பம்பட்டி பகுதியில் மூன்று சுடுகாடுகள் இருக்கின்றன. ஆனால், அதிக அளவில் கொட்டப்படும் குப்பைகள், கழிவுகளால் அந்தச் சுடுகாடுகள் காணாமல்போய்விட்டன. தற்போது அந்தப் பகுதியில் வீசும் துர்நாற்றத்தால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகிவருகின்றனர். ஒருசிலர் இறந்தும்விட்டனர். இது குறித்து பல கிராமசபைக் கூட்டங்களில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கிராமசபைக் கூட்டத்திலும் முறையிடுகிறேன், இந்த முறையாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஜல்ஜீவன் திட்டத்தில் ஒருசில இடங்களில் குழாய்கள் மட்டுமே பதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், குடிநீர் வருவதில்லை, முறைகேடு நடந்திருக்கிறது" என்றார்.

பா.ஜ.க ஒன்றியத் தலைவர் முருகன் பல்வேறு குறைகளைக் கூறி முறையிட்டதால், ஊராட்சித் தலைவர் ஆதரவாளர்களுக்கும், முருகனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.