Published:Updated:

`6 வருடங்களாக மனதில் இருந்த ஆசை இது!’ - மோடிக்குக் கோயில் கட்டிய திருச்சி தொண்டர்

மோடி கோயில்
மோடி கோயில்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, திருச்சி பி.ஜே.பி தொண்டர் ஒருவர் தனது வயலில் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து உள்ளது எரகுடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சங்கர், பி.ஜே.பி கட்சியின் தொண்டராகவும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் கிராமத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு பானுமதி என்கிற மனைவியும், தீபா, சதீஷ்குமார் மற்றும் சூர்யா உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் தீபா மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பொறியியல் படித்தவர்கள். மூன்றவது மகன் சூர்யா, மருத்துவர் கனவுடன் நீட் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். சங்கர், அவரின் சொந்த ஊரான எரகுடியில் அவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சிறிய அளவில் கோயில் கட்டியுள்ளார். அதில் பிரதமர் மோடியின் மார்பளவு சிலை வைத்து தினமும் வழிபட்டு வருகிறார்.

மோடி கோயில்
மோடி கோயில்

கோயிலுக்குள் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோர் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில், தினமும் பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர் சங்கர், ``பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எல்லோரையும்போல எனக்கு மிகவும் பிடிக்கும். கட்சியைத் தாண்டி பிரதமர் மோடி நல்ல மனிதர். அவர்மீது எனக்கு அளவில்லாத பிரியம். அதன் காரணமாகவே அவருக்குக் கோயில் கட்டி வழிபாடு நடத்த விரும்பினேன்.

கடந்த சில வருடங்களாக விவசாயம் பாதிக்கப்பட்டதால் கோயில் கட்டுவது தள்ளிப்போனது. யாருடைய உதவியும் இல்லாமல் சொந்தச் செலவில் கோயில் கட்ட விரும்பியதால் தொடர்ச்சியாக முயற்சி செய்துவந்தேன்.

சங்கர்
சங்கர்

எங்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில் பருத்தி, மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளேன். வறுமையின் காரணமாக நான் பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் எழுதப்படிக்கக் கூட தெரியாது. நான்தான் படிக்கல, பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்துள்ளேன். மகள் 12 -ம் வகுப்பில் 1105 மதிப்பெண் பெற்றார். ஆனால், கட் ஆப் இல்லாததால் டாக்டராக ஆக முடியவில்லை. நீட் தேர்வு இல்லாதிருந்தால் என் மகள், டாக்டராகி இருப்பார். அதனால், சின்ன பையனை நீட் கோச்சிங்கில் சேர்த்துள்ளேன்.

`6 வருடங்களாக மனதில் இருந்த ஆசை இது!’ - மோடிக்குக் கோயில் கட்டிய திருச்சி தொண்டர்

விவசாய நிலத்திலேயே வீடுகட்டி வாழ்கிறோம் என்பதால், கழிப்பறை இல்லாமல் சிரமப்பட்டோம். இந்த நிலையில், மத்திய அரசு கழிவறை கட்டிக்கொடுத்துள்ளது. மேலும், நிலத்தில் மத்திய அரசு வழங்கும் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீர் பாசனம் செய்துள்ளேன்.

மோடி கோயில்
மோடி கோயில்

அதுதான், இவ்வளவு வறட்சியிலும் விவசாயம் செய்ய மிகவும் பயன்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு வழங்கும் 6,000 பணம் உள்ளிட்ட மத்திய அரசின் விவசாய நலன் திட்டங்கள் பரவாயில்லை. அதுமட்டுமல்லாமல், மோடி கொண்டுவந்த முத்தலாக் சட்டம், காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கண்டது என மோடியின் திட்டங்கள் மிகவும் பிடித்துப்போயின. அதன்காரணமாக கடந்த 6 வருடங்களாக கோயில் கட்ட நினைத்த ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்தேன்.

கடந்த சில வருடங்களாக விவசாயம் பாதிக்கப்பட்டதால் கோயில் கட்டுவது தள்ளிப்போனது. யாருடைய உதவியும் இல்லாமல் சொந்தச் செலவில் கோயில் கட்ட விரும்பியதால் தொடர்ச்சியாக முயற்சி செய்துவந்தேன்.

இந்த வருடம் இப்பகுதியில் பெய்த சுமாரான மழையால் விவசாயத்தில் ஓரளவு பலன் கிடைத்தது. அதையடுத்து, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோயிலின் கட்டுமான பணியை துவங்கினேன். தற்போது கோயில் கட்டி முடித்துள்ளேன். கோயிலைக் கட்சியின் மூத்த தலைவர்களை அழைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதற்கான முயற்சியில் உள்ளேன். மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என பழநி கோயிலுக்கு வேண்டிக்கொண்டேன். கடந்த ஒருவருடமாக முடி வளர்த்து வருகிறேன். கும்பாபிஷேகத்தை நல்லமுறையில் முடித்துவிட்டு, பழநி கோயிலில் நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்தி தங்கத்தேர் இழுக்க உள்ளேன்" என்றார்.

குடும்பத்தாருடன் சங்கர்
குடும்பத்தாருடன் சங்கர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர்ப் பகுதியில் உள்ள முஸ்லிம் பெண்கள் இணைந்து, முத்தலாக் திருத்தச் சட்டம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்த பிரதமர் மோடிக்குக் கோயில் கட்டுவதாக முடிவெடுத்தனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்ட பி.ஜே.பி தொண்டர் ஒருவர், சொந்தச் செலவில் பிரதமர் மோடிக்கு கோயில் கட்டியிருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு