Published:Updated:

``கோயில் நிலத்தை ஆக்கிரமித்தாரா ராமதாஸ்?''- ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டும் பா.ம.கவினரின் பதிலும்!

ராமதாஸ்
ராமதாஸ்

``சென்னை மவுன்ட் ரோட்டில், தாமஸ் மவுன்ட்டுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தை அபகரித்துவிட்டார் என ராமதாஸின் மீதே வழக்கு நடந்துகொண்டிருக்கிறது."

அசுரன் படம் வெளியாகி ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் அதனால் உண்டான அரசியல் விவாதம் இன்னும் அனல் பறக்கிறது. தூத்துக்குடியில் படம் பார்த்துவிட்டு, பஞ்சமி நிலம் குறித்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்ட ஒரு ட்வீட்டும் அதற்கு பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் `முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலம்தான்’ என்று போட்ட பதில் ட்வீட்டும் அரசியல் தளத்தில் மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது. இருவருக்குமிடையே கருத்து யுத்தமாகத் தொடங்கிய விவாதம் பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஶ்ரீனிவாசன், தேசிய பட்டியல் இன நல ஆணையத்தில் புகார் அளித்த பிறகு வேறு பாதைக்குத் திரும்பியது. தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஒரு வாரத்தில் அதுகுறித்து விசாரித்து பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது தேசிய பட்டியல் இன நல ஆணையம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதன் தொடர்ச்சியாக, முரசொலி அறக்கட்டளையின் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடந்த திங்கட்கிழமை ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில், முரசொலி அலுவலக இடம் தொடர்பான சான்றிதழ்களுடன் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில், நவம்பர் 19 -ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கறிஞர்களுடன் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் ஆஜரானார்.

முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை. மாறாக, ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையைத்தான் தி.மு.க செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தைக் காட்டுங்கள். அதுதான் அறம். அதுதான் நேர்மை!
மருத்துவர் ராமதாஸ்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,

``முரசொலி விவகாரத்தில் புகார் தந்த சீனிவாசன் அவகாசம் கேட்டுள்ளார். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. தலைமை செயலாளரான சண்முகம் அவகாசம் கேட்டுள்ளார். முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளன. முரசொலி விவகாரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் தலையிட உரிமையில்லை. ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் இது போன்ற பொய்யான தகவல்களை அளித்து வருகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

அதோடு, ``சட்டப்படி இதுகுறித்து புகார் அளித்தவர் மீது மானநஷ்ட வழக்கு போடப்போகிறோம். அதேபோல, முதன்முதலில் இதைக் கிளப்பிய டாக்டர் ஐயாவுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் யார் யாருக்குச் சொந்தம் என்பது, நாங்கள் வழக்கு போட்டபிறகு ஒவ்வொன்றாக வெட்டவெளிச்சமாகும்.

இந்த வழக்கில் எப்போது அழைத்தாலும் ஆஜராக உள்ளோம். இங்கு இல்லை; டெல்லிக்கு அழைத்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என ஆணையரிடமே சொல்லிவிட்டு வந்துவிட்டோம்..'' எனக் கூறினார்.

ஓ.பி.எஸ்ஸை புறக்கணித்த அமைச்சர்கள்? - அ.தி.மு.க-வில் சலசலப்பை உண்டாக்கிய வரவேற்பு

ஆனால், ``அரசு தரப்பில்தான் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது நான் கேட்கவில்லை'' என ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் பா.ஜ.க மாநிலச் செயலாளர் ஶ்ரீனிவாசன்.

தி.மு.க தரப்பில் மூலப்பத்திரம், ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மு.க.ஸ்டாலின் காட்டிய பட்டாவைக் கூட ஆணையத்தில் வழங்கவில்லை. அரசு தரப்பில்தான் அவகாசம் கேட்டுள்ளனர். நாங்கள் கேட்கவில்லை. 2020 ஜனவரி வரை விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீனிவாசன், மாநிலச் செயலாளர் பா.ஜ.க.

இது ஒருபுறமிருக்க, ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டுக்கு, பதிலளிக்கும் விதமாக மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

``முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத தி.மு.க, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாகக் கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தைக் கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்'' என ட்வீட் செய்திருந்தார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

இந்தநிலையில், ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம்,

``சென்னை மவுன்ட் ரோட்டில், தாமஸ் மவுன்ட்டுக்கு அருகில் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தை அபகரித்துவிட்டார் என ராமதாஸின் மீதே வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதே மாதிரி பல சர்ச்சைக்குரிய நிலங்கள் ராமதாஸிடம் இருக்கின்றன. இந்தநிலையில்தான் அவர் முரசொலி நிலம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். தொடந்து அவர் இப்படிப் பேசினால் நிச்சயம் அவர்மீது அவதூறு வழக்கு தொடருவோம். அப்போது எல்லாம் வெளியில் தெரியவரும்'' என்றார் அவர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ம.க செய்தித் தொடர்பாளர் வினோபாவிடம் பேசினோம்,

``ஆர்.எஸ்.பாரதியின் சவாலை ஐயாதான் ஏற்றுக்கொண்டார். ஐயாவின் ட்வீட்தான் இறுதி பதில். வேறு எதுவும் சொல்வதற்கில்லை'' என பதிலளித்தார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு