Published:Updated:

பி.டி.ஆர் Vs அண்ணாமலை - பொதுவெளியில் முற்றும் மோதல்... என்ன நடக்கிறது?!

பி.டி.ஆர் Vs அண்ணாமலை

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான வார்த்தைப் போர் முற்றியிருக்கிறது.

பி.டி.ஆர் Vs அண்ணாமலை - பொதுவெளியில் முற்றும் மோதல்... என்ன நடக்கிறது?!

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான வார்த்தைப் போர் முற்றியிருக்கிறது.

Published:Updated:
பி.டி.ஆர் Vs அண்ணாமலை

சமீபகாலமாக, பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் இணக்கமான உறவைப் பேணிவருகிறார். இந்த நேரத்தில், தி.மு.க அரசுமீது கடும் விமர்சனங்களைத் தொடர்ச்சியாக எழுப்பிவரும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. கடந்த மாதம் மதுரையில் நடந்த காலணி வீச்சு சம்பவத்துக்குப் பிறகு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே தொடங்கிய வார்த்தைப் போர், தற்போது தீவிரமடைந்திருக்கிறது.

பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சு
பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீச்சு

கடந்த மாதம், காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரின் உடல் விமானம் மூலமாக மதுரைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு சென்ற அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பா.ஜ.க-வினர் செருப்பு வீசினர். அது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சம்பவம் தொடர்பாக, பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதன் பிறகு, பா.ஜ.க-வின் மதுரை மாவட்டத் தலைவராக இருந்த மருத்துவர் சரவணன், பா.ஜ.க-விலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘மதுரை சம்பவம்’ தொடர்பாக அண்ணாமலை பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், அண்ணாமலையைப் பெயர் குறிப்பிடாமல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக விமர்சித்தார். “தேசியக்கொடி பொருத்தப்பட்ட கார் மீது காலணியை வீச ஏற்பாடு செய்தது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாகப் பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் அவர், தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு” என்று அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிடாமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பி.டி.ஆர் பதிவிட்டிருந்தார்.

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்
பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

அதற்கு, “பெரிய பரம்பரையில் பிறந்தவர் என்பதைத் தவிர, பயனுள்ள செயல் எதையும் செய்திருக்கிறீர்களா? முன்னோர்களின் இனிஷியல்களில் மட்டுமே வாழ்பவர்களுக்கு, ஒரு விவசாயி மகன் வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களைப் போன்ற சாதாரண மக்களைப் புரிந்துகொள்ளும் மனநிலை தங்களுக்குத் தேவை” என்று ட்விட்டரில் எதிர்வினையாற்றினார் அண்ணாமலை.

இந்த மோதல் விவகாரத்தில், பி.டி.ஆருக்கு ஆதரவாக தி.மு.க-வினர் சிலரும் களமிறங்கியிருக்கிறார்கள். தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளரான வழக்கறிஞர் சரவணன், “அண்ணாமலை அவர்களே... உண்மையில் பி.டி.ஆர்-தான் சுயமாக உருவானவர். தன் முன்னோர்கள் பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர் சுயமாகப் படித்து, அறிவைப் பெற்றார். அந்தப் படிப்பறிவு மூலம் அவர் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் ஆனார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

பரம்பரை காரணமாக இந்த இடத்துக்கு அவர் வரவில்லை. இது போன்ற லாஜிக்கெல்லாம் உங்களுக்கு வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தில் கற்றுத்தர மாட்டார்கள்” என்று அண்ணாமலையை விமர்சித்தார்.

தி.மு.க-வின் தருமபுரி தொகுதி எம்.பி-யான டாக்டர் செந்தில்குமாரும் அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிடாமல் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டார். “முழுக்க விரக்தியின் வெளிப்பாடு. அவரின் செயல்பாடு குறித்து கட்சி மேலிடம் மகிழ்ச்சியாக இல்லை. அவரைக் கண்காணிப்பதற்கு ஓர் இணையமைச்சரை நியமித்திருப்பதுடன், அவரின், அதிகாரங்களைக் குறைத்திருக்கிறார்கள். அவர் தனது மேலிடத்தை திருப்திப்படுத்த டேமேஜ் கன்ட்ரோல் செய்வதாக நினைக்கிறார். கட்சியின் மூத்தவர்கள் அவருக்குப் பெரிய குழியைத் தோண்டிவருகின்றனர்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

எல்லாவற்றுக்கும் மேலாக, அடிப்படை அரசியல் நாகரிகத்தைக் கடந்து அண்ணாமலை பயன்படுத்தியிருக்கும் சொல்லாடல் அரசியல் வட்டாரத்தைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. “என் செருப்புக்கு ஈடாக மாட்டீர்கள்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜனைத் தாக்கியிருக்கிறார் அண்ணாமலை. வழக்கமாக, ஒரு கட்சியின் நான்காம் கட்ட தலைவர்கள் அல்லது கடைசியில் பேசும் மேடைப் பேச்சாளர்கள் பயன்படுத்தும் சொல்லாடலை, மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆளுகிற ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் பேசியிருப்பது எளிதாகக் கடந்து செல்லக்கூடியதல்ல என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.