Published:Updated:

திமுக அரசின் `பிங்க் பஸ்’ சர்ச்சை... விமர்சனமும் பதிலும்

பிங்க் பஸ்

பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கக்கூடிய பேருந்துகளுக்கு அரைகுறையாக பிங்க் வண்ணம் பூசப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தி.மு.க அரசின் சொதப்பலான நடவடிக்கை என்று இதை சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

திமுக அரசின் `பிங்க் பஸ்’ சர்ச்சை... விமர்சனமும் பதிலும்

பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கக்கூடிய பேருந்துகளுக்கு அரைகுறையாக பிங்க் வண்ணம் பூசப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தி.மு.க அரசின் சொதப்பலான நடவடிக்கை என்று இதை சிலர் கிண்டல் செய்கிறார்கள்.

Published:Updated:
பிங்க் பஸ்

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்துவோம்’ என்று கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க வாக்குறுதி அளித்தது. அதன்படி, தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. முதல்வராகப் பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் ஐந்து திட்டங்களை நிறைவேற்றி கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதித் திட்டம்.

கட்டணமில்லா பயணம்
கட்டணமில்லா பயணம்

இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், எத்தனை பேர் கட்டணமில்லா பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் இயக்கப்படும் சுமார் 21,000 அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டத்தின்படி, 7,858 பேருந்துகளை பெண்கள் பயன்படுத்தலாம். ஓராண்டு காலத்தில், 115 கோடி முறை பெண்கள் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்தனர் என்கிற புள்ளிவிவரம் கடந்த மே மாதம் வெளியானது.

இந்த நிலையில், கட்டணமில்லாமல் பெண்கள் பயணம் செய்யும் சாதாரண பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் பூசப்பட்டு, அந்தப் பேருந்துகளை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கிவைத்தார். அந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சேகர்பாபு, சிவசங்கர், உதயநிதி
சேகர்பாபு, சிவசங்கர், உதயநிதி

இந்தப் பேருந்துகளுக்கு முழுவதுமாக பிங்க் வண்ணம் பூசாமல், பேருந்தின் முன்புறமும் பின்புறமும் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டிருந்தது. பேருந்துகளுக்கு அரைகுறையாக பெயின்ட் அடித்திருப்பதாக சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. பலர் அதைக் கேலியும் கிண்டலும் செய்தனர். அந்த பேருந்தின் புகைப்படங்களை வைத்து வெளியிடப்பட்ட மீம்ஸ்கள் வைரலாகின.

அதற்கு தி.மு.க தரப்பினர் பதில் கொடுத்தனர். ‘மற்ற மாநிலங்களில் முழுமையாக பிங்க் வண்ணம் கொண்ட பேருந்துகள் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயணிக்கக் கூடியவை. ஆனால், தமிழகத்தில் அனைவரும் பயணிக்கக் கூடிய பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கிறார்கள். அந்தப் பேருந்துகளை அடையாளம் காட்டும் நோக்கில்தான் முகப்பிலும் பின் பகுதியிலும் பிங்க் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் விமர்சிக்கிறார்கள்’ என்று பதில் கருத்துகள் பதிவுசெய்யப்பட்டன.

அமைச்சர் சிவசங்கர், உதயநிதி
அமைச்சர் சிவசங்கர், உதயநிதி

“இந்தத் திட்டத்தால் 132 கோடி பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள்” என்று சமீபத்திய புள்ளிவிவரத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் திட்டத்துக்காக ரூ.16,000 கோடி மானியம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர், “பணிக்கு செல்லும் பெண்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலமாக மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 பெண்களால் சேமிக்கப்படுகிறது. அதை அவர்கள் குடும்பச் செலவுக்கு பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் பூசப்பட்டது குறித்து போக்குவரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “சாதாரண வகை பேருந்துகளில் மட்டுமே பெண்களால் கட்டணமின்றி பயணிக்க முடியும். கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காண்பதில் பெண்களிடம் சில நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது. சாதாரண பேருந்துகளுக்கு பதிலாக டீலக்ஸ் பேருந்துகளில் அவர்கள் ஏறிவிடுகிறார்கள். அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே பிங்க் வண்ணம் பூசப்பட்டது” என்றார்.

பிங்க் பஸ்
பிங்க் பஸ்

“அப்படியென்றால், இந்த பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் பூசியிருக்கலாமே” என்று கேட்டதற்கு அந்த அதிகாரியிடம் சரியா பதில் இல்லை. இது குறித்து நம்மிடம் பேசிய சென்னை மாநகரப் போக்குவரத்துத்துறை ஊழியர்கள், “பேருந்து முழுவதும் பிங்க் வண்ணம் பூசியிருக்கலாம். சாதாரண வகை பேருந்துகள் எல்லாமே மிகவும் பழையவை. அவற்றில் முன்பக்கமும் பின்பக்கமும் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டு, மற்ற பகுதிகளில் பழைய பெயின்ட் அப்படியே இருப்பது பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறது” என்றனர்.