Published:Updated:

ஜாலியன்வாலா பாக்: தியாகிகளை பாஜக அரசு அவமதித்ததாக கொதிக்கும் எதிர்க்கட்சிகள்! - ஓர் அலசல்

ஜாலியன்வாலா பாக்
ஜாலியன்வாலா பாக்

ஜாலியன்வாலா பாக் புதுப்பிப்பு பணிகள் குறித்தான சர்ச்சைகளுக்குள் செல்வதற்கு முன்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடூரப் படுகொலைச் சம்பவம் குறித்தான வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பாஜக-வினர் அடிக்கடிப் பயன்படுத்திவருகிற 'தேச பக்தி' வார்த்தையை கேள்விக்குட்படுத்தி, விமர்சித்திருக்கும் ராகுல் காந்தியின் ட்வீட், பாஜக-வினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகேயுள்ள `ஜாலியன்வாலா பாக்' சுதந்திரப் போராட்ட நினைவிடத்தை அண்மையில் புதுப்பித்திருக்கிறது மத்திய பாஜக அரசு. ஆனால், இந்த 'மறு சீரமைப்பு பணிகள் வரலாற்றை அழிக்கும் செயல்' என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிலிருந்து ஏற்கெனவே எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

ஆனால், இந்த எதிர்ப்புகள் அனைத்தையும் புறம் தள்ளிய மத்திய பாஜக அரசு, ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் டிஜிட்டல் அருங்காட்சியகம் உள்ளிட்ட புனரமைப்புப் பணிகளைச் செய்து முடித்தது. பிரதமர் நரேந்திர மோடி, புதுப்பிக்கப்பட்ட இந்த நினைவிடத்தை அண்மையில் திறந்துவைத்தார்.

 ஜாலியன்வாலா பாக் நினைவிடம்
ஜாலியன்வாலா பாக் நினைவிடம்

இதையடுத்து, 'தியாகத்தின் அர்த்தம் தெரியாத ஒரேயொருவரால் மட்டுமே ஜாலியன்வாலா பாக் தியாகிகளை அவமானப்படுத்த முடியும். நான் தியாகியின் மகன். இதுபோன்று தியாகிகளை அவமானப்படுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. தியாகிகள் இந்த தேசத்துக்கு என்ன செய்தார்கள் என்பதை சுதந்திரத்துக்குப் போராடாதவர்களால் புரிந்துகொள்ள முடியாது' என்று மிகக் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. அதேசமயம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான அம்ரீந்தர் சிங், ``ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தில் என்ன அகற்றப்பட்டது என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் புதுப்பிக்கப்பட்ட பிறகு ஜாலியன்வாலா பாக் அழகாகவே தெரிகிறது'' என்று கருத்து தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலியன்வாலா பாக் புதுப்பிப்பு பணிகள் குறித்தான சர்ச்சைகளுக்குள் செல்வதற்கு முன்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொடூரப் படுகொலைச் சம்பவம் குறித்தான வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்வு `ஜாலியன்வாலா பாக் படுகொலை.' 100 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்திய சுதந்திரப் போராட்டங்களை ஒடுக்கும்விதமாக 'ரௌலட் சட்டம்' என்ற ஓர் அடக்குமுறைச் சட்டத்தை அமல்படுத்தியது அன்றைய ஆங்கிலேய அரசு. இதை எதிர்த்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் நாடு முழுவதும் போராடிவந்தனர்.

இந்தநிலையில், 1919-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதியன்று, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகேயுள்ள 'ஜாலியன்வாலா பாக்' மைதானத்தில், ரௌலட் சட்டத்துக்கு எதிராகக் கோஷமிட்டபடி மக்கள் கூட்டம் பெரும் திரளாகக் கூடியது. இதையறிந்த ஆங்கிலேய அதிகாரி மைக்கேல் ஓ டயர், 150 துருப்புகளுடன் ஜாலியன்வாலா பாக்கை முற்றுகையிட்டு, அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றார். இந்தக் கொடூர சம்பவத்தில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

ராகுல் காந்தி - நரேந்திர மோடி
ராகுல் காந்தி - நரேந்திர மோடி

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் கொடுஞ்செயல், இந்திய மக்களிடையே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே இந்திய விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்ததும், 1947-ல் நாடு சுதந்திரம் பெற்றதும் உணர்ச்சிமிக்க வரலாறு. சுதந்திர இந்தியாவில், தியாகிகளைப் போற்றும்வகையில், 'ஜாலியன்வாலா பாக் நினைவிடம்' பாதுகாக்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில்தான், நூற்றாண்டைக் கடந்துவிட்ட நிலையில், ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தைப் புதுப்பித்து, திறப்புவிழாவும் நடத்தி முடித்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இது குறித்துப் பேசுகிற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, ``ஜாலியன்வாலா பாக் நினைவிடம் என்பது நம் சந்ததியினருக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை உணர்வுபூர்வமாக கடத்துவது. அதனால்தான் அதன் பழைமை மாறாமல் அதை இத்தனை ஆண்டுக்காலமாக பாதுகாத்துவந்தோம். ஆனால், இப்போது நினைவிடத்தைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில், அதன் பாரம்பர்யத்தைச் சிதைத்து, பூங்காபோல உருமாற்றி வைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இப்படி நவீனப்படுத்திவிட்ட இந்த நினைவிடத்தைப் பார்க்கக்கூடிய நம் பிள்ளைகளுக்கு, ஜாலியன்வாலா பாக் படுகொலை எனும் கொடூரச் சம்பவம் எப்படி நினைவுக்கு வரும்... அந்தத் தியாகிகளின் வலியை உணர்வுபூர்வமாக எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?'

ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா மீது ரூ.41 லட்சம் மோசடி புகார் - டெல்லி தொழிலதிபர் கோர்ட்டில் முறையீடு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில், எண்ணற்ற தியாகிகள் தங்கள் இன்னுயிரை நீத்திருக்கின்றனர். தியாகம் நிறைந்த அந்த நினைவுகளைத் தாங்கி நிற்கும் சுவடுகளாக இது போன்ற நினைவிடங்கள் இருந்துவருகின்றன. ஆனால், பாஜக-வின் தாய் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா போன்ற அமைப்புகளுக்கு சுதந்திரப் போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாது. நாட்டின் சுதந்திரத்துக்காக போராடாத இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இன்றைய தேதி வரையிலும்கூட நமது இந்தியக் கொடியை ஏற்றி வணக்கம் செய்ய மாட்டார்கள். மாறாக, சுதந்திரத்துக்காகப் போராடி உயிர் நீத்தவர்களின் தியாகத்தை இருட்டடிப்பு செய்வதற்காக வரலாற்றையே திரித்து எழுதுவார்கள்.

'ஜாலியன்வாலா பாக்' சரித்திர நிகழ்வைப் படிக்கிறபோது, அதில் மகாத்மா காந்தியில் ஆரம்பித்து ஜவஹர்லால் நேரு, மோதிலால் நேரு, பகத் சிங் என அத்தனை போராட்ட வீரர்களின் பங்களிப்பும் வெளிவரும். ஆனால், புனரமைப்பு என்ற பெயரில், இந்த வரலாற்றுப் பெருமைகொண்டவர்களின் பெயர்களையெல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டனர்'' என்கிறார் குமுறலாக.

கோபண்ணா
கோபண்ணா

பாஜக மீது காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசியபோது, ``ராகுல் காந்திக்கு இத்தாலி வரலாறு மட்டுமல்ல... இந்திய வரலாறும்கூடத் தெரியவில்லை. காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே சுதந்திரப் போராட்டத்தின் அத்தனை பாத்தியதைக்கும் அவர் சொந்தக்காரர் ஆகிவிட முடியாது.

பாஜக மீது நேரடியாக எந்தத் தவறையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, பாஜக என்ன செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று முயன்றுவருகிறார். சரித்திரத்தைப் படித்து, உண்மை என்னவென்று தெரிந்துகொள்ளாமல், மேம்போக்காக ராகுல் காந்தி கூறிவரும் குற்றச்சாட்டுகளை அவரது கட்சியினரே நம்புவதில்லை.

பாஜக-வை நிறுவிய ஷியாமா பிரசாத் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. தமிழக பாஜக-வின் முதல் தலைவரும்கூட. கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான். அவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. எனவே ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே முடிச்சுப் போடுவதென்பது அரசியல்.

தஞ்சாவூர்: 50 டன் கொண்ட ஒரே கல்லில் யானை, குதிரைச் சிலைகள்... கவனம் ஈர்த்த ஐயனார் கோயில் விழா!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் மத்திய மாகாண தலைவராக இருந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பெரும்பாலானோர் இவரைப்போலவே, காங்கிரஸ் அமைப்பிலிருந்து சுதந்திரப் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டவர்கள்தான். பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்-ஸிலும் இருந்தார்கள். எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று சரித்திரம் படிக்காதவர்கள்தான் சொல்வார்கள்.

ஏனெனில், ஆர்.எஸ்.எஸ் என்பது, அன்றைய காலகட்டத்தில் மிக மிகச் சிறியதோர் அமைப்பு. அரசியல் கலப்பே இருக்கக் கூடாது என்ற வகையில், இந்து மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. எனவே, இந்து மத சேவையை மட்டுமே கருத்திற்கொண்டு பயணப்பட்டுவருகிறது ஆர்.எஸ்.எஸ்.

எஸ்.ஆர்.சேகர்
எஸ்.ஆர்.சேகர்

இந்திய தேசியக்கொடியை ஏற்ற மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனாலும்கூட இப்படியெல்லாம் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக புகார் கூறிவந்ததால், இப்போது குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தேசியக்கொடி ஏற்றிவருகிறது.

இதுமட்டுமல்ல... அரசு நிகழ்ச்சிகள், கல்விக்கூட நிகழ்ச்சிகளின் இறுதியில்தான் தேசியகீதம் பாடுவார்கள். பா.ஜ.க கட்சி சார்ந்த எங்கள் நிகழ்ச்சிகளின் இறுதியில் நாங்கள் வந்தே மாதரம்தான் பாடுவோம். ஆனால், தொடர்ச்சியாக எங்கள்மீது எதிர்க்கட்சியினர் இது போன்ற புகார்களைக் கூறிவரும் காரணத்தால், இப்போது எங்கள் கட்சி நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில் தேசியகீதம் பாட ஆரம்பித்துவிட்டோம்'' என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு