Published:Updated:

திருவள்ளுவர் சர்ச்சை... என்ன சொல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்?

வள்ளுவர் சிலை
வள்ளுவர் சிலை ( படம்: ரா.ராம்குமார் / விகடன் )

திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசப்பட்டதுதான் இன்றைக்கு வைரல் செய்தியாக ஆகியிருக்கிறது.

பிரதமர் மோடி, இரண்டு தினங்களுக்கு முன்னர் தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அங்கே, இந்திய வம்சாவளியினர் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர், தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் காவி ஆடையுடன், இந்து மதக் குறியீடுகளான பட்டை நாமம், ருத்ராட்சம் அணிந்த நிலையில் தமிழக பா.ஜ.க -வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது.

பா.ஜ.க பதிவு
பா.ஜ.க பதிவு

வழக்கமாக வெளியிடப்படும் திருவள்ளுவர் புகைப்படத்தில், எந்த மத அடையாளமும் இல்லாமல் வெண்ணிற ஆடையோடு மட்டுமே அடையாளப்படுத்தப்படுவார். ஆனால் தமிழக பா.ஜ.க, திருவள்ளுவரை இந்து மதப் புலவர் போன்ற அடையாளத்தோடு உருவகப்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டது, மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பா.ஜ.க-வின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இதுதொடர்பாக பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் ஸ்ரீநிவாசனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``திருவள்ளுவருக்கு ஏன் காவி உடை இருக்கக்கூடாது. எந்த விதமான மத அடையாளமும் இல்லாத திருவள்ளுவருக்கு ஒரு மத அடையாளத்தை எப்படிக் கொடுக்கலாம் எனச் சிலர் கேட்கின்றனர். எந்த விதமான அடையாளமும் இல்லாத திருவள்ளுவருக்கு இவர்கள் மட்டும் ஏன் வெள்ளை நிற உடை அடையாளத்தைக் கொடுக்க வேண்டும்.

ஶ்ரீனிவாசன்
ஶ்ரீனிவாசன்

அவர் ஒரு இந்துப் புலவர்தான், அவருக்கு இந்து அடையாளத்தையும் கொடுக்கலாமே, அதில் என்ன தவறு உள்ளது. திருவள்ளுவர் எழுதிய பல குறள்களில் இந்து மதத்தின் கடவுள்களைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். அப்படியானால் அவரும் ஒரு இந்துவாகத்தானே இருக்க முடியும்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்" என்று வள்ளுவர் கூறியிருக்கிறார் .

பிறப்பினால் வேற்றுமை இல்லை எனக் கூறினாலும், தொழிலால் வேற்றுமை உண்டு என வள்ளுவர் கூறுகிறார்.

இதையேதான் கிருஷ்ணனும் பகவத்கீதையில் கீதையில் கூறுகிறார்.

``சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம்

குணகர்ம விபாகசஹ:

நான்கு வர்ணங்களையும் நான்தான் படைத்தேன் என கிருஷ்ணன் கூறினாலும் இது பிறப்பினைக்கொண்டு பிரிக்கப்படும் வேற்றுமையைக் கூறவில்லை. மாறாகத் தொழிலில் உள்ள வேற்றுமையையே குறிப்பிடுகிறது.

``குணகர்ம விபாகசஹ" எனும் இந்த வார்த்தை "செய்தொழில் வேற்றுமையான்" எனும் வார்த்தையோடு ஒத்துப்போகிறது.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்

தொழிலின் அடிப்படையில் வேறுபாடு உள்ளது என்பதைத்தான் கிருஷ்ணன் கூறுகிறார்.

அதையே திருவள்ளுவரும் தொழிலின் அடிப்படையில் வேறுபாடு உள்ளது எனக் கூறுகிறார். ஆக, இருவரின் கருத்துகளும் ஒன்றாகவே அமைந்துள்ளன.

சரஸ்வதி, லட்சுமி கடவுள்களுக்கு எந்த விதமான அடையாளமும் இல்லாமல் இருந்தபோது, ரவி வர்மாதான் அந்த கடவுள்களுக்கான அடையாளத்தை வரைபடமாக வரைந்தார். அதற்கு முன் சரஸ்வதியின் உருவத்தை யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. வள்ளலார் வெண்ணிற ஆடையோடு இருந்தார் அவரை மக்கள் பார்த்துள்ளனர். அவருக்கு காவி உடையை நம்மால் அணிவிக்க முடியாது. ஆனால், வள்ளுவரை யாருமே இதுவரை பார்த்திராதபோது, அவருக்கு கொண்டையும் தாடியையும் இவர்கள் எப்படிக் கொடுத்தனர். எந்த அடையாளமும் தெரியாத ஒரு நபருக்கு எந்த அடையாளத்தையும் கொடுக்கலாம்.

50 அடி ஆழம்; ஆழ்துளையில் தலைகீழாக விழுந்த 5 வயது சிறுமி!- கண்கலங்க வைத்த 14 மணிநேர மீட்புப் பணி

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்த தொழித்து விடின்.

என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, மழிக்கவோ நீட்டவோ வேண்டாம் என வள்ளுவர் கூறியுள்ளார். ஆனால், அந்த வள்ளுவருக்கே சடையையும் தாடியையும் ஏன் உருவகப்படுத்தினார்கள்?''

வள்ளலார்
வள்ளலார்

தொடர்ந்து அவர் பேசுகையில்...

'' திருவள்ளுவர் காவி உடை அணியவில்லை என ஆதாரம் இங்கே எவரிடமும் உள்ளதா? இல்லைதானே, திருக்குறள் இந்து மத இலக்கியம். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்துவமும் இஸ்லாமும் இல்லாதபோது, இந்தியாவில் இருந்த மதங்கள் அனைத்து மதமும் இந்து மதம்தான். ஆக, திருவள்ளுவரும் இந்து மதத்தைச் சார்ந்தவராகத்தான் இருந்திருக்கிறார்'' என்றவரிடம்,

திருவள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர்தான் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இந்து மதத்தைக் குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் எங்கே பேசியிருக்கிறார்? எனக் கேட்டதற்கு

''திருக்குறளில்

"ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து."

ஒருவன் கற்ற கல்வி `ஏழு பிறவிக்கும்' பயன் கொடுக்கும் என திருவள்ளுவர் கூறுகிறார்.

ஏழு பிறவி என்பது இந்து மதத்தில் கூறப்பட்ட கருத்தாக உள்ளது. மற்ற எந்த மதமும் ஏழு பிறவியை ஏற்பது இல்லை. இந்து மதம் மட்டுமே ஏழு பிறவி மனிதனுக்கு உள்ளதாகக் கூறுகிறது. ஆகவே, திருவள்ளுவர் இந்து மதத்தின் கருத்துகளையும் திருக்குறளில் கூறியுள்ளார்.

அதே போல,

"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பி ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி"

விஷ்ணுவின் அவதாரமாக இருக்கக்கூடிய இந்திரனை இங்கே திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

விஷ்ணு
விஷ்ணு

இந்து மதக் கடவுள்களைக் குறித்தும் திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ளார். திருக்குறள் ஒரு இந்து மத இலக்கியம்தான். அதே போல தமிழில்தான் பக்தி இலக்கியம் அதிகம். ``திருவள்ளுவர் இந்து இல்லை என்றால் இங்கு யாருமே இந்து இல்லை. இங்கிருக்கும் சிலர், தமிழ்நாட்டை நாத்திகத்தை நோக்கி அழைத்துச்செல்ல நினைக்கிறார்கள். அது, தமிழகத்துக்கு நல்லதல்ல. இந்து என்ற வார்த்தை பிரிட்டிஷ்காரர்கள் திணித்ததாக இருந்தாலும் இந்து கலாசாரம் அப்படி திணிக்கப்பட்டது இல்லை. இந்து மதக் கலாசாரங்களைக் காலம் காலமாக நம் மக்கள் பின்பற்றியேவருகின்றனர். ஆகவே, திருவள்ளுவர் ஒரு இந்துவாகவே இருந்துள்ளார். அவர் எழுதிய திருக்குறளும் இந்து மத இலக்கியம்தான்'' என்று அடித்துப் பேசினார் ஶ்ரீனிவாசன்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர், சுப.வீரபாண்டியனிடம் பேசினோம்,

``திருக்குறள் என்பது உலகப் பொதுமறை. அப்படிப்பட்ட ஒரு நூலை இந்து மதத்தின் நூலாக மாற்ற இவர்கள் நினைக்கிறார்கள். இந்து மதத்தின் சனாதன வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துகள்தான் திருக்குறளில் இருக்கின்றன.

அப்படி இருக்கும்பொழுது திருக்குறளை இந்து மதத்தின் நூல் என சொல்லிக்கொள்வது கொஞ்சமும் கூச்சப்படாமல் அடுத்தவன் சொத்தை அபகரித்துக்கொள்வதுதான். அவர்கள் வெளியிட்ட அந்தப் புகைப்படத்தில் காவி உடை மட்டுமே இருக்கவில்லை இந்து மதக்குறியீடுகள் அனைத்துமே இருக்கின்றன.

பா.ஜ.க வெளியிட்ட திருவள்ளுவர் படம்
பா.ஜ.க வெளியிட்ட திருவள்ளுவர் படம்

``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்" என்ற குறளின் ``செய்தொழில் வேற்றுமை யான்" என்பதை மேற்கோள்காட்டி, தொழிலில் வேற்றுமை உள்ளது என்பதை திருவள்ளுவரும் கூறுகிறார், அதைத்தானே பகவத்கீதையும் கூறுகிறது என்கிறார்கள்.

அந்தக் குறளில் வரக்கூடிய `சிறப்பொவ்வா' எனும் வார்த்தையை அவர்கள் விட்டுவிட்டனர். அதாவது, ஒருவன் பிறப்பால் சமமானவன் எனக் கூறிவிட்டு, அதேபோல ஒருவன் எந்தத் தொழில் செய்தாலும் அவனுடைய தொழிலாலும் அவன் சிறப்புடையவன் ஆக முடியாது என்பதைத்தான் வள்ளுவர் அந்தக் குறளில் கூறியுள்ளார்.

`சிறப்பொவ்வா' என்பதன் அர்த்தம் சிறப்பு அல்ல என்பதே ஆகும்.

திருக்குறள், பிறப்பால் மட்டுமல்ல தொழிலாலும் அது வேற்றுமையை ஊக்குவிக்கவில்லை. ஒரு கலெக்டர் தொழில் பார்ப்பவரைவிட கூலித்தொழிலாளி தாழ்ந்தவனாக இருக்க முடியாது. பகவத் கீதை பிறப்பால் நேரடியாக மனிதர்களை பிரித்துவைக்கிறது. பகவத் கீதையின் 18 -வது அத்தியாயத்தில் வெளிப்படையாகவே மனிதர்களுக்கு மத்தியில் வேற்றுமையை ஏற்றதாழ்வை உருவாக்கக்கூடிய வாசகங்கள் இருக்கின்றன.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

ஆனால் திருக்குறள், மனிதர்களை ஒன்றிணைக்கிறது. அனைவரும் சமம் என்கிறது. திருக்குறள் ஒருபோதும் இந்து மதத்தின் நூலாக இருக்காது; அது ஒரு பொதுமறையான நூல்தான். இவர்கள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்கள். உலகப் பொதுமறையான ஒரு நூலை ஒரு மதத்துக்கு உள்ளே சுருக்க நினைப்பது கண்டனத்துக்குரியது. இதை ஒருபோதும் நம்மால் ஏற்க முடியாது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு