Published:Updated:

`அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு..!' - ப.சிதம்பரத்தின் இன்றைய ட்வீட்டும் பழைய வீடியோவும்

சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில் இந்தித் திணிப்பு தொடர்பாகக் கருத்துப் பதிவிடப்பட்டுள்ளது.

P Chidambaram
P Chidambaram

`இந்தி' நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. `இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்' என அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தார்.

``பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இந்தியை எப்படி பொதுவான மொழியாகப் பேச முடியும். இதை எப்படி நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவிக்கலாம்'' என எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாகத் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் வழக்கம்போல கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. `மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தயாராகத் தயங்க மாட்டோம்’ என்று தமிழகத்திலிருந்து குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

amit shah
amit shah

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கிடைப்பதற்காகத் தொடர்ந்து போராடிவரும் சிதம்பரம், தற்போது திகார் சிறையில் இருக்கிறார். சிறையில் இருந்தாலும் அவரது ட்விட்டர் பதிவில் இந்தித் திணிப்பு தொடர்பாகக் கருத்துப் பதிவிடப்பட்டுள்ளது.

அதில், `எனது சார்பாக ட்வீட் செய்ய என் குடும்பத்தினரைக் கேட்டுக்கொண்டேன். `இந்தி' இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்க முடியும் என்ற ஆபத்தான யோசனை திணிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்களும் மற்ற மொழிகளைப் பேசுபவர்களும் இந்தியைத் திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா மொழிகளின் வளர்ச்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், இந்தி மட்டுமே இந்த நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் என்ற கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அமித் ஷா இந்தியைத் தூக்கிப் பிடிப்பது ஏன்? - அரசியல் பின்புலக் கணக்குகள்!

தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்துப் போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழிதான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களும் இந்தித் திணிப்பு போராட்டத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

P Chidambaram
P Chidambaram
` இது 10 ஆண்டுகால பகை!' - சிதம்பரத்தை ஏன் குறிவைக்கிறார் அமித் ஷா?

இவரது பதிவின் கீழே இன்னொரு வீடியோவும் உலா வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இந்தி நாள் அறிவிப்பு குறித்து இந்தி மொழியிலேயே பேசிய வீடியோதான் அது.

``இந்த நன்னாளை 'இந்தி தினமாக' அறிவித்திருக்கிறார் துணைக் குடியரசுத் தலைவர். இந்தியாவின் தேசிய மொழியாக இருக்கும் இந்தி மொழியை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்'' என அவர் பேசுகிறார். இந்த வீடியோவை சுட்டிக்காட்டி, ``இரட்டை வேடம் போடுகிறார் சிதம்பரம். அன்று ஒரு பேச்சு... இன்று ஒரு பேச்சு'' என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ப.சிதம்பரம் பேசிய பழைய வீடியோ!