Published:Updated:

பெட்ரோல்,டீசல்: தொடரும் விலை உயர்வுக்கு என்ன காரணம், விதிக்கப்படும் வரிகள் என்னென்ன? முழு ரிப்போர்ட்

பெட்ரோல் நிலையம்
News
பெட்ரோல் நிலையம்

உலகிலேயே பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு அதிகபட்சமாக 69 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அதாவது அடக்க விலையைவிட இரு மடங்கு அதிமாக வரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

2021 - இந்த ஆண்டில் இந்தியாவில் உயர்ந்துகொண்டே இருந்தன இரண்டு விஷயங்கள். ஒன்று, கொரோனா உயிரிழப்பு; மற்றொன்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வு. தற்போது கொரோனா உயிரிழப்பும் நோய்த்தொற்றுப் பரவலும்கூட குறைந்துவிட்டன. ஆனால், பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள சாமானிய மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் தலைநகர் டெல்லி முதல் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, தமிழ்நாடு எனப் பெரும்பாலான மாநிலங்களில் வரை பெட்ரோல் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 4-ம் நாள் தொடங்கி இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலையை 38 முறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 10.51 ரூபாய் அளவுக்கும், ஒரு லிட்டா் டீசல் விலை 9.15 ரூபாய் அளவுக்கும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரையில் சுமார் 60 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்
vikatan

இதனால், இந்தக் கொடிய கொரோனா காலத்தில், வருமானமற்ற தங்களின் நிதிச்சுமை மேலும் அதிகரித்தும், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயநிலையும் உருவாகியிருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துவருகின்றனர். இப்படி, இந்த வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக என்ன இருக்கும்... எதனால் நாள்தோறும் இந்தக் கிடுகிடு விலை உயர்வு என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெட்ரோல் விலை உயர்வுக்கான முதன்மைக் காரணங்கள்:

1) சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை :

இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்கள் விலையேற்றத்துக்கு சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் மிக முக்கியக் காரணம். கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவி, விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தின. அதனால், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்துத் தொழில்துறைகளும் முடங்கிப்போயின. அத்தியாவசியப் பணிக்களுக்குத் தவிர, வாகனங்களின் பயன்பாடு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் வெகுவாகக் குறைந்தது. எனவே, பெட்ரோல், டீசல் விற்பனையும் குறைந்தது. உலக நாடுகள் பலவற்றிலும் அவற்றின் தேவை குறைந்ததால், 2020-ல் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக, 2020 ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 19 டாலராகக் குறைந்திருந்தது.

க்ரூடு ஆயில்
க்ரூடு ஆயில்

அதன் பின்னர் கச்சா எண்ணெய் விலை, 2020 அக்டோபரில், பேரல் ஒன்றுக்கு, 40.7 டாலராக இருந்தது. கடந்த பிப்ரவரி 16-ல், பேரல் ஒன்றுக்கு, 62.64 டாலராக அதிகரித்தது. கச்சா எண்ணெய்க்கான தேவை குறைவாக இருந்தபோதும், அதன் விலையை உயர்த்துவதற்காக 'எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு' (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 9.7 மில்லியன் பேரல் குறைத்தன. இதனால் தற்போது, 2021, ஜூலை 15-ம் நாள் நிலவரப்படி, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 74.24 டாலராக மேலும் உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2). தினசரி விலை நிர்ணயம்:

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததிலிருந்து, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அந்நியச் செலாவணி விகிதங்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்துவருகின்றன. குறிப்பாக, ஆரம்பத்தில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நி்ர்ணயித்துவந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இரு முறை என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்ததுவந்தது.

பெட்ரோல்
பெட்ரோல்

இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை புதிதாக அமலுக்குவந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அதனடிப்படையில், 2017-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதன் காரணமாக, தினசரி விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. குறிப்பாக, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்திவருகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான மே மாதத்தில் மட்டும் 19 முறை விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

3). மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்:

உலகிலேயே பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு அதிகபட்சமாக 69 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. அதாவது, அடக்க விலையைவிட இரு மடங்கு அதிமாக வரி விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரியின் மூலம் உயர்த்தப்படும் தொகை, தினசரி விலை நிர்ணயத்தின்படி மாநிலங்களுக்கு மாநிலம் சில பைசாக்கள் தொடங்கி, சில ரூபாய்வரை வேறுபடும்.

2021, ஜூலை மாதம் தலைநகர் டெல்லி நிலவரப்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 38.93 ரூபாய், டீசலின் அடிப்படை விலை, 41.41 ரூபாய் மட்டுமே. அப்படி இருக்கும்போது, அடக்க விலையைத் தாண்டி இரு மடங்கு அதிகமாக விலைவைத்து விற்பனை செய்யக் காரணம் மத்திய, மாநில அரசின் வரிகள். இவைதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.

பெட்ரோல்
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் மீது, மத்திய அரசு கலால் வரியும், மாநில அரசுகள் வாட் வரியும், கூடுதல் வரியும் விதிக்கின்றன.

> கலால் வரி: மத்திய அரசின் கலால் வரி, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்துச் செலவை ஈடுகட்டுவதற்காக விதிக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில், அதிகபட்சமாக மத்திய அரசின் கலால் வரி மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, 2014-2015-ல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.48-ஆக இருந்த கலால் வரியை, தற்போது லிட்டருக்கு சுமார் ரூ.32.98-ஆக 3.5 மடங்காக உயர்த்தி வசூலிக்கிறது மத்திய அரசு. அதேபோல், டீசல் லிட்டருக்கு ரூ.3.56-ஆக இருந்த கலால் வரியை தற்போது ரூ.31.80-ஆகவும் உயர்த்தி வசூலிக்கிறது.

> டீலர் கமிஷன்: முகவர் தரகு விலை எனப்படும் டீலர் கமிஷன், பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம் ஆகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு டீலர் கமிஷன் சுமார் 3 முதல் 4 ரூபாய் வரை போகிறது.

> வாட் வரி & மதிப்புக் கூட்டு வரி: மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வாட் வரி. மாநிலத்துக்கு மாநிலம் இது வித்தியாசப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2021, ஜூலை மாதக் கணக்கின்படி, பெட்ரோலுக்கு 15 சதவிகிதமும், டீசலுக்கு, 11 சதவிகிதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. அதேபோல், பெட்ரோலுக்கு 13.02 ரூபாயும், டீசலுக்கு 9.62 ரூபாயும் மதிப்புக் கூட்டு வரியாக தமிழ்நாடு அரசால் வசூலிக்கப்படுகிறது.

வரிச் சலுகை
வரிச் சலுகை

> செஸ் வரி: நேரடியாக விதிக்கப்படும் வரிக்கு மேல், கூடுதலாக விதிக்கப்படும் மறைமுக வரிதான் செஸ் வரி. இந்த வரித் தொகை விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு திட்டத்துக்காகச் செலவிடப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை மீது விவசாயத்துறைக்கான செஸ் வரியை மத்திய அரசு விதித்தது. அதாவது பெட்ரோல் மீது 2.3 ரூபாயும், டீசல் மீது 4 ரூபாயும் கூடுதலாக செஸ் வரி விதித்தது. அதேபோல், சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்கான செஸ் வரியையும் விதித்தது. இதன் மூலம், பெட்ரோலுக்கு 20.50 ரூபாயும், டீசலுக்கு 22 ரூபாயும் செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், முதற்கட்டமாக பெட்ரோலின் மூலமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து நம் நாட்டுக்குக் கொண்டுவரப்படும் போக்குவரத்துச் செலவாக `Ocean Freight’ எனப்படும் செலவுத்தொகை செலுத்தப்படுகிறது. அதன் பிறகு, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டுத்தான் பெட்ரோல், டீசல், தார், மண்ணெண்ணெய் என இதர பெட்ரோலியப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தச் சுத்திகரிப்பு செலவும் பெட்ரோலின் அடிப்படை விலையில் அடங்கும். அதன் பிறகுதான், மற்ற வரிகள் அடங்குகின்றன. மேலும், டாலரில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.

எண்ணெய் நிறுவனம்
எண்ணெய் நிறுவனம்

இதே போன்று, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தினசரி விலை நிர்ணயம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் போன்றவைதான் தற்போதைய பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கான முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன. கொரோனா பரவலுக்கு அடுத்தபடியாக, தற்போது இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை மிகக் கடுமையாக பாதித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.