Published:Updated:

``கருணாநிதியின் துரையும்… அண்ணனின் ஆழ்வாரும்'' - தி.மு.க நிர்வாகிகள் சலசலப்பு கதையின் பின்னணி!

துரைமுருகன் - ஜெகத்ரட்சகன்
துரைமுருகன் - ஜெகத்ரட்சகன்

தி.மு.க-வில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, பொருளாளர் பதவியில் துரைமுருகன் அமர்ந்தபோது, "எம்.ஜி.ஆரின் தம்பி, அவர் வகித்துவந்த பதவியிலேயே அமர்ந்துவிட்டார்'' என்று துரைமுருகனிடம் நக்கலாகவே சொன்னார்கள்.

"எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்துக்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கையைப் பார்த்து, ஒரு போராளியாக 1953-ம் ஆண்டு இந்த இயக்கத்துக்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, இரு வண்ணக் கொடியைப் பிடித்துக்கொண்டு கழகத்துக்காக கோஷமிட்டபடியே இருப்பவன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்...’’
துரைமுருகன் - பொருளாளர், தி.மு.க

''ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வின் முகமாகப் பார்க்கப்பட்டுவரும் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்கிற விரக்தியில் கட்சி மாறப்போகிறார் என்று வெளியான செய்திதான் அவரை இந்த அளவுக்குச் சீற்றமடையச் செய்துவிட்டது. பொதுச் செயலாளர் பதவியும், துரைமுருகனைச் சுற்றிய சர்ச்சையும் கட்சிக்குள் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கின்றன. துரைமுருகனும் அதை அறிந்துகொண்டுதான் கலைஞர் நினைவுநாள் அன்று தனது அறிக்கையை வெளியிட்டார்” என்கிறார்கள் தி.மு.க-வின் முன்னணியினர்.

கருணாநிதி-துரைமுருகன்
கருணாநிதி-துரைமுருகன்

கருணாநிதிக்கு `துரை’... எம்.ஜி.ஆருக்கு `முருகன்’!

கருணாநிதியைத் தவிர்த்துவிட்டு தமிழக அரசியலை எப்படி எழுத முடியாதோ, அப்படி தி.மு.க-வின் வரலாற்றை துரைமுருகனைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. தி.மு.க-வை அண்ணா உருவாக்கியபோது, ஐவர் படை அதற்குப் பெரும் பலமாக இருந்தது. அதே தி.மு.க-வின் தலைவராகக் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, துரைமுருகனின் பணி கருணாநிதிக்குப் பல நேரங்களில் பலமாக இருந்திருக்கிறது. "நான் கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டவன். ஆனால், என்னை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்’’ என்று கருணாநிதியை வைத்துக்கொண்டே மேடையில் சொல்லும் தைரியம் துரைமுருகனுக்கு மட்டுமே உண்டு. அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். அதன் பிறகு கருணாநிதிக்கு நம்பிக்கைக்குரியவராகிப் போனார்.

தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாகவே அந்தக் கட்சியின் மாணவர் அணியில் உறுப்பினராக இருந்தவர் துரைமுருகன். இவரின் கல்லூரி நண்பர்தான் கருணாநிதியின் மருமகனும், முரசொலியின் ஆசிரியருமான செல்வம். அந்த நட்பின் அடிப்படையில்தான் கருணாநிதியுடன் துரைமுருகனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. கருணாநிதியுடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தாரோ, அதே அளவுக்கு எம்.ஜி.ஆர் மீதும் பாசமாக இருந்தவர் துரைமுருகன். கருணாநிதி `துரை...’ என்றும், எம்.ஜி.ஆர் `முருகன்...’ என்றும் இவருடைய பெயரைக்கூட ஆளுக்கொன்றாகப் பிரித்துக்கொண்டனர். கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆர் போர்க்கொடி தூக்கி, தனிக்கட்சியாக அ.தி.மு.க-வை ஆரம்பித்து ஆட்சியையும் பிடித்தார். அதேநேரம் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்த துரைமுருகன், அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக மாறிப்போனார்.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை எதிர்த்து, `இடி, மின்னல், மழை’ என்கிற தலைப்பில் ரகுமான்கான், சுப்பு, துரைமுருகன் ஆகியோர் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அரசுக்கு எதிராக பிரசார சுற்றுப்பயணம் செய்தார்கள். பொதுவெளியில் இந்தக் கூட்டத்தை நடத்தாமல் , அரங்கினுள் கூட்டத்தை நடத்தி அதற்கு டிக்கெட் வசூலிக்கும் அளவுக்குப் பிரபலமாக இருந்தது இவர்களின் பேச்சு. ஆனால், எந்த எம்.ஜி.ஆருக்கு எதிராக துரைமுருகன் வாள் சுழற்றினாரோ, அந்த எம்.ஜி.ஆர் துரைமுருகன்மீது வைத்திருந்த அன்பும் அலாதியானது.

தி.மு.க மாணவர் அணியில் துரைமுருகன் இருந்தபோது எம்.ஜி.ஆரிடம் `நான் நடிக்க வரட்டுமா?’ என்று கேட்க, `நீ நடிக்க வேண்டியவன் அல்ல, படிக்க வேண்டியவன். உன் படிப்புச் செலவை இனி நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று எம்.ஜி.ஆரால் படிக்கவைக்கப்பட்டவர். தனது அன்பிற்குரிய துரைமுருகன் திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே மும்பையிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து வேலூருக்கு வாகனத்தில் சென்று, ஐந்து பவுன் சங்கிலியை அன்பளிப்பாக அளித்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆருக்கு நன்றாகத் தெரியும் கருணாநிதியின் தீவிரத் தொண்டன் துரைமுருகன் என்று.

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

ஒருமுறை சட்டமன்றத்தில் தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிறது. முதல்வராக எம்.ஜி.ஆர் அமர்ந்திருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர் என்கிற முறையில் துரைமுருகனைப் பேச அழைத்தார் சபாநாயகர். அவையே அதிரும் வகையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் ஆட்சிமீது வைத்துக்கொண்டே செல்கிறார் துரைமுருகன். அதை எதிர்வரிசையில் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு `தான் வளர்த்த கன்றுக்குட்டி தன்மீது பாய்கிறது’ என்கிற நினைப்பில் ரசித்தபடி எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கூட்டம் முடிந்து உறுப்பினர்கள் வெளியே வந்துகொண்டிருந்தபோது லாபியில் திடீரென மயங்கிவிழுந்துவிட்டார் துரைமுருகன். "யார் மயக்கமடைந்தது?’’ என்று எம்.ஜி.ஆர் தனது பாதுகாவலர்களிடம் கேட்க, "துரைமுருகன்’’ என்று சொன்னதும், பதறித் துடித்து ஓடி வந்த எம்.ஜி.ஆர், மயங்கிக்கிடந்த துரைமுருகனைத் தன் மடியில் கிடத்தி, தண்ணீர் கொடுத்தார். அதற்குச் சிறிது நேரம் முன்புவரை தனது ஆட்சி குறித்து வசைபாடியவர்மீது எந்த வருத்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் நடந்துகொண்டவிதம் அங்கிருந்த தி.மு.க-வினரையும் திக்குமுக்காடச் செய்துவிட்டது.

முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்தபோது ஒருமுறை துரைமுருகனிடம் "முருகன் நீ என்னுடன் வந்துவிடு. உனக்கு எந்தத் துறை வேண்டுமோ அதை எடுத்துக்கொள்’’ என்று எம்.ஜி.ஆர் சொல்ல, "நீங்கள் எனக்கு அண்ணன். கலைஞர் எனக்குத் தலைவர். உங்களுடன் என்னால் வர முடியாது’’ என்று அன்றே தனது தி.மு.க விசுவாசத்தைத் தன்னை வளர்த்தவரிடமே சொல்லிக்காட்டியவர் துரைமுருகன். `அவரா இப்போது அணி மாறப்போகிறார்...’ என்று வேதனையோடு கேட்கிறார்கள் தி.மு.க-வினர். தன்னை வளர்த்த எம்.ஜி.ஆருக்கு சென்னைப் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவெடுத்தது. அந்தப் பல்கலைக்கழத்தின் செனட் உறுப்பினராக இருந்த துரைமுருகன் ஒப்புதலும் அதற்குத் தேவை. துரைமுருகன் இது குறித்து ஆலோசிக்க கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார். கருணாநிதி, "இன்றைக்கு வேண்டுமானால் அவர் நமக்கு எதிர்கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உன்னை வளர்த்தவர் அவர். அவருக்கு நீ எதிராக இருக்காதே...’’ என்று சொன்ன பிறகே, `அண்ணன்...’ என்று அழைத்தவரை. `டாக்டர் எம்.ஜி.ஆர்...’ என்று விழா மேடையிலேயே முன்மொழிந்து சிலாகித்தார் துரைமுருகன்.

அவர் அண்ணன்... நான் ஆழ்வார்!

"பதிமூன்றாவது ஆழ்வாரய்யா நீ’’ என்று கருணாநிதி நினைவுடன் இருந்த காலம் வரை வாஞ்சையோடு அழைக்கப்பட்டவர் ஜெகத்ரட்சகன். "அண்ணா...’’ என்று கருணாநிதியைக் கடைசிவரை உரிமையோடு அழைத்தவர்களில் ஜெகத்தும் ஒருவர். இவரும் துரைமுருகன்போலவே `தி.மா.மு.க’ என்று அழைக்கப்பட்ட, அன்றைய தி.மு.கவின் பவுர்புல் அமைப்பாக இருந்த திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியவர்.

துரைமுருகன், கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டதுபோல, ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது எஸ்.டி.சோமசுந்தரத்தின் பின்னால் அணிவகுத்து, எம்.ஜி.ஆரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர். அந்தத் தலைமைக்குக் கடைசிவரை விசுவாசமாகவும் இருந்தார். அன்றைய கட்டத்தில் தி.மு.க-வின் பேச்சு அஸ்திரங்களை எதிர்கொள்ள ஜெகத்ரட்சகனைத் தனது படைத் தளபதியாகவே எம்.ஜி.ஆர் பயன்படுத்திவந்தார். தனித்தமிழில் அழகாக இலக்கியம் முதல் இன்றைய அரசியல் வரை பேசும் ஆற்றல் இப்போதும் அவருக்கு உண்டு. மேடைப் பேச்சே திராவிடக் கட்சிகளுக்கு உயிர்மூச்சாக இருந்த நேரத்தில் அந்தப் பேச்சுக்கலையில் ஜெகத்தும் தனிமுத்திரை பதித்தவர்.

எம்.ஜி.ஆர்-கருணாநிதி
எம்.ஜி.ஆர்-கருணாநிதி

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை அ.தி.மு.க-வைவிட்டு அகலாமல் இருந்தவர், எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கொஞ்சம் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு அ.தி.மு.க-வில் தனது அரசியல் குருவாக விளங்கிய ஆர்.எம்.வீரப்பனுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர் கழகத்தைத் தொடங்கினார். மேலும், தனியாகத் தனது சமுதாய பலத்தைக் காட்டிக்கொள்ள `வீர வன்னியர் பேரவை’ என்கிற அமைப்பையும் நடத்திவந்தார்.

விதிவசத்தால் எந்தக் கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்துவந்தாரோ, அந்தக் கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர் கழகம் கூட்டணி வைக்கவேண்டிய நிலை வந்தது. எம்.ஜி.ஆர் இருந்தபோதே ஜெகத்ரட்சகனின் பேச்சை ரசிப்பவர் கருணாநிதி. இப்போது தன் பக்கத்தில் வந்தவரை விட்டுவிடுவாரா? கழகத்துடன் கூட்டணிவைக்க வந்தவரை கழகத்துடனேயே இணைத்துக்கொண்டார்.

கருணாநிதியின் படுக்கை அறை வரை சென்று அவருடன் மணிக்கணக்கில் உரையாடும் நபர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தி.மு.க-வில் இணைந்த பிறகு அந்தப் பட்டியலில் முன்னணியில் இருந்தார் ஜெகத்ரட்சகன். காலையும் மாலையும் திருப்பாவையைப் பாடும் வழக்கமுள்ள ஜெகத்ரட்சகன், தி.மு.க-வுக்குள் வந்த பிறகும் தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ளவில்லை. `ஆழ்வார் ஆய்வு மைய’த்தை தி.மு.க-வுக்கு வந்த பிறகே அவர் ஆரம்பித்தார். ஏன்? கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குத் திருப்பதியிலிருந்து வேத பண்டிதர்களை கூட்டி வந்து கருணாநிதியின் அறையிலேயே அவர்களை நிறுத்தி, `நாலாயிர திவ்வியப் பிரபந்த’ப் பாடல்களை அதிகாலை பாடவைக்கும் அளவுக்குக் கருணாநிதியிடம் செல்வாக்கு பெற்றிருந்தவர். `ராமானுஜர்’ தொடரைக் கருணாநிதி எழுதுவதற்குக் காரணமே ஜெகத்ரட்சகனின் வேண்டுகோள் என்பது கருணாநிதிக்கு நெருக்கமானவர்கள் அறிந்த ஒன்று. கருணாநிதி வீட்டில் தனியாக இருக்கும் நிலை வந்தால் `ஆழ்வாரை வரச் சொல்லுங்கள்’ என்று சண்முகநாதனிடம் சொல்லுவாராம். ஜெகத்தைப் பேசவிட்டு அதை ரசிப்பது கருணாநிதிக்குப் பிடித்த விஷயங்களில் ஒன்று. அதனாலேயே தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக மாற்றுவதற்கு, அறக்கட்டளையை கருணாநிதி தொடங்கியபோது அதில் உறுப்பினராக ஜெகத்ரட்சகனையும் இணைத்துக்கொண்டார்.

அந்த அளவுக்கு கருணாநிதியிடம் செல்வாக்குமிக்க நபராக இருந்த ஜெகத்ரட்சகனும் இப்போது கட்சி மாறப்போகிறார் என்று செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.

ஜெகத்ரட்சகன்- கருணாநிதி
ஜெகத்ரட்சகன்- கருணாநிதி

கட்சி மாற்றம் சாத்தியமா?

மாணவராகக் கட்சிக்குள் வந்து, மாணவர் அணிச் செயலாளராகி, முதன்மைச் செயலாளர், பொருளாளர் என்று படிப்படியாகக் கட்சிக்குள் வளர்ந்துவந்தவர் துரைமுருகன். 1996-ம் ஆண்டுக்கு முன்புவரை தமிழகம் முழுவதும் இவர் பேசாத ஊர்களே இல்லை, இவர் கால்வைக்காத கல்லூரிகள் இல்லை என்று தி.மு.க வினர் இப்போதும் சிலாகித்துப் பேசும் அளவுக்கு தி.மு.க-வின் பிரசார பீரங்கியாக இருந்தவர். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு பொருளாளர் பதவியில் அமரவைக்கப்பட்டார். "எம்.ஜி.ஆரின் தம்பி, அவர் வகித்துவந்த பதவியிலேயே அமர்ந்துவிட்டார்" என்று துரைமுருகனிடம் நக்கலாகவே சொன்னார்கள் சீனியர் தி.மு.க-வினர். பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைவுக்குப் பிறகு, `கட்சியின் சீனியர்’ என்கிற அடிப்படையில் துரைமுருகனை அந்தப் பதவியில் அமர்த்த விரும்பினார் ஸ்டாலின். அதற்காகவே அவர் வகித்துவந்த தி.மு.க-வின் பொருளாளர் பதவியை ராஜினாமாவும் செய்யவைத்தனர். ஆனால், அதற்குப் பிறகு கொரோனா தாக்கம் அதிகரித்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பதவியேற்பு வைபவமும் தள்ளிப்போனது. `போட்டிகள் இல்லாமல் தேர்வு செய்யப்படும் நிலை இருப்பதால், தனது பதவி குறித்த அறிவிப்பையாவது தலைமை வெளியிடும்’ என்று காத்திருந்தார் துரைமுருகன். ஆனால், அதற்கான எந்தச் சுவடும் தெரியாமல் போகவே மனதுக்குள் வேதனையை வைத்துக்கொண்டு மலையேறி ஏற்காடு சென்றுவிட்டார் துரைமுருகன்.

இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், `பொதுச் செயலாளர் தேர்வு பிறகு நடைபெறும்’ என்று அறிவிப்பு மட்டும் முரசொலியில் வர, பதவியே இல்லாத உறுப்பினராக இருந்த துரைமுருகன் ஏக வருத்தத்துக்குச் சென்றார். உடனடியாக அடுத்த அறிவிப்பில் `பொருளாளர் பதவியில் துரைமுருகனே தொடருவார்’ என்று வந்தது. இந்த அறிவிப்புகளுக்குப் பிறகே, `துரைமுருகன் கட்சி மாறப்போகிறார்’ என்று செய்திகள் கசிய ஆரம்பித்தன.

ஐம்பது ஆண்டுகளுக்குமேலாகக் கட்சியில் இருப்பவர். தலைவர் ஸ்டாலினைவிட கட்சியிலும் வயதிலும் மூத்தவர். `அவரைப் பதவிக்குக் கொண்டுவர தலைவர் குடும்பத்தில் எதிர்ப்பு உள்ளது’ என்று செய்திகள் கசிந்தன. அதற்குத் தோதாக கொரானோ அச்சத்தில் அறிவாலயம் வருவதையோ, தலைவரைச் சந்திப்பதையோ துரைமுருகனும் தவிர்த்தார். இதைவைத்து `மனக்கசப்பில் துரைமுருகன் இருக்கிறார்’ என்று எதிர்த்தரப்பு செய்த பிரசாரம் நன்றாக வொர்க்அவுட் ஆனது.

துரைமுருகன் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்கள்
துரைமுருகன் மற்றும் தி.மு.க எம்.எல்.ஏக்கள்

"பொதுச் செயலாளர் பதவியில் நான் அமர வேண்டும் என்பதற்குக் காரணமே, இத்தனை ஆண்டுகள் இந்தக் கட்சிக்குப் பாடுபட்டுவிட்டேன். எனது காலம் இனி கொஞ்சம்தான். ஆனால், கட்சியின் வரலாற்றில் பொதுச் செயலாளர் பட்டியலில் நானும் வந்துவிடுவேன் என்கிற ஆசை மட்டுமே இந்தப் பதவி மீதான பற்றுக்குக் காரணம்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கண்கலங்கிச் சொல்லியிருக்கிறார். "இதையே தங்களுக்குச் சாதமாக்கிக்கொண்டு அவருக்குத் தூண்டில்போடச் சிலர் முயன்றது உண்மை. தன்னை வளர்த்தவரிமே சிக்காதவர், இந்த தூண்டிலுக்கெல்லாம் சிக்குவாரா?’’ என்று துரைமுருகனின் தி.மு.க பற்றை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். "உண்மையில் துரைமுருகனுக்கு தலைமைமீது சில மனவருத்தங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஐபேக் நிறுவனத்தின் செயல்பாடுகளும் தனக்குப் பதவி கிடைக்காமல் போனதற்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறார். அதற்காகக் கட்சி மாறும் எண்ணம் அவருக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவருடைய மகனின் எம்.பி பதவியும் இந்தக் கட்சியால் வந்ததுதானே...’’ என்கிறார்கள் துரைமுருகன் தரப்பினர்.

ஜெகத்ரட்சகன் - ஸ்டாலின்
ஜெகத்ரட்சகன் - ஸ்டாலின்

ஜெகத்ரட்சகன் அ.தி.மு.க-விலிருந்து வந்தாலும், கருணாநிதியின் நட்பால் தி.மு.க-வின் நம்பிக்கைக்குரிய நபராக வலம்வந்தவர். கருணாநிதியுடன் காரில் பயணம் செய்வது முதல், மேடையில் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்வதுவரை கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர். "தற்போது தலைவர் ஸ்டாலினுடனும் அவரை அடிக்கடிக் காண முடிவதில்லை. அறிவாலயம் பக்கமும் பார்க்க முடிவதில்லை. மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் அவர்மீது தொடர்ந்துள்ள வழக்குகளில் சிக்கல் இருக்கிறது. அது அவருக்குப் பீதியை ஏற்படுத்திவிட்டதால் கு.க.செல்வம் பாணியில் பா.ஜ.க-வில் இணையப்போகிறார்’’ என்று செய்திகள் வந்தன. அதற்கு பதிலடி கொடுக்கவே, "தி.மு.க-வில் எனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது. சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்று தனது கருத்தையும் வெளிப்படுத்திவிட்டார்.

தி.மு.க:`பொதுச் செயலாளர் பதவி; திடீர் கோபம் ஏன்?’ - கொதித்த துரைமுருகன்

"கொரோனா காலத்தில் பல மூத்த நிர்வாகிகளே தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க முடியாமல் இருக்கிறார்கள். பலரும் தங்களது உடல்நிலையைப் பாதுகாத்துக்கொள்ள, கிராமங்களில் முகாமிட்டுள்ளார்கள். ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அறிவாலயம் வரும் மூத்த நிர்வாகிகள்கூட உடனடியாக கிளம்பிச் சென்றுவிடுகிறார்கள். இந்த இடைவெளியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க நினைக்கிறது. துரைமுருகன், ஜெகத்ரட்சகன் இருவருமே வன்னியர்கள். இவர்களைக் குறிவைத்து செய்திகளைக் கசியவிடக் காரணமே, வட மாவட்டங்களில் தி.மு.க வாக்கு வங்கியைச் சமூகரீதியாக உடைப்பதற்காகவே.

ஜெகத்ரட்சகன்  - துரைமுருகன்
ஜெகத்ரட்சகன் - துரைமுருகன்

`அடுத்த ஆண்டு தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்’ என்கிற உற்சாகத்தில் கட்சியின் நிர்வாகிகள் இருக்கிறார்கள். எனவே, தமிழகத்தில் `மலரவே மலராது’ என்று தெரிந்த பிறகும் தாமரைக்குப் பின்னால் அணிவகுக்க உண்மையான தி.மு.க தொண்டன்கூட விரும்ப மாட்டான். தி.மு.க என்பது வெறும் கட்சியல்ல, அது கொள்கையால் வளர்ந்த இயக்கம்” என்கிறார் தி.மு.க தலைமை கழக நிர்வாகி ஒருவர்.

தி.மு.க-வில் கொள்கை தீபங்களாக இருந்தவர்கள் கோபுரத்தில் ஜொலித்த காலம் மாறி, கோடிகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே கோட்டைக்குப் போக முடியும் என்கிற நிலையை மாற்றினாலே இந்த வதந்திகளெல்லாம் அடங்கிவிடும்.

அடுத்த கட்டுரைக்கு