Published:Updated:

ஒருமுறை... ஒரேமுறை!

சட்டமன்றத்தில் நான் பார்த்து வியந்த ஆளுமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உமாநாத்.

பிரீமியம் ஸ்டோரி

ரசியல் கட்சிகளில் பயணிப்பவர்களுக்கு, ஒருமுறையாவது எம்.எல்.ஏ, எம்.பி ஆகிவிடவேண்டும் என்கிற லட்சியம் நிச்சயம் இருக்கும். அப்படி ஒரேயொருமுறை சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சுவாரஸ்யமான பதில்கள் இங்கே...

பழ.நெடுமாறன் தமிழர் தேசிய முன்னணி

‘`1980-ம் ஆண்டு, என் தலைமையிலான காமராஜ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மதுரை மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானேன். முதல் இரண்டு மாதங்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருந்த ஜாம்பவான்கள் பேச்சுகளைக் கவனித்தேன். மாலை ஆனதும் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்று, சட்டமன்ற நடவடிக்கைகளின் தொகுப்புகளைப் படித்தேன். அதற்குப் பிறகுதான் சட்டமன்ற விதிமுறைகள் குறித்த புரிதலும் தெளிவும் ஏற்பட்டன.

அப்போது, ஆளும்கட்சியான அ.தி.மு.கவுக்கும் எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கும் இடையே எப்போதும் காரசாரமான விவாதம், கூச்சல், குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். சட்டமன்றத்தின் நேரம் அடிக்கடி வீணாகும். அப்படி ஒருநாள் சட்டமன்றம் கூச்சமும் குழப்பமுமாக இருந்தபோது, என்னால் பொறுக்கமுடியாமல், நான் பேசவேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க அவரும் பேச அனுமதித்தார். நான் எழுந்து ஜீவானந்தம், அறிஞர் அண்ணா ஆகியோர் எப்படி லாகவமாக எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களைக் கையாண்டார்கள் எனப் பேசினேன். அடுத்த மூன்று, நான்கு மாதங்கள் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் இல்லை. அதை என்னால் மறக்கமுடியாது. சட்டமன்றத்தில் நான் பார்த்து வியந்த ஆளுமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உமாநாத். சட்டமன்ற விதிமுறைகளின்படி எவர் மனமும் புண்படாதபடி பேசக்கூடியவர்.

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

1984-ல் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டேன். அப்போது இந்திரா காந்தி மரணத்தை யொட்டி எழுந்த அனுதாப அலையால், 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினேன். அதற்குப் பிறகு தேர்தல் அரசியலிலிருந்து வெளியேறிவிட்டேன். அதற்காக, நான் எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செல்வப்பெருந்தகை காங்கிரஸ்

‘`2006 முதல் 11 வரை விசிக சார்பில், மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருந்தேன். மக்கள் மன்றத்தில் பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தாலும் அது பலருக்குப் போய்ச் சேரவில்லை. வழக்குகள்தான் என்மீது விழுந்தன. ஆனால், எம்.எல்.ஏவாக இருந்தபோது நான் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் அன்றைய முதல்வர் கலைஞர் நிறைவேற்றினார்.

ஒருமுறை... ஒரேமுறை!

அங்கனூர் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு வெள்ளாற்றின் வழியாக நடந்து வந்துதான் மாணவர்கள் படித்து வந்தார்கள். மழைக்காலங்களில் நான்கு மாதம் தண்ணீரில் நடந்து வந்துதான் படிக்கவேண்டும் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு அதுதான் சொந்த ஊர். அவரும்கூட அப்படி சிரமப்பட்டுத்தான் படித்தார். பாலம் இருந்தால் இந்தச் சிக்கல் இருக்காது என நான் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, நான்கு பாலங்கள் கட்டப்பட்டன. சட்டமன்றத்தில் நான் பார்த்து வியந்த ஆளுமை, அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த, மறைந்த செல்வராஜ்தான். கையில் எந்தவொரு குறிப்பும் இல்லாமல் 200-க்கும் மேற்பட்ட செடிகள், மரங்களின் பெயர்களை சர்வ சாதாரணமாகச் சொல்லுவார். அதற்குப் பிறகு நான் 2011-ல் செங்கத்திலும், 2016-ல் திருப்பெரும்புதூரிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும் அது குறித்து நான் எப்போதும் கவலைப்பட்டது கிடையாது.’’

பழ.கருப்பையா

‘`2011-ல் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானேன். பல ஆண்டுகளாகப் பொதுவாழ்க்கையில் இருந்ததால் பெரிய பாதிப்பை அது உண்டாக்கவில்லை. புதிய இடத்துக்குப் போகும்போது, எத்தகைய உணர்வு இருக்குமோ அப்படித்தான் இருந்தது.

காவல்துறை மானியக் கோரிக்கைகள் வந்தால், முதல்வர் ஜெயலலிதா என்னைத்தான் பேச அழைப்பார். இரண்டு ஆண்டுகள் நான்தான் பேசினேன். ஆளும் கட்சியில் இருந்துகொண்டு, அப்போதே, அரசு அதிகாரிகளின் அதிகார வரம்பு மீறல் குறித்து 20 நிமிடங்கள் பேசினேன். உடனடியாக, ஜெயலலிதா எழுந்து அரைமணி நேரம் மழுப்பலாகப் பதில் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவரின், எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதில் சொன்னது போய், ஆளும் கட்சி உறுப்பினருக்குப் பதில் சொல்ல அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டது எனக்கு மட்டும்தான். சட்டமன்றத்தில், நான் பார்த்தவரையில் ஓரளவுக்கு விவரமான நபர் என்றால் பண்ருட்டி ராமச்சந்திரனைச் சொல்லலாம். அவர் அப்போது விஜயகாந்த் கட்சியில் இருந்தார்.

ஒருமுறை... ஒரேமுறை!

2016-ல் நான் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறி, எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்தேன். அதனால் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு ஏற்படவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நேரம் நான் தி.மு.கவில் இருந்தேன். அங்கு நானும் சீட் கேட்கவில்லை, அவர்களும் கொடுக்கவில்லை. இனி, எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்கிற விருப்பமே இல்லை என்று சொல்ல முடியாது, அதேவேளை நான் பின்பற்றுகிற கொள்கைகளை விட்டுக்கொடுத்து அதை அடைவதில் எனக்கு விருப்ப மில்லை. முப்பது வருட தமிழக அரசியல் வரலாற்றில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் வந்தது நான் மட்டும்தான்.’’

லிங்கம் இந்திய கம்யூனிஸ்ட்

‘`நாடாளுமன்றத்துக்குப் போகவேண்டும் என்கிற ஆசை இல்லாமல் வாய்ப்பு அமைந்தது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

2009-ம் ஆண்டில்தான் எம்.பி ஆனேன். என்னுடைய பாராளுமன்ற அனுபவத்தில் பல முக்கியப் பிரச்னைகளில் நான் தலையிட்டி ருந்தாலும், ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்ததை முக்கியமான பங்களிப்பாகச் சொல்லலாம். நான் எம்.பியாக இருக்கும்போது, தற்போது இலங்கையின் அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்துக்குச் சிறப்பு விருந்தினராக வந்தார். அவரை உள்ளே அனுமதிக்கக் கூடாது எனப் போராட்டம் நடத்தினோம். அதுவரையில், விருந்தினராக வந்த யாரையும் அப்படி நடத்தியதில்லை என அத்வானி போன்ற தலைவர்கள் வருத்தப்பட்டார்கள். பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் சிலர் சொன்னார்கள். ஆனால் நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வில்லை.

ஒருமுறை... ஒரேமுறை!

நாடாளுமன்றத்தில் நான் பார்த்து வியந்த ஆளுமையாக, எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி குருதாஸ்குப்தாவைச் சொல்லலாம்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசித் தொகுதியில் போட்டியிட்டேன். 2016 சட்ட மன்றத் தேர்தலில், திருவில்லி புத்தூர்த் தொகுதியில் போட்டி யிட்டேன். ஆனால், இருமுறையும் வெற்றிபெறவில்லை. எனக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த யாருக்கும் பதவிமீதெல்லாம் தனி விருப்பம் கிடையாது.”

செந்தில் பா.ம.க

‘`2004-ல் தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி ஆனேன். முதல்நாள் நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது, கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்கிற ஒரு கட்டடத்துக்குள் நுழைகிறோம் என்கிற சிலிர்ப்பு இருக்கத்தான் செய்தது. சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மிகப்பெரிய தலைவர்களை நேரில் பார்த்ததும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவில் நிறைய முறைகேடுகள் நடந்ததால், அதில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர ஒரு சட்டத்தை அன்புமணி முன்மொழிந்தார். அதில் எனக்கும் பங்குண்டு. நான் செய்ததில் மிக முக்கியப் பணியாகக் கருதுவது அதைத்தான். ஆனால், தற்போது வந்திருக்கிற சட்டம் அல்ல நாங்கள் முன்மொழிந்தது. அடுத்ததாக, நாடு முழுவதும் கல்வியில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்கான தனிநபர் மசோதாவை நான்தான் முன்மொழிந்தேன்.

ஒருமுறை... ஒரேமுறை!

நாடாளுமன்றத்தில் நான் பார்த்து வியந்த ஆளுமை ப.சிதம்பரம்தான். சுதந்திர இந்தியாவில், ஒரு கட்சி ஆட்சியில் இருந்த ஐந்தாண்டுகளில், ஐந்து பட்ஜெட் தாக்கல் செய்தது அவர் மட்டும்தான், ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழியிலும் அவரின் ஆளுமை என்னை வியக்க வைத்தது.

தொடர்ந்து நான், 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தலில் அதே தர்மபுரித் தொகுதியில் போட்டி யிட்டேன். ஆனால் வெற்றிபெறும் வாய்ப்பு அமையவில்லை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு