Published:Updated:

வாசனுக்கு ராஜ்யசபா சீட் கணக்கை எழுதிய ஏர்போர்ட் காட்சி... 150 நாட்களுக்கு முன்பு நடந்த ஃபிளாஷ்பேக்!

மோடியைச் சந்தித்த போது
மோடியைச் சந்தித்த போது

இன்றிலிருந்து 150 நாள்களுக்கு முன்பே ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதற்குச் சாட்சி, சென்னை ஏர்போர்ட்டில் நடந்த காட்சி!

அக்டோபர் 11-ம் தேதி. சென்னை ஏர்போர்ட்...

மாமல்லபுரம் வந்த சீன அதிபரை சந்திக்க வந்தார் பிரதமர் மோடி. அவரை வரவேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பி.ஜே.பி பிரமுகர்கள் எனப் பலரும் காத்திருந்தார்கள்.

மோடியை ஏர்போர்ட்டில் வரவேற்கும் வாசன்
மோடியை ஏர்போர்ட்டில் வரவேற்கும் வாசன்

எல்லோரிடமும் சம்பிரதாயமான மரியாதையைச் செலுத்தினார் மோடி. அவர்கள் அளித்த வணக்கத்தையும் சால்வையையும் மோடி பெற்றுக்கொண்டபோது, அதில் வழக்கமான ரெடிமெட் நிகழ்வுகள்தான் அரங்கேறின. ஆனால், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனுக்கு மட்டும் ஸ்பெஷல் மரியாதை அன்றைக்குக் கிடைத்தது.

மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்ட 53 வி.ஐ.பி-களில் பிரேமலதா, பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்குக் கிடைக்காத சிறப்பு ஜி.கே.வாசனுக்குக் கிடைத்தது.

வாசனுக்கு ஒரு சீட்
வாசனுக்கு ஒரு சீட்

ஜி.கே.வாசன் மோடிக்குச் சால்வை அணிவித்தபோது ``எப்படி இருக்கீங்க வாசன் ஜீ? டெல்லி வந்து என்னைச் சந்திக்கிறதா சொன்னீர்களே... ஏன் வரவில்லை?'' என்று வாஞ்சையுடன் வாசனிடம் மோடி கேட்டபோது பக்கத்தில் நின்ற பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். வாசனுக்கும் இது இன்ப அதிர்ச்சிதான். ``கண்டிப்பாக வருகிறேன்'' என மோடியிடம் வாக்குறுதி கொடுத்தார் வாசன். தனக்கு வாசன் அளித்த சால்வையை ரொம்ப நேரம் கழற்றாமல் இருந்தார் மோடி.

அந்த ஏர்போர்ட் காட்சிகள் வாசனுக்கு அன்றைக்கே ராஜ்யசபா சீட்டை உறுதிப்படுத்திவிட்டன. மோடியை வரவேற்க பிரேமலதாவும் போயிருந்தார். அவருக்கு இப்படியான சிறப்பு கிடைக்கவில்லை. ராஜ்யசபா சீட் கேட்டு எடப்பாடியிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் பிரேமலதா.

மோடியுடன் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ்
மோடியுடன் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ்

எடப்பாடியிடம் சுதீஷை தூது வேறு அனுப்பினார். அவருக்கு இப்போது ராஜ்யசபா சீட்டும் தரப்படவில்லை. அக்டோபர் 11-ம் தேதியே ராஜ்யசபா சீட் கணக்கை ஏர்போர்ட்டில் எழுதிவிட்டார்கள் போல.

இந்த ஏர்போர்ட் காட்சிகள் நடப்பதற்கு 6 மாதங்கள் முன்புதான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 தொகுதிகளும் பி.ஜே.பி-க்கு 5 தொகுதிகளும் தே.மு.தி.க-வுக்கு 4 தொகுதிகளும் தரப்பட்டன. த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

பன்னீருடன் வாசன்
பன்னீருடன் வாசன்

நான்கு தொகுதிகள் நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய தே.மு.தி.க-வுக்கு ராஜ்யசபா சீட் இல்லை. ஒரு தொகுதியை மட்டுமே பெற்ற த.மா.கா-வுக்கு ராஜ்யசபா சீட் யார் பெற்றுக் கொடுத்திருப்பார்கள் என யூகிக்கத் தேவையில்லை. தமிழக பி.ஜே.பி-யின் மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ் எடப்பாடியைச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பு எதற்காக நடந்திருக்கும் என்பது இப்போது புரிந்திருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வி அடைந்த பிறகும்கூட அந்தக் கூட்டணியில் இருந்து வாசன் விலகவில்லை. பிரதமர் மோடியையும் மத்திய அரசுத் திட்டங்களையும் தமிழக அரசையும் வாசன் தீவிரமாக ஆதரித்து வந்தார். இது பி.ஜே.பி-யினரை தாண்டி மோடியையும் ஈர்த்தது. ``சந்திக்கவில்லையே'' என மோடி ஆதங்கப்பட்ட பிறகு நவம்பர் 6-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜி.கே.வாசன்.

மோடியைச் சந்தித்த போது
மோடியைச் சந்தித்த போது

ஏர்போர்ட் நிகழ்வுகளும் டெல்லி சந்திப்பும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பி.ஜே.பி.,யோடு இணையப் போகிறது என செய்திகள் பரவின. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், வாசன் இதை மறுத்தார். ஜி.கே.வாசனை தமிழக பி.ஜே.பி தலைவர் ஆக்கும் முயற்சி நடப்பதாகப் பேச்சுகள் அடிபட்டன. இன்னும் சில காலத்தில் உண்மைகள் வெளிவரலாம்.

அடுத்த கட்டுரைக்கு