Published:Updated:

விஜய்யை விமர்சிக்கும் ஜெயக்குமாருக்கு `எம்.ஜி.ஆர் இலவச கத்திக்கடை' பற்றித் தெரியுமா?

நடிகர் விஜய் கத்தி வைத்திருப்பது பற்றிக் கவலைப்படுகிறார் அமைச்சர் ஜெயக்குமார். அவருக்கு நினைவுபடுத்த வேண்டிய வரலாறு ஒன்று இருக்கிறது!

கத்தியுடன் எம்.ஜி.ஆரும் விஜய்யும்
கத்தியுடன் எம்.ஜி.ஆரும் விஜய்யும்

`பிகில்' படம் ஆட்சியாளர்களுக்குத் 'திகில்' ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 'பிகில்' ஆடியோ வெளியீட்டு விழாவில், ''யாரை எங்கே வைக்க வேண்டும், என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்'' என விஜய் அனல் கக்க... அமைச்சரவை தொடங்கி, அடிமட்ட தொண்டர்கள் வரையில் விஜய்க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்
Vikatan

''நல்ல கருத்துக்களைத் திரைப்படம் வாயிலாகக் கூறியவர் எம்.ஜி.ஆர். ஆனால், விஜய் எதிர்மறையான விஷயங்களைச் செய்து வருகிறார். பிகில் பட போஸ்டரில் கையில் கத்தியுடன் விஜய் நிற்பது சரியில்லை. அவரைப் பின்பற்றும் இன்றைய தலைமுறையினரையும் தவறான பாதையில் கொண்டு செல்லும். விஜய் கத்தியுடன் இருக்கும் காட்சிகள் அவரின் ரசிகர்களையும் கத்தி வைத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடத் தூண்டாதா? `தல' எப்படி இருக்குமோ அப்படித்தான் வாலும் இருக்கும். எம்.ஜி.ஆரைப்போல நடிகர்கள் படங்களில் நல்ல கருத்துகளைச் சொல்ல வேண்டும்'' எனச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

போஸுக்காக விஜய் கத்தி வைத்திருப்பது பற்றிக் கவலைப்படுகிறார் ஜெயக்குமார். அவரின் தலைவரே, தொண்டர்களைக் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னதை மறந்துவிட்டாரா?

வரலாறு முக்கியம் அமைச்சரே! 

1986-ம் ஆண்டு காலகட்டம் அது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, ஆட்சித்தேரை வழக்கத்தைவிட மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அப்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்து நான்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் சட்ட மேலவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-வுக்கு அடி. இந்தச் சூழலில் மேலவைக்கு நியமன உறுப்பினர்கள் நியமிக்கும் விவகாரத்திலும் சர்ச்சை.

பிகில் படத்தில் கத்தியுடன் போஸ் கொடுக்கும் விஜய்...
பிகில் படத்தில் கத்தியுடன் போஸ் கொடுக்கும் விஜய்...

மேலவைக்கு கவர்னரால் நியமிக்கப்பட்டிருந்த மூன்று பேரின் பதவிக்காலம் முடிவடைந்து, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, எம்.ஜி.ஆரின் வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி, ஜி.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். ‘வெண்ணிற ஆடை நிர்மலா ஏற்கெனவே திவால் நோட்டீஸ் (இன்சால்வென்சி) கொடுத்தவர் என்பதால் சட்டப்படி அவர் எம்.எல்.சி ஆக முடியாது’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இன்சால்வென்சி ரத்தாக வேண்டுமானால் 10 லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். அந்தத் தொகை கட்டப்பட்டது. ‘ஒரே நாளில் 10 லட்சம் ரூபாயை எப்படிக் கட்ட முடியும்... அதை யார் கொடுத்தது?’ என்கிற கேள்விகள் எழுந்தன.

திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் வெண்ணிற ஆடை நிர்மலா...
திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் வெண்ணிற ஆடை நிர்மலா...

இதைத் தொடர்ந்து எம்.எல்.சி பதவியை நிர்மலா ராஜினாமா செய்தார். இதனால், 1986-ம் ஆண்டு வரையில் செயல்பட்டு வந்த மேலவைக்கு மூடுவிழா நடத்தினார் எம்.ஜி.ஆர்.

மேலவை கலைக்கப்பட்ட நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவராகக் கருணாநிதி இருந்தார். ``மேல் சபையில் எதிர்க்கட்சித் தலைவரா நான் வந்துவிட்டதால் இந்த சபையையே கலைத்துவிட எம்.ஜி.ஆர் முடிவு செய்திருப்பதாக அறிகிறேன். நான் இல்லாவிட்டால் இந்த சபை கலைக்கப்படாமல் நீடிக்கும் என்றால் எனது பதவியையே ராஜினாமா செய்துவிடுகிறேன்’’ என்றார் கருணாநிதி. எதையும் பொருட்படுத்தாமல் மேலவையைக் கலைத்தார் எம்.ஜி.ஆர்.

கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர்...
கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர்...

இப்படி அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் தடுமாறிக் கொண்டிருந்தது அ.தி.மு.க ஆட்சி. இதையெல்லாம் திசைதிருப்ப எம்.ஜிஆர் எதையாவது செய்ய நினைத்தார். எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டை நடத்தத் தேதி குறித்தார். அ.தி.மு.க அரசின் 10-ம் ஆண்டு தொடக்க விழாவும் எம்.ஜி.ஆர் மன்றத்தின் 2-வது மாநில மாநாடும் 1986-ம் ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் அமர்க்களப்பட்டது.

மாநாட்டையொட்டி மாபெரும் ஊர்வலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். மதுரை தெப்பக்குளத்தில் இருந்து ஊர்வலத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 'இதய தெய்வத்தின் இதயக்கனி ஜெயலலிதா அவர்களே வருக வருக...' என்கிற வாக்கியத்துடன் பெரிய பேனர் ஒன்று ஊர்வலம் புறப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. மோட்டார் பைக் வீரர்களுடன் தொடங்கிய ஊர்வலம் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டிருந்தது. தமுக்கம் மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் ஊர்வலத்தைப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் புகைப்படம் இன்றுவரையில் எவர்கிரீனாக இருக்கிறது. அந்தச் செங்கோலை ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு அளிக்க... அதை ஜெயலலிதாவுக்கே எம்.ஜி.ஆர் திருப்பி தரும் நிகழ்வு இந்த மாநாட்டில்தான் அரங்கேறியது. சமீபத்தில்கூட அந்தச் செங்கோலை எம்.ஜி.ஆருடன் இணைந்து பிடித்திருப்பவர் எடப்பாடிதான் என்று ஒரு செய்தி வாட்ஸ்அப்களில் பகிரப்பட்டு வந்தது.

எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கும் ஜெயலலிதா...
எம்.ஜி.ஆருக்கு செங்கோல் வழங்கும் ஜெயலலிதா...

மாநாட்டின் இறுதியில்தான் ஹைலைட். இறுதியாக மைக் பிடித்த எம்.ஜி.ஆர், ''1972 அக்டோபரில் நாம் கொண்டிருந்த உணர்ச்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு, லட்சிய வெறி, அயராத உழைப்பு ஆகியவற்றை மீண்டும் பெற வேண்டும். தமிழக மக்களின் ஆதரவு எப்போதும் நமக்குத்தான். இதை உலகுக்கு உணர்த்த புதிய வேகத்துடன் செயல்படுவோம். கடைசியில் உங்களிடம் ஒரு வாக்குறுதியைக் கேட்டுக்கொள்கிறேன்'' என நிறுத்தி தொண்டர்களைப் பார்த்தார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதாவுக்கு அடுத்து எடப்பாடியா? சர்ச்சையாகும் செங்கோல் வீடியோ!

''நாம் ஆளும் கட்சியாக இருந்தபோதும் கழகத் தொண்டர்களும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். நம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக அரசும் சட்டமும் அனுமதித்துள்ள ஆறு அங்குல கத்தி ஒன்றை ஒவ்வொருவரும் வைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் இதையே சொல்கிறேன். எதிராளிகளின் போக்கை போலீஸ்காரர்கள் கண்டிக்க முடியாத சூழலில், அவர்கள் உங்களைத் தாக்க எண்ணும்போது, உங்கள் தற்காப்புக்கு அது உதவும்'' என எம்.ஜி.ஆர் சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

''தற்காப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்' என்கிற எம்.ஜி.ஆரின் அதிரடிக்கு எதிர்வினைகள் ஏற்பட்டன. ஶ்ரீவில்லிபுத்தூரில் 'எம்.ஜி.ஆர் இலவச கத்திக்கடை'யைத் திறந்து தொண்டர்களுக்குக் கத்திகளை விலையில்லாமல் வழங்கினார் தாமரைக்கனி.

நீங்க எம்.ஜி.ஆரா... ரஜினியா? இதுல `am waiting' வேணாம் விஜய்!
``புத்தி இருப்பதால் அதை நாம் தீட்டுகிறோம். அது இல்லாதவர்கள் எதையோ தீட்டுகிறார்கள்'' என எம்.ஜி.ஆரை சீண்டினார் கருணாநிதி.

தொ.மு.ச துணைச் செயலாளர் டி.பி.மூர்த்தியின் மணிவிழாவில் பேசிய கருணாநிதி, ''ஒரு தவறுக்கு இன்னொரு தவறு பரிகாரம் ஆகாது. எம்.ஜி.ஆர் கத்தி ஏந்தச் சொன்னதால், நான் துப்பாக்கி ஏந்தச் சொல்ல மாட்டேன்'' என்றார். '' 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு' என்றார் அண்ணா. புத்தி இருப்பதால் அதை நாம் தீட்டுகிறோம். அது இல்லாதவர்கள் எதையோ தீட்டுகிறார்கள்'' என எம்.ஜி.ஆரை சீண்டினார் கருணாநிதி.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, செங்கோல்...
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, செங்கோல்...

இப்படி 'கத்தி'யின் வரலாறு படைக்கப்பட்ட அண்ணா தி.மு.க-வில் இருப்பவர்கள், அந்த வரலாறு தெரியாமல் 'கத்தி' படத்தின் நாயகனைச் சீண்டிக்கொண்டிருப்பது நகைமுரண். ''தற்காப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ளுங்கள்' என 33 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் சொன்னபோது இனித்தது. விஜய் கத்தியைப் பிடித்திருப்பதுபோல சினிமாவில் போஸ் கொடுப்பது கசக்கிறதா? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எடப்பாடியும் பன்னீரும் தங்களுக்குத் தரப்பட்ட வாளை ஏந்தியபடியே போஸ் கொடுத்ததைப் பார்த்து அ.தி.மு.க தொண்டர்கள் திசை மாற மாட்டார்களா?

வாளுடன் பன்னீரும் எடப்பாடியும்...
வாளுடன் பன்னீரும் எடப்பாடியும்...
விகடன்

அ.தி.மு.க வைத்த பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்குப் பலரும் ஆறுதல் சொன்ன நிலையில் எம்.ஜி.ஆரின் ஆட்சியை நடத்துபவர்கள் ஒரு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. சுபஸ்ரீயைக் கொன்ற ஜெயகோபாலை விட்டுவிட்டு, விஜய்யை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். ''நல்ல கருத்துகளைத் திரைப்பட வாயிலாகக் கூறியவர் எம்.ஜி.ஆர். ஆனால், விஜய் எதிர்மறையான விஷயங்களைச் செய்து வருகிறார்'' என்கிறார் ஜெயக்குமார். 'பேனர் வைக்கக் கூடாது' எனச் சென்னை உயர் நீதிமன்றம் எத்தனை உத்தரவுகளைப் போட்டது. அதைக் கேட்காமல் எதிர்மறையான விஷயங்களைத்தானே செய்தீர்கள். பேனரால் ரகு, சுபஸ்ரீ ஆகியோரின் உயிர்களைப் பறித்துவிட்டு, ''விஜய் கத்தி வைத்திருக்கிறார்'' என காருண்யம் பேசுகிறார்கள்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் கட் அவுட்...
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் கட் அவுட்...
விகடன்

உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் சீட்டுகளுக்காக, ''சுபஸ்ரீ உயிரிழந்தது விதியால். இது யதார்த்தமாக நடந்த விபத்து'' என்கிறார் பிரேமலதா. இது விதியல்ல. சதி.

Vikatan

பேனர் விவகாரத்தில் எத்தனை முறை நீதிமன்றம் குட்டியது. ஆடம்பர எமனுக்கு எதிராக 85 வயதிலும் பேனர்களைக் கிழித்து ரோட்டில் மறியல் செய்தார் டிராஃபிக் ராமசாமி. இத்தனைக்கும் பிறகும் ஆட்சியாளர்கள் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதானே இருந்தார்கள். பிகில் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிந்த அரசால், உயிரைப் பலிவாங்கிய அரசு அதிகாரிகளையும் ஜெயகோபாலையும் சஸ்பெண்ட்கூட செய்ய முடியவில்லை.

MGR
MGR
Vikatan / Hasifkhan

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் இதையெல்லாம் பார்த்து, தலையில் அடித்துக் கொள்வார் என்பது மட்டும் நிஜம்.