Published:Updated:

மேயர்-திமுக கவுன்சிலரிடையே கடும் வாக்குவாதம்; ஈரோடு மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு-என்ன நடந்தது?

கவுன்சிலரை எச்சரிக்கும் மேயர்

ஈரோடு மாநகராட்சிக் கூட்டத்தில் தனது இருக்கையைவிட்டு இறங்கி வந்து திமுக மேயரும், திமுக கவுன்சிலரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேயர்-திமுக கவுன்சிலரிடையே கடும் வாக்குவாதம்; ஈரோடு மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு-என்ன நடந்தது?

ஈரோடு மாநகராட்சிக் கூட்டத்தில் தனது இருக்கையைவிட்டு இறங்கி வந்து திமுக மேயரும், திமுக கவுன்சிலரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
கவுன்சிலரை எச்சரிக்கும் மேயர்

ஈரோடு மாநகராட்சியின் அவசர கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மேயர் நாகரத்தினம் (திமுக) தலைமை வகித்துப் பேசினார். ஆணையாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் 8-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆதிஸ்ரீதர், ``என்னுடைய 8-வது வார்டில் மாநகராட்சி சார்பில் எந்தப் பணியையும் செய்யவில்லை. பலமுறை கூறியும் பழுதடைந்த சாலையைச் சீரமைக்கவில்லை. இந்தப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் எப்போது செய்து தரும்" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மேயர் நாகரத்தினம், `தற்போது மாநகராட்சியில் போதிய நிதியிருப்பு இல்லாததால், பணிகளைச் செய்ய முடியவில்லை. நிதி வந்ததும் பணிகள் செய்து தரப்படும்’ என்றார்.

கவுன்சிலரை எச்சரிக்கும் மேயர்.
கவுன்சிலரை எச்சரிக்கும் மேயர்.

அதற்கு கவுன்சிலர் ஆதிஸ்ரீதர் அதிருப்தி தெரிவித்து, ``எப்போ கேட்டாலும் மாநகராட்சியில் நிதி இல்லை என்கிற காரணத்தையே கூறிவருகிறீர்களே" என்றார். அப்போது குறுக்கிட்ட மற்ற திமுக கவுன்சிலர்கள், ``எதிர்க்கட்சிகாரங்களைப்போல பேசாதீங்க" என்றனர். பதிலளித்த ஆதிஸ்ரீதர், ``எனக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்காக நான் பேசுறேன். நிதி இல்லைன்னு எத்தனை நாள் மக்களிடம் சொல்ல முடியும்... மாநகராட்சியில் 50, 60 தீர்மானங்களைப் போடறீங்க. அதுக்கெல்லாம் நிதி இருக்கான்னு மக்கள் கேக்குறாங்க" என்றார். உடனே மேயர் நாகரத்தினம், ``விடுங்க! அதையெல்லாம் பேசி சரி பண்ணிக்கலாம்" என்றார்.

அதையடுத்து, ``எதைச் சரி செய்துக்கலாம்... எதுவா இருந்தாலும் உங்க வீட்டுக்காரர் (திமுக மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம்) தான் வந்து பேசுறார். மேயரா இருக்கிற நீங்க பேசறது இல்லை" என்றார் ஆதிஸ்ரீதர். அதைக் கேட்டு ஆவேசத்துடன் எழுந்து நின்று எச்சரிக்கை விடுத்த மேயர் நாகரத்தினம், ``யாரோ தூண்டுதலின்பேரில்தான் இப்படி நடந்துகொள்கிறீர்கள். எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்" எனக் கூறினார்.

இருக்கையை விட்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேயர்.
இருக்கையை விட்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மேயர்.

அப்போதும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோபத்துடன் தனது இருக்கையைவிட்டு இறங்கி வந்து ஆதிஸ்ரீதருடன் மேயர் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக் கண்ட மற்ற கவுன்சிலர்கள் ஆதிஸ்ரீதரை, ``நீங்க எதிர்க்கட்சி கவுன்சிலரா... தி.மு.க கவுன்சிலரா... ஏன் இப்படி நடந்துக்குறீங்க" என்று கேட்டனர். ஒருகட்டத்தில் ஆதிஸ்ரீதரின் இருக்கைக்கு அருகிலேயே அமர்ந்த மேயர் நாகரத்தினம், ``எதுவா இருந்தாலும் நமக்குள் பேசித் தீர்த்துக்கலாம். நிதி வந்ததும் உங்க வார்டுல வேலை நடக்கும்" என்றார். அப்போதும் ஆதிஸ்ரீதர் பேசிக்கொண்டே இருந்ததால், ``நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க" என்று கூறி மற்ற தி.மு.க கவுன்சிலர்கள் அவரை அடக்கினர்.
பின்னர், ``நீங்க போங்க அக்கா..." என்று மேயரைச் சமாதானப்படுத்தி அவரது இருக்கைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர்கள், மாநகராட்சியின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட ஆணையாளர் சிவகுமார், ``தூய்மைப் பணியை தனியார் கன்சல்டன்சிக்கு வழங்க வேண்டும் என்று 20 மாநகராட்சிகளுக்கும் அரசு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதால் அதை மீற முடியாது" என்றார். அப்போது குறுக்கிட்ட மேயர் நாகரத்தினம், ``தூய்மைப் பணியாளர்களை பாதிக்கும் இந்த அறிவிப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கலாம். மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கப்படும்" என்றார். இதனால் வெளிநடப்பு செய்வதை கைவிட்டு அ.தி.மு.க கவுன்சிலர்கள் அமர்ந்துகொண்டனர்.