Published:Updated:

நாங்கல்லாம் அப்பவே அப்படி!

துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

கஞ்சி போட்ட கதர் சட்டைபோல, விறைப்பும் முறைப்புமாக வெடித்துவரும் தமிழக அரசியல்வாதிகளிடம் சீரியஸ் கேள்விகளைத் தூக்கித் தூரவைத்துவிட்டு, ஜாலிகேலி கேள்விகளைத் தொடுத்தோம்...

நாங்கல்லாம் அப்பவே அப்படி!

கஞ்சி போட்ட கதர் சட்டைபோல, விறைப்பும் முறைப்புமாக வெடித்துவரும் தமிழக அரசியல்வாதிகளிடம் சீரியஸ் கேள்விகளைத் தூக்கித் தூரவைத்துவிட்டு, ஜாலிகேலி கேள்விகளைத் தொடுத்தோம்...

Published:Updated:
துரைமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
துரைமுருகன்

கலாய்த்தல் பொருட்டுக் கிளம்பிய நம் கேள்விக்கணைகளைக் கலகலப்பாகவே எதிர்கொண்டது அரசியல்படை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துரைமுருகன் (தி.மு.க பொருளாளர்)

‘`ஸ்கூல்ல, ரொம்பக்கம்மியா மார்க் வாங்கி அடி வாங்கிருக்கீங்களா?’’

‘`அடிவாங்கினதில்ல... ஆனா எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, எல்லா சப்ஜெக்ட்டிலும் 40 மார்க் வாங்கினாதான் பாஸ். ஆனா கணக்குல மட்டும் 35 மார்க் வாங்கினாலே போதும். நான் கணக்குல கரெக்டா 35 வாங்கி பாஸ் பண்ணினேன். பி.யூ.சி-யில்கூட கணக்கையும் வேதியியலையும் மனப்பாடம் பண்ணி பாஸ் செய்த ஒரே ஆள் நான்தான்.’’

குறும்புக் கேள்விகள்
குறும்புக் கேள்விகள்

‘`க்ளாஸ் கட் அடிச்சது உண்டா?’’

‘`என்ன கேட்டீங்க.... ‘கட்’டா? படிக்கிற காலத்துல அதுதானே எங்களோட முழு வேலையே! ‘க்ளாஸை ஒழுங்கா அட்டென்ட் பண்ணியிருக்கீங்களா’ன்னு கேள்வியை மாத்திக் கேளுங்க!"

‘`தேர்வு அறையில் பிட் அடிச்சது உண்டா?’’

‘`அதுமட்டும் என்னால முடியாது சார்... ஏன்னா, மக்கப் பண்றதுல நான் மன்னன்! ஒண்ணும் புரியாத இங்கிலீஷ்ல 67 கட்டுரைகளையும் மனப்பாடம் பண்ணியே பாஸ் பண்ணியிருக்கேன். இப்போக்கூட கேட்டீங்கன்னா அதில் 35-ஐ கடகடன்னு சொல்லிடுவேன்.’’

‘`லவ்வு... கிவ்வு...?’’

‘`லவ்வா... அட அதுக்கெல்லாம் எங்க சார் நேரம்! காலேஜ்ல நாம ஹீரோதான். ஆனா, ஒரு பொண்ணோட நான் பேசிக்கிட்டிருந்தாலே, அடுத்த நிமிஷம் நூறு பேர் என்னைச் சுத்திவந்து நின்னுக்கிட்டு ‘அண்ணே என்ன பேசுறீங்க...’ன்னு கேட்டு நின்னுடுவானுங்க. இதுல எங்கேயிருந்து லவ் பண்றது? இத்தனைக்கும் நான் எம்.ஏ படிக்கும்போது, எங்க கிளாஸ்ல 19 பேர் பொண்ணுங்க. நாங்க 5 பேர்தான் ஆம்பளைப் பசங்க! ஆனாலும் லவ் பண்ண வாய்ப்பே இல்லாமப்போச்சு!’’

‘`ஒருதலையாகக்கூட யாரையும் காதலிக்கலையா?’

‘`ஒருதலையா காதலிச்சா, போடா தறுதலைன்னுடுவாங்க!’’

கே.எஸ்.அழகிரி (தமிழகக் காங்கிரஸ் தலைவர்)

வெடின்னதும் என்ன ஞாபகத்துக்கு வரும்?

``பள்ளிக்காலத்தில் தீபாவளிப் பண்டிகையின்போது, வெடி வெடிப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தைவிடவும் வெடிக்காமல் கிடக்கும் வெடிகளை எடுத்துவந்து, அந்த வெடிகளின் உள்ளிருக்கும் மருந்தினை எடுத்துக் கொட்டி, புது வெடி செய்து கொளுத்துவதென்பது தனி சந்தோஷம்! `டேய் அதெல்லாம் கூடாதுடா' எனப் பெரியவர்கள் திட்டுவார்கள். அதனால், தெருவில் உள்ள ஒரு மாட்டுத் தொழு வத்தில்தான் இதை ரகசியமாகச் செய்வோம். ஒருமுறை செய்து கொண்டிருக்கும்போதே, திடீரெனத் தீப்பற்றி வெடித்துவிட்டது.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சினிமாவில், வெடி வெடிக்கிற காட்சிகளில் முகமெல்லாம் கறுப்பாக்கிக் காட்டு வார்களே... அதுபோல, சுற்றியிருந்த எங்கள் அனைவரின் முகத்திலும் கரித்தூளும் வெடிமருந்தும் அப்பி, கன்னங்கரேலென ஆகிவிட்டோம். வீட்டிற்குத் தெரிந்தால் நிச்சயம் அடிவிழும் என்று பயந்து, நாங்களே ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் குளித்து, உடம்பைச் சுத்தமாக்கிக்கொண்டோம். ஆனாலும்கூட ‘இப்போ ஏன் குளிச்சீங்க...’ன்னு வீடுதோறும் விசாரணை கமிஷன் வைத்த போது, பொய் சொல்லி சமாளித்துப்பார்த்தோம், முடியவில்லை. மாட்டிக்கொண்டு அடி வாங்கினோம்.’’

‘`நீங்கள் அடிக்கடி சொல்லுகிற பொய்?’’

‘`கட்சி வேலையாக தினமும் பலரையும் சந்திக்க வேண்டியதிருக்கும்; கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியதிருக்கும். ஆனாலும் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்குப் போய்ச் சேரமுடியாது... காலதாமதமாகிவிடும். அதுபோன்ற நேரத்தில், ‘இதோ உங்கள் ஊர் பக்கத்தில்தான் வந்து விட்டேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து விடுவேன்’ என்று வழக்கமான பொய்யைத்தான் சொல்லிவருகிறேன்.

நாஞ்சில் சம்பத்(அரசியல் - இலக்கிய மேடைப் பேச்சாளர்)

‘`தலைதீபாவளிக்கு மாமனாரிடம் அடம்பிடித்து வாங்கிய சீர் என்ன?’’

‘`தலைதீபாவளிக்கென்று எதுவும் கேட்டு வாங்கியதில்லை. ஆனால், திருமணமான புதிதில் ஒரு தீபாவளியன்று என் மாமனார் வீட்டிலிருந்து, புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கித் தந்தார்கள். கூடவே, பசும்பால் நிரம்பிய தூக்கு ஒன்றினையும் கொடுத்தனுப்பி னார்கள். பால் தூக்கினை அந்தப் புதிய ஸ்கூட்டரின் பின்னால் வைத்துக் கட்டிக்கொண்டு என் மனைவியோடு ஸ்கூட்டரில் ஸ்டைலாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

டூ வீலர் ஓட்டி ரொம்பவும் நாளாகிப் போயிருந்ததால், அந்தப் புதிய ஸ்கூட்டரை என்னால் அவ்வளவு எளிதாக ஓட்ட முடியவில்லை. ஆனாலும் சிரமப்பட்டு என் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்துவிட்டேன். மிகச்சரியாக வீட்டு முன்னே வந்து சேரவும் தடுமாறி நானும் என் மனைவியும் வண்டியோடு சேர்ந்து கீழே விழுந்தோம். பாலெல்லாம் கீழே கொட்டி ஓட, தெருவே வேடிக்கை பார்த்தது. அன்றோடு டூ வீலர் ஓட்டும் பழக்கத்தை விட்டுவிட்டேன்!’

``அரசியலில், உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும் நடைமுறை எது?’’

‘`மேடைகளில் கௌரவிப்பதற்காக சால்வை போடுவதுதான். ஏற்கெனவே எனக்குப் போட்ட சால்வையை, என் கண் முன்னாலேயே இன்னொருவருக்கும் போடுகிற கொடுமையையெல்லாம் பார்த்திருக்கிறேன். அதனால்தான், ‘சால்வை போடுகிற கலாசாரத்தை ஒழிக்கவேண்டும்’ என்று நீண்ட நாள்களாக நான் சொல்லி வருகிறேன்.’’

‘`நீங்கள் ஹீரோவாக நடிக்கும் படத்தில், உங்களுக்கு ஜோடியாக எந்த நடிகை பொருத்தமாக இருப்பார்?’’

‘`எனக்கு இப்போது 60 வயது ஆகிறது. ஆனாலும் இளமையோடுதான் இருக்கிறேன். எனவே, கீர்த்தி சுரேஷ் எனக்கு ஜோடியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும்!’’

கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர்)

``உங்களுடைய முதல் காதல் எது?’’

‘`புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பள்ளியில் பத்தாவது படிக்கும்போது உடன் படித்த பொண்ணை ஒருதலையாகக் காதலித்ததுதான் என் முதல் காதல். 6, 7 கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்குச் செல்லவேண்டும்.

கருணாஸ்
கருணாஸ்

காலையிலும் சாயங்காலமும் அந்தப் பொண்ணுக்குப் பின்னாடியே செக்யூரிட்டிபோல பாதுகாப்பாகப் போய்வருவேன். ஆனாலும் கடைசிவரை, ‘இதயம்’ முரளி மாதிரி ஒரு வார்த்தைகூட அவளிடம் பேசவில்லை.’’

``எதாவது தப்பு பண்ணி மனைவிகிட்ட அடிவாங்கிருக்கீங்களா?’’

‘`அடி வாங்கியதில்லை... ஆனால், அடிக்கடி திட்டு வாங்கியிருக்கிறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதுமாதிரி... நண்பர்களோடு சரக்கு அடித்துவிட்டு இரவில் லேட்டாக வீடு திரும்பும்போதெல்லாம், பார் பில்லைப் பார்த்துவிட்டு செமய்யாகத் திட்டுவார்கள்.’’

ஜெயக்குமார் (அதிமுக)

``வாலிப வயதில், பெண்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்னென்ன வித்தைகள் செய்தி ருக்கிறீர்கள்?’’

‘`ஜாவா, புல்லட், ராஜ்தூத் என அப்போதிருந்த எல்லா மாடல் வண்டிகளையும் ஓட்டியிருக்கிறேன். முறையாக நான் பாட்டு வகுப்புக்கெல்லாம் போனதில்லை. ஆனாலும் நன்றாகப் பாடக்கற்றுக்கொண்டு சிறந்த பாத்ரூம் சிங்கராக என்னை வளர்த்துக்கொண்டேன். தலைமுடி இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர்போலத் தலைவாரி, அவர் பாடல்களை விசிலடித்துப் பாடி ஸ்டைல் பண்ணியிருக்கிறேன்.’’

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

‘`நீங்கள் மேடையேறிப் பாடுவதைப் பலரும் செமயாகக் கலாய்க்கிறார்களே?’’

‘`மேடையேறிப் பாடுவதற்கு அடிப்படையில் ரெண்டு தகுதிகள் வேண்டும். ஒன்று, ஸ்கில், இன்னொன்று, தில். இந்த ரெண்டும் எனக்கிருக்கிறது, பாடுகிறேன்!’’

‘`சினிமாவில், சாக்லேட் பாய் ஹீரோ, ஆக்‌ஷன் ஹீரோ என இரண்டு வாய்ப்புகளில் எதைத் தேர்வு செய்வீர்கள்? உங்கள் ஜோடி யார்?’’

``ஆக்‌ஷன் ஹீரோதான். ஆக்‌ஷன் ஹீரோ என்பதால் என்னோடு ஜோடியாக யார் நடித்தாலும் ஏற்றுக்கொள்ள நான் தயார்தான்.’’

‘`வாழ்க்கையில் உங்களுக்கு மரண பயம் காட்டியவர்கள் என்றால் யாரைச் சொல்வீர்கள்?’’

‘`ஜெயக்குமாரைத்தான் சொல்ல வேண்டும். ஆமாம்... நான்தான் எனக்கே மரணபயம் காட்டியிருக்கிறேன்.’’