Published:Updated:

கமல்ஹாசன் அவர்களுக்கு உண்மை ரசிகனின் கடிதம்..! #MyVikatan

கமல்
கமல்

உங்களைப் பொறுத்தவரை நீங்கள் சினிமாவையோ, சினிமா உங்களையோ இன்று வரை கைவிடவில்லை..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்பிற்கினிய திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு, உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ரசிகர்களில் ஒருவன் எழுதிக் கொண்டது,

வணக்கம்.

என் மனதிற்கு பட்ட சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். தங்களின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.. திரைப்படங்களிலும், செய்திகளிலும் மட்டுமே நீங்கள் எனக்கு பரிச்சயம். மற்றபடி எனக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் (மக்கள் நீதி மய்யம் உட்பட) எவ்வித சம்பந்தமும் இல்லை.

தூரத்திலிருந்து தங்களை ரசித்ததோடன்றி, தங்களைப் போன்ற சிறந்த திறமைசாலிகள் காக்கப்பட வேண்டுமென்கிற அக்கறை கொண்டவர்களில் நானும் ஒருவன். அந்த அக்கறை மட்டுமே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதத் தூண்டியது. இங்கே எழுதியிருப்பவை அனைத்தும் எனது சொந்தக் கருத்துக்களே.. ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்.

Kamal Haasan
Kamal Haasan

திரைத்துறையைப் பொறுத்தவரைத் தாங்கள் பல்கலை வித்தகர். நடிப்பாற்றலிலும் நடிப்புலகச் சிந்தனையிலும் உங்களை மிஞ்ச இங்கே ஆளில்லை. ஆனால், அரசியல் இப்போது உங்களுக்கு பால பாடம். இதில் நீங்கள் பட்டம் பெற்றுத் தேறுவதற்குப் பல காலம் ஆகலாம். சினிமா நடிகராக இருந்தவர்களில் எம்ஜிஆரைத் தவிர, ஒரு அரசியல் கட்சியைத் துவங்கி வெற்றிகரமாக வேறு யாரும் இதுவரைத் தொடர்ந்து நடத்தியதில்லை. எம்ஜிஆர் கூட தனி மனிதராகத் தனது கட்சியை விதை போட்டுத் துவங்கவில்லை. திமுக என்ற பலமான கட்டமைப்பைப் பிளந்தே அமைப்புரீதியாக ஒரு பகுதியை தன்னோடு கொண்டு வந்தார். முக்கியமான நிர்வாகிகள் அவரோடு பிரிந்து வந்து தோள் கொடுத்து அனைவருமாகச் சேர்ந்தே அதிமுக என்ற அமைப்பைத் தொடங்கினர்.

தனிமரம் என்றும் தோப்பானதில்லை.

துரதிர்ஷ்டவசமாக இந்த உண்மையை தனிக்கட்சி துவங்கிய எந்த நடிகரும் முழுமையாக உணரவில்லை. அந்த வகையில் கட்சி என்ற அமைப்பை விதை போட்டு வளர்த்த பெருமை ஜஸ்டிஸ் கட்சி நிறுவனர்கள் மற்றும் தந்தை பெரியாரை மட்டுமே சேரும். இன்றைய திராவிடக் கட்சிகள் அனைத்தும் அந்த ஆலமரத்தின் விழுதுகளே..! சினிமா வாய்ப்புகள் வற்றிப்போன நிலையிலேயே பெரும்பாலான நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்துப் பிற்பாடு தோற்றுப் போனது ஊரறிந்த உண்மை. இது ஒன்றும் தங்களுக்குத் தெரியாத செய்தியல்ல.. ஆனால் உங்களைப் பொறுத்தவரை நீங்கள் சினிமாவையோ, சினிமா உங்களையோ இன்று வரை கைவிடவில்லை.. உங்கள் படைப்புகளுக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.

Kamal Haasan
Kamal Haasan

தங்களின் சமூக அக்கறை எப்போதும் பாராட்டத் தக்கது. அந்தச் சமூக அக்கறையை வெளிப்படுத்த எத்தனையோ பாதைகள் இருக்கும்போது, தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள ‘அரசியல்’ பாதையை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது. பெரும்பாலான நடிகர்கள் ‘ரசிகர் மன்றம்’ வைத்துக் கூத்தாடிய போது, தாங்கள் மட்டுமே ‘கமல் நற்பணி மன்றம்’ வைத்து பல நல்ல காரியங்களைச் செய்து இன்றைய நடிகர்கள் பலருக்கும் முன்னோடியாக இருக்கிறீர்கள்.

தங்களுடைய பல பேட்டிகளில் தங்களின் மீதமிருக்கும் வாழ்க்கையை இந்த சமுதாயத்திற்கே அர்ப்பணிப்பதாகப் பல முறை கூறியிருக்கிறீர்கள். தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனாலும் மனித உடல் ஒன்றும் எந்திரமல்ல.

தமிழக முதல்வராகிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு..! - வாசகர் வாய்ஸ் #MyVikatan

கடந்த ஐம்பது - அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றி அமைப்பு ரீதியாக பலமான கட்டமைப்பு கொண்ட இரண்டு திராவிடக் கட்சிகளைத் தாண்டி இன்று குழந்தையாய் உள்ள தங்களின் அரசியல் கட்சி ஆட்சியைப் பிடிப்பதென்பது, தங்களால் சாத்தியமா என்பது தங்களுக்கே வெளிச்சம்..! அரசியல் உள்ள வரை நீங்களும் அதில் இருப்பீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் உங்களிடம் எதையும் எதிர்பார்க்காத போது, ஏன் இந்த அரசியல் பிரவேசம்? உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட யாரும் இதைத்தான் உங்களிடம் கேட்டிருப்பார்கள்.

கமல்
கமல்

தாங்கள் கட்சி ஆரம்பித்ததின் நோக்கமே முக்கியமான இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருப்பது மற்றும் இவற்றுடன் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவை. நடந்து முடிந்த தேர்தலில் தங்கள் தொகுதியில் கிடைத்த 33% வாக்கு விகிதம், கமல்ஹாசன் என்ற தனி மனிதருக்குக் கிடைத்த வாக்குகளேயன்றி தங்கள் கட்சிக்கு கிடைத்த வாக்காக எடுத்துக் கொள்ள முடியாது. தங்களின் அரசியல் கட்சி மூலமாக இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியை சுமாராகப் பிரிப்பது தவிர வேறொன்றும் பெரிதாக சாதிக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட பின்னணியில் அதிகபட்சம் தாங்கள் மட்டும் வேண்டுமானால் அடுத்து வரும் தேர்தல்களில் ஒரு எம்எல்ஏவாக ஆகலாம். அப்படியெனில் தங்களின் எஞ்சிய வாழ்நாள் சாதனை என்பது ஒரு எம்எல்ஏ பதவி மட்டும்தானா..? அதற்குத் தாங்கள் கொடுக்கப் போகும் விலை தங்கள் வாழ்நாள் சம்பாத்தியம் மட்டுமல்ல.. எஞ்சியிருக்கும் தங்கள் வாழ்நாளும்தான்..

சமூகப் பணி செய்வதற்கு அரசியல் அதிகாரம் (Political Power) தேவையில்லை என்பதை உங்கள் மனசாட்சி அறியும். உங்களுக்குள் அரசியல் எப்போதோ வந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். இன்றைய ஆட்சியாளர்கள் அரசியல் ஆலமரத்தின் ஆணி வேரைப் பார்த்தவர்கள்.. இனி அத்தனை சுலபத்தில் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் தங்களுக்கோ தங்கள் கட்சிக்கோ அரசியலில் சாதிக்க வாய்ப்புகள் அதிகமில்லை எனும்போது 'மக்கள் நீதி மய்யம்' இனி 'மக்கள் நற்பணி மய்யம்' என்று மாற வேண்டியது காலத்தின் காட்டாயமாகலாம். அரசியல் கட்சி என்கிற அடிப்படையில், தங்களிடம் இருப்பவர்களில் பெரும்பாலோருக்கு (தாங்கள் உட்பட) பதவி மற்றும் அதிகார ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதையே நற்பணி மய்யமாக மாற்றும் போது இந்த அதிகார போதை தானாக மாறும்.

கமல்
கமல்

எந்த ஆதாயமும் எதிர்பாராமல் சமூகப் பணியாற்ற, தங்களின் உண்மையான விசுவாசிகளைக் கண்டறிந்து ஒரு தொகுதிக்கு ஆயிரம் பேரில்லையென்றாலும் - ஒரு நூறு பேரைத் தேர்ந்தெடுங்கள் போதும்.. தன்னலமற்ற சமூகப் பணி மேற்கொள்ளுங்கள்.. தங்களின் சினிமா தொழிலையும் தொடர்ந்து, தங்கள் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும், சந்தோசமும் உற்சாகமும் தாருங்கள். தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியோ அல்லது பெரும் பகுதியோ சமூகப் பணிக்கு கொடுங்கள். தங்களின் அறுபதாண்டு காலத் திரையுலக ஆளுமை உங்கள் நற்பணிக்கு எப்போதும் நீர் வார்க்கும் - உரம் சேர்க்கும்.. அதிகார வர்க்கம் தவறு செய்யும்போது எப்போதும் போல தார்மீகக் குரல் கொடுங்கள்.. மாற்றம் ஒன்றே மாறாதது.. இந்த மாற்றத்தால் உங்களுக்குத் தேர்தலும் இல்லை - தோல்வியும் இல்லை.. மக்கள் மனதை என்றென்றும் ஆண்டவராக நீங்கள் இருப்பீர்கள். உங்களின் எஞ்சிய வாழ்நாள் நீங்கள் ஆசைப்பட்டது போலவே இந்த சமூகத்துக்காக உபயோகமாகக் கழியும்..

உங்கள் சமகால நடிகர் ‘சின்னக் கலைவாணர்’ விவேக் எந்த அரசியல் ஆதாயமும் பாராமல் சமூகப் பணியாற்றினார்… மக்களின் மனதை வென்றார்… அவர் எம்எல்ஏவும் இல்லை… மந்திரியும் இல்லை… ஆனாலும் அவருக்கு 78 குண்டுகள் முழங்கின…

அன்புடன்,

உங்கள் ரசிகன்

பா.முருகதாஸ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு