Published:Updated:

பழங்குடி டு சத்தீஸ்கரின் முதல் நியமன முதல்வர்... ஆட்சிப் பொறுப்பில் உச்சம்தொட்ட அஜித் ஜோகி!

அஜித் ஜோகி
அஜித் ஜோகி

மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோகி, மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 14 ஆண்டுகளுக்கு மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்தார். இந்திய வரலாற்றிலேயே அதிக காலம் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பு வகித்தவர் என்ற பெருமையைத் தற்போது வரை தக்க வைத்துக்கொண்டவர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் மற்றும் முன்னாள் முதல்வரான 74 வயதான அஜித் ஜோகி, மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் நண்பகலில் உயிரிழந்தார்.

மாவட்ட ஆட்சியராகத் தனது பொது வாழ்வைத் தொடங்கிய அஜித் ஜோகி, பின்னாளில் பல்வேறு உயர்மட்டப் பொறுப்புகளை வகித்ததோடு, சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நேரடி உத்தரவின் பேரில், முதல்வராகப் பொறுப்பேற்று புதிய உச்சத்தை அடைந்தவர். தற்போதைய சத்தீஸ்கரின் பில்சாபூர் பகுதியில், 1946-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அஜித் ஜோகி ஒரு பழங்குடியின குடும்பத்தில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்புக்குப் பிறகு, போபாலில் உள்ள மெளலானா ஆசாத் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தார். தேர்ந்தெடுத்த துறையில் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் 1968-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கத்தை வென்றார். பின், ராய்ப்பூரில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின், முதல் முறையாக இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை எழுதி, இந்திய காவல்துறையில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஆட்சிப் பணியில் ஈடுபாடு கொண்ட ஜோகி, 1970-ம் ஆண்டு மீண்டும் குடிமைப் பணிக்கான தேர்வை எழுதி இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர்

மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோகி, பிரிக்கப்படாத மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 14 ஆண்டுகளுக்கு மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்தார். இந்திய வரலாற்றிலேயே அதிக காலம் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பு வகித்தவர் என்ற பெருமையைத் தற்போது வரை தக்க வைத்திருப்பவரும் இவரே. பல ஆண்டுக்காலம், ஆட்சியாளராகப் பொறுப்பு வகித்து வந்ததால் பல்வேறு அரசியல் முக்கியஸ்தர்களின் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார். மேலும், மத்திய பிரதேசத்தின் அப்போதைய முதல்வராக இருந்த அர்ஜூன் சிங், ஜோகியுடன் நெருங்கிப் பழகியதன் விளைவாக அரசியல் ஆர்வம் இவரை குடிகொண்டது. அர்ஜூன் சிங், தனது அரசியல் எதிரிகளை வலுவாக எதிர்ப்பதற்காக சத்தீஸ்கர் பிராந்தியத்தில் இருந்து வலுவான மற்றும் நம்பிக்கையான ஒரு முகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.

1985-ம் ஆண்டு இந்தூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு வகித்து வந்த ஜோகிக்கு, திடீரென ஓர் இரவு நேரத்தில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவருக்கு மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதோடு, உடனடியாக காங்கிரஸ் கட்சியில் இணையுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து முடிவை எடுக்க, அவருக்கு சுமார் 2 மணி நேர கால அவகாசமே அளிக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்திலேயே மாவட்ட ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்து, மாநில காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜோகி. கட்சியின் பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் நலவாரியத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1986 முதல் 1998-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 1989-ல் நடைபெற்ற மணிப்பூர் நாடாளுமன்றத் தேர்தலிலும், 1995-ம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸின் தேர்தல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்தார்.

அஜித் ஜோகி
அஜித் ஜோகி

12 ஆண்டுகளாக ராஜ்ய சபா உறுப்பினராக இருந்து வந்த ஜோகிக்கு, சோனியா காந்தி பிரார்த்தனைக்காக சென்று வந்த கிறிஸ்துவ தேவாலயத்துக்கு உடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அது, சோனியா காந்தியுடன் நெருக்கிப் பழகும் வாய்ப்பாக அமைந்தது.

1998-ம் ஆண்டு ராய்கர் மக்களவைத் தொகுதியில் அமோக வெற்றி பெற்றார் ஜோகி. ஆனால், நாடாளுமன்றம் சில காலங்களிலேயே கலைக்கப்பட்டதால், 1999-ல் மீண்டும் ஷாஹ்தோல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அதன்பின், 1998 முதல் 2000 வரை காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், 2000-ம் ஆண்டு மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவெடுத்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்துக்கு இடைக்கால முதல்வராக காங்கிரஸ் கட்சியின் தலைமை, ஜோகியை முன்மொழிந்தது. பின், இடைக்கால முதல்வராக 2000 முதல் 2003 வரை பொறுப்பு வகித்தார் ஜோகி. காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் ஜோகி நெருங்கிப் பழகியதாலும், அர்ஜூன் சிங்குக்குக் காட்டிய விசுவாசத்தாலும் அவரது ஆதரவாளர்கள் எந்தவித எதிர்ப்புமின்றி ஜோகி ஆட்சி அமைக்கத் துணை நின்றனர். இருப்பினும், காங்கிரஸ் மேலிடம் பழங்குடியினருக்கான மாநிலமாக அமைக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரில், பழங்குடி இனத்தைச் சார்ந்த ஒருவரே ஆட்சியமைக்க விரும்பியதும், ஜோகியை முதல்வராக முன்மொழிந்ததற்கான காரணமாகப் பார்க்க முடியும்.

இருப்பினும், காங்கிரஸின் கனவும் ஜோகியின் முதல்வர் பதவியும் நீண்ட நாள்களுக்கு நிலைக்கவில்லை. 2003-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜோகி படுதோல்வியடைந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ராமன் சிங்கின் 15 ஆண்டுக்கால முதல்வர் வாழ்வுக்கு, ஜோகியின் தோல்வியே காரணமாக அமைந்தது. சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து ஜோகி, மாஹாசமுண்ட் தொகுதியில் 2004-ம் ஆண்டு போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பிரசாரத்தின் போது, ஜோகிக்கு ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, இடுப்புப் பகுதி முடங்கிப்போனது. மீண்டும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஜோகி. ஆனால், எதிர்பார்த்தபடி, முதல்வர் அரியணை கிடைக்காவிட்டாலும் தான் போட்டியிட்ட சொந்தத் தொகுதியான மார்வாஹியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டசபையினுள் நுழைந்தார்.

மீண்டும், 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஜோகி. 2009 மக்களவைத் தேர்தலில் மாஹாசமுண்ட் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்குள் மீண்டும் நுழைந்தார் ஜோகி. 2009 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மஹாசமுண்ட் தொகுதியை தனது கோட்டையாக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்த ஜோகி, 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 133 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-வின் லால் சாஹூவிடம் தோல்வியைத் தழுவினார். மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கு நெருங்கிய தோல்வியை ஜோகி சந்தித்ததால், காங்கிரஸ் கட்சியுடனான அவரின் தொடர்புக்கு முற்றுப் புள்ளி வைக்கும் தொடக்கமாக அது மாறியது. அதே ஆண்டில் சத்தீஸ்கரின் அந்தகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அஜித் ஜோகி
மருத்துவமனையில் அஜித் ஜோகி

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜோகியின் ஆதரவாளரான மந்துராம் பவாரை நிறுத்தியது. வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் பவார் கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவிக்காமல் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பவாரின் இந்தச் செயல், சத்தீஸ்கர் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்த, ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ, ஜோகி, அவரின் மகன் அமித் ஜோகி மற்றும் அப்போதைய முதல்வராக இருந்த பா.ஜ.க-வைச் சேர்ந்த ராமன் சிங்கின் மருமகன் புனித் குப்தா ஆகியோருக்கு இடையேயான உரையாடலை உள்ளடக்கியிருந்தது. பணத்தைப் பெற்றுக் கொண்டு பவாரின் வேட்புமனுவை வாபஸ் பெறக்கோரி மூவரும் அந்த ஆடியோவில் உரையாடி இருந்தது சத்தீஸ்கர் காங்கிரஸில் மிகப் பெரிய அதிர்வை உண்டாக்கியது. இந்தநிலையில், காங்கிரஸ் தலைமை ஜோகி மற்றும் அவரின் மகன் அமித் ஜோகியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டது. இருப்பினும், அவர்கள் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. அந்தகர் இடைத்தேர்தல் ஊழலின் காரணமாக ஜோகி அவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் உட்பட காங்கிரஸ்காரர்களால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

1961-ல் ஆபரேஷன் விஜய்... 67-ல் பொது வாக்கெடுப்பு... 87-ல் தனி மாநிலம் - கோவா உருவான கதை!

இதனிடையே, 2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஜோகி, ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற கட்சியைத் தோற்றுவித்தார். சத்தீஸ்கர் அரசியல் களத்தில் ஜோகியின் கட்சி நல்ல செல்வாக்கைப் பெற்று, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவின் ஏகாதிபத்தியப் போக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் என அரசியல் விமர்சகர்கள் கணித்திருந்தனர். 2018 சட்டமன்றத் தேர்தலில் ஜோகி, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். இந்தக் கூட்டணி சத்தீஸ்கரில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கும் கூட்டணியாக உருவெடுக்கும் எனப் பேசப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு ஜோகியின் கட்சியில் இருந்து 5 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அந்த ஐவரில் ஜோகியும் அவரின் மனைவி ரேணு ஜோகியும் அடங்குவர்.

அஜித் ஜோகி
அஜித் ஜோகி

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நலக் கோளாறால் அவதியுற்றுவந்த ஜோகி, மூன்று வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். கடந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அவரது உடல்நிலை சிக்கலாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழங்குடியினராகப் பிறந்து படித்து முன்னேறி, மிகச் சிறப்பாகப் பணியாற்றி, தனக்கு வந்த அரசியல் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக உயர்ந்தவர் ஜோகி. அரசியல் வாழ்க்கையில் அவர் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும், இந்திய அரசியல் வரலாற்றில் ஜோகியின் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு