Published:Updated:

``என் கட்டையே ஆடிப்போச்சு" - உயிரோடு இருப்பவர் இறந்ததாக அறிக்கை; முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இறந்துவிட்டதாகக் கூறப்படும் சேகர்

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த முதியவர், உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

``என் கட்டையே ஆடிப்போச்சு" - உயிரோடு இருப்பவர் இறந்ததாக அறிக்கை; முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த முதியவர், உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்துவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
இறந்துவிட்டதாகக் கூறப்படும் சேகர்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேவுள்ள கேசவநாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். 63 வயதான இவர், தன் மனைவி கெங்கையம்மாளுடன் வசித்துவருகிறார். முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வைத்திருக்கும் இவர், மாதாந்தர முதியோர் ஓய்வூதியம் கேட்டு 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் விண்ணப்பித்திருக்கிறார். அதன் பின்னர், தொடர்ந்து சமூகப் பாதுகாப்பு திட்டத்துறை அலுவலர்களை அணுகிவந்திருக்கிறார். மேலும், விண்ணப்பத்தை ஏற்க சேகரிடம் அரசு அதிகாரிகள் தரப்பில் லஞ்சமும் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் தரப்படாததால் விண்ணப்பம் இழுத்தடிப்பு செய்யப்பட்டதாம். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு விண்ணப்பத்தின் நிலை குறித்து வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டிருக்கிறார் சேகர்.

விண்ணப்பம் செய்ததற்கான சான்று
விண்ணப்பம் செய்ததற்கான சான்று

அப்போது, சேகர் உயிரிழந்து நான்கு மாதங்கள் ஆவதாக சேகரிடமே அதிர்ச்சிபட அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆன்லைனில் சோதித்துப் பார்த்தபோது... அதில், "அனைத்து ஆவணங்களும் சரிப்பார்க்கப்பட்டதில், சேகர் உயிரிழந்துவிட்டார். அவரின் ஓய்வூதிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுறது என மரக்காணம் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரால் சான்று வழங்கப்படுகிறது" என அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. 

இது குறித்து சேகரிடம் பேசினோம். ``நான் 2021-ம் ஆண்டு ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். அப்போது கொரோனா பரவல் இருந்ததால் அதைக் காரணம் காட்டி என்னை அலைக்கழித்து வந்தார்கள். இதைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் `பண்ணிக்கலாங்க' என்றனர். ஆனால், எதுவுமே செய்யவில்லை. இந்த நிலையில் என்னைத் தொடர்புகொண்ட ஆர்.ஐ., `நீ மனு கொடுத்துவிட்டால் பணம் நேரா உன் வீட்டுக்கு வந்துவிடுமா... என்னை கவனிக்க மாட்டீர்களா' என்று கேட்டார். அப்போது, எனக்கு அது புரியவில்லை. மீண்டும் ஒரு நாள் தொடர்புகொண்டு அதேபோல் கேட்டுவிட்டு, `விண்ணப்பத்தை கேன்சல் பண்ணிடுவேன்' என்றார். அதற்கு என்ன அர்த்தம்... நான் லஞ்சம் தரவில்லை என்பதால் என்னுடைய மனுவை அவர்கள் மதிக்கவும் இல்லை, வீட்டுக்கு வந்து விசாரிக்கவும் இல்லை. 

விண்ணப்பத்தின் நிலை
விண்ணப்பத்தின் நிலை

எனக்கு உலக விவரம் சரியா தெரியாது. எனவே, எனக்கு உதவி பண்ணின தம்பி ஒருத்தர் ஊருக்கு வந்தபோது, 'இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லையேப்பா' என்று கேட்டேன். `ஐயா, நீங்க செத்துப்போயிட்டீங்கன்னு சான்றிதழ் கொடுத்துட்டாங்களே' என்றார் அவர். உடனே அதிர்ச்சியடைந்து போய், அவருடன் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, சேகரின் ஓய்வூதிய விண்ணப்ப நிலை என்னவென்று கேட்டோம். அப்போது, `அவர் செத்துபோய் நான்கு மாதங்கள் ஆகின்றன. இப்போ வந்து கேக்குறீங்க' என்றார் அந்த அதிகாரி. எனக்கு உடனே தடதடன்னு வந்துடுச்சு. மூச்சு அப்படியே நின்னு போகுற மாதிரி இருந்துச்சு. என் கட்டையே ஆடிப்போச்சு. அது நான்தான் எனச் சொல்லாமல், கொஞ்ச தூரம் தள்ளி வந்து அலுவலகத்தின் உள்ளேயே உட்கார்ந்துவிட்டேன். 

உடனே என்னுடன் வந்த தம்பி, `அவர்தான் இறந்துவிட்டாரே... குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் சுமார் 22,000 ரூபாய் உதவித்தொகை குடும்பத்தாருக்கு கொடுப்பீர்களே, எப்போது கிடைக்கும்' எனக் கேட்டார். `அதெல்லாம் பின்னால் பார்த்துக்கொள்ளலாம். நீங்க கிளம்புங்க' என மழுப்பினார் அந்த அதிகாரி. உடனே கம்ப்யூட்டர் சென்டருக்கு போய் விண்ணப்ப நிலை குறித்து பார்த்தோம். அதிலும், நான் இறந்துவிட்டதாகப் பதிவாகியிருந்தது. இது குறித்து பத்திரிகையில் செய்தி வந்ததும், 'உனக்கு ஓய்வூதியத்தை பண்ணிக் கொடுத்துடுறோம். இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என அதிகாரிகள் தரப்பில் சொன்னதாகத் தகவல் கிடைத்தது. இதெல்லாம் போகட்டும், எனக்கு ஓய்வூதியம் இல்லை என்றுகூடச் சொல்லட்டும், நான் விட்டுவிடுகிறேன். நான் செத்துவிட்டேன் என்பதற்கு என்ன ஆதாரம்?

விழுப்புரம்
விழுப்புரம்

என்னோட இரண்டு பெண்களுக்கும் கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டேன். என் பையன் எங்களௌக் கண்டுகொள்வதில்லை. இரண்டு மாடுகளை மேய்த்து, நானும் என் வீட்டம்மாவும் தனியாகக் கஞ்சி குடித்துக்கொண்டு வருகிறோம். என்னைவிட ஏழ்மையானவங்க இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனக்கு நடந்ததைப்போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது" என்றார் ஆதங்கமாக.

இது குறித்து, மரக்காணம் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டோம். "அந்த விவகாரத்தில் சிறு தவறு ஒன்று நடந்திருக்கிறது, வேறொன்றுமில்லை. சேகர் ஓய்வூதியம் கேட்டு 12.01.2021 அன்று விண்ணப்பித்திருக்கிறார். அந்த விண்ணப்பத்தை கிராம நிர்வாக அலுவலர், 30.01.2021 அன்று வருவாய் ஆய்வாளருக்கு (ஆர்.ஐ) அனுப்பிவைத்திருக்கிறார். அதை ஆர்.ஐ சரிபார்த்து 13.11.2021 அன்று தாசில்தாருக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இதற்கு முன்பாக 2018-ம் ஆண்டு, அதே கிராமத்தில்... அதே சமூகத்தைச் சேர்ந்த சேகர் என்னும் ஒருவர் உயிரிழந்துவிட்டார். இதை, விசாரணையின்போது... தவறாக இந்த சேகர்தான் என்று குறிப்பிட்டு வி.ஏ.ஓ பிரபுவும், ஆர்.ஐ தினகரனும் தவறு செய்துவிட்டனர். இதில் உள்நோக்கம் வேறு ஏதுமில்லை.

அரசு அலுவலகம்
அரசு அலுவலகம்
மாதிரிப் படம்

இந்தச் சம்பவம் குறித்து திண்டிவனம் சார்பு ஆட்சியர் அவர்கள் விசாரணை மேற்கொண்டுவருகிறார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். சேகரை மீண்டும் விண்ணப்பிக்கச் சொல்லியிருக்கிறோம். அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்" என்றார்.

அரசுத் துறை அதிகாரிகளின் அலட்சிய விசாரணை, உயிரோடு இருப்பவரையே இறந்துவிட்டதாக மாற்றிவிட்டது.