Published:Updated:

‘தமிழ்நாடு பெயர் மாற்றத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம்?‘ அன்றே கேட்டார் அண்ணா! ஒரு ஃப்ளாஷ்பேக் பார்வை!

‘தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தால் நீங்கள் எதை அடையப்போகிறீர்கள் என்று நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி ஒருவர் கேள்வி எழுப்ப.. ‘தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்?’ என்று திருப்பிக் கேட்டார் அண்ணா.

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று சிலர் சர்ச்சை கிளப்பியதைத் தொடர்ந்து எழுந்த விவாதம் இன்னும் அடங்கவில்லை. தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்துக்கு சூட்டப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்த உயிர் தியாகம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தமிழ்நாட்டின் சரித்திரத்தில் என்றைக்கும் முக்கிய இடம் உண்டு.

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு என்று தமிழ்நாடு அரசு குறிப்பிடத் தொடங்கியது. அரசின் அறிக்கைகள் மற்றும் கடிதங்களில் ஒன்றிய அரசு என்றே மத்திய அரசு குறிப்பிடப்பட்டது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திலேயே குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசு என்றும் ஒன்றிய அரசும் என்று குறிப்பிடப்பட்டு வருவது, சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்துதான், தமிழ்நாடு அரசு என்பதை தமிழக அரசு என்றும், ஒன்றிய அரசு என்று சொல்லாமல் இந்திய அரசு என்றும் அழைக்கலாம் என்றும் சிலரால் கிளப்பிடப்பட்டு, அது பெரும் விவாதமாக மாறியது.

ஒரு மாநிலத்தின் பெயருடன் நாடு என்று சேர்ந்துவருகிறது என்றால், அந்தப் பெருமை இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்கு மட்டுமே என்று சொல்பவர்களும் உண்டு. தமிழ்நாடு என்கிற பெயர் எப்படி வந்தது என்பதை அறியாமல், அல்லது அறிந்தும் அதை மறந்துவிட்டு தமிழகம் என்று அழைக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் நினைவுகூரப்பட வேண்டியவர், தியாகி சங்கரலிங்கனார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்தவர்தான் அவர்.

சங்கரலிங்கனார்
சங்கரலிங்கனார்

சங்கரலிங்கனார், விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். காந்தியின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். மெட்ராஸ் மாகாணம் என்பது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணம் என்றே தமிழ்நாடு அழைக்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது சங்கரலிங்கனாரின் முக்கியக் கோரிக்கை. இது உள்பட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதத்தை 1956-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி சங்கரலிங்கனார் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்கரலிங்கனாரின் காலவரையற்ற உண்ணாவிரதம் அண்ணா உள்ளிட்ட தலைவர்களைக் கவலையடையச் செய்தது. உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு காமராஜர், அண்ணா, ஜீவானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் சங்கரலிங்கனாரிடம் வலியுறுத்தினர். ஆனால், தன் கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போது அவருக்கு 78 வயது. 76 நாள்கள் உண்ணாவிரதத்தைத் தொடந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அந்த மரணம் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அவரது மரணத்தால், தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

அண்ணா
அண்ணா

தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான பூபேஷ் குப்தா அந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசினார். அப்போது, “வரலாறு, மொழி, கலாசார அடிப்படைகளுக்கு இசைவாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து மெட்ராஸ் மாகாணம் மற்றும் தேசத்தின் மற்ற பகுதகளில் உள்ள மக்களிடம் ஆழமாக இருக்கிறது” என்றார் பூபேஷ் குப்தா. அந்த விவாதத்தில் அண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர். அந்த மசோதா தோல்வியடைந்தது.

இந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அந்த விவாதத்தில் பலர் பங்கேற்றபோதும், தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவது தொடர்பாகத்தான் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றனவே ஒழிய, தமிழகம் என்ற வார்த்தையை யாரும் குறிப்பிடவில்லை.

மோடி அரசுடன் தி.மு.க அரசை இணக்கம் காட்ட வைக்க திட்டமிடுகிறதா பா.ஜ.க? - ஒரு பார்வை!

நாடாளுமன்ற விவாதத்தின்போது, “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தின் மூலம் நீங்கள் எதை அடையப்போகிறீர்கள்?” என்று ஒரு உறுப்பினர் அண்ணாவை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு, “பார்லிமென்ட் என்பதை லோக் சபா என்று பெயர் மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்?, கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? பிரெசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என்று மாற்றியதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்? உங்களிடம் நான் கேட்கிறேன். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் நீங்கள் எதை இழக்கிறீர்கள்? என்றார் அண்ணா. அந்த உறுப்பினரிடம் பதில் ஏதும் இல்லை.

பூபேஷ் குப்தா
பூபேஷ் குப்தா

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் தொடர்பாக, மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், எதுவும் நடக்கவில்லை. 1967-ம் ஆண்டு தி.மு.க வெற்றிபெற்று அண்ணா முதல்வர் ஆனார். அதன் பிறகு, 1968-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக ஒருவர் உயிர் தியாகமே செய்திருக்கிறார். பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதுகூட, தமிழகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று யாருமே சொல்லவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு