Published:Updated:

ஸ்டாலின் அரசு; ஏற்றமும் ஏமாற்றமும்! - ஒரு பார்வை!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தில் சமயோஜிதத்துடன் நடந்துகொண்டதில் தொடங்கி, போலீஸாருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்தது வரை, ஸ்டாலின் அரசு ஏற்றத்துடன்தான் நடந்திருக்கிறது. ஆனாலும், சில நடவடிக்கைகளால் ஏமாற்றங்களையும் தரத் தவறவில்லை.

ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு உச்சத்திலிருந்தபோது, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மக்கள் அலைமோதினர். இதனால், கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாள்களிலேயே இந்தச் சவாலை எதிர்கொண்ட ஸ்டாலின் அரசு, மருந்து விற்பனையை உடனடியாக சென்னை நேரு ஸ்டேடியத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனாலும் கூட்டம் கட்டுப்படியாகாமல் நீண்ட வரிசையில் நின்றதால், அனைத்துத் தனியார் மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். இதனால், மக்களே நேரடியாக மருந்தை வாங்கிச் செல்ல காத்திருக்கும் முறை தவிர்க்கப்பட்டது. அதேபோல, கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அரசு எச்சரித்தது. ஒருபக்கம் அரசின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றாலும், ‘இந்த நடவடிக்கையை தொடக்கத்திலேயே எடுத்திருக்கலாம்’ என்கிற விமர்சனங்களும் எழுந்தன.

ரெம்டெசிவிர் வாங்குவதற்குக் காத்திருந்த மக்கள்
ரெம்டெசிவிர் வாங்குவதற்குக் காத்திருந்த மக்கள்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு

`பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நகர பேருந்துகளில் இலவச பஸ் பாஸ்’ என்கிற திட்டம் உண்மையிலேயே சமூக ஏற்றத்தை உருவாக்கும் என்கிறார்கள். நம்மிடம் பேசிய போக்குவரத்துத்துறை மூத்த அதிகாரி ஒருவர், “போக்குவரத்துத்துறை 37,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவருகிறது. அரசின் இந்த இலவச பஸ் பாஸ் திட்டத்தால் கூடுதலாக 1,500 கோடி ரூபாய் வரை செலவு மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், இதை வரவேற்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம், வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கும்.

மிஸ்டர் கழுகு: ஜம்பம் காட்ட வேண்டாம்! - கடுகடுத்த ஸ்டாலின்... கப்சிப் நிதியமைச்சர்

பணியிடத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஆள் இல்லாமல் இருப்பது, பயணச் செலவு உள்ளிட்ட காரணங்களால், வேலைவாய்ப்பு சூழல் மறுக்கப்பட்ட பெண்களுக்கு இந்தத் திட்டம் வரப்பிரசாதம்தான். தவிர, இலவச பஸ் பாஸ் இருப்பதால், பேருந்தில் பயணிக்கும் பெண்ணின் குடும்பத்தினரும் அதே அரசுப் பேருந்தில்தான் பயணம் செய்வார்கள். இதன் மூலமாக, அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவை ஈடுசெய்யவும் முடியும்” என்றார். தற்போது நகர பேருந்துகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை, வரும் காலங்களில் புறநகர் பேருந்துகளுக்கும் விரிவுப்படுத்த ஸ்டாலின் அரசு ஆலோசித்துவருகிறது. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு மதிய உணவுத் திட்டம் எப்படியொரு மாற்றத்தை உருவாக்கியதோ, அதேபோல பெண்களின் சுயசார்பு, கல்வி தொடர்பான வளர்ச்சிக்கு இந்த இலவச பஸ் திட்டம் கைகொடுக்கும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தேர்தல் காலத்தில் அளித்திருந்த வாக்குறுதியின்படி, கொரோனா நிவாரணத் தொகையாக அரசி அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். முதற்கட்டமாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள தொகையுடன் சேர்த்து 14 வகையான மளிகைப் பொருள்களும் வழங்கப்படுகின்றன. வரும் ஜூன் 15-ம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஆனால், அரசு அதிகாரிகளிடம் தெளிவு இல்லாததால், தமிழகத்தின் ஒருசில இடங்களில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் திருப்பி வாங்கிக்கொள்ளும் சம்பவங்கள் நிகழ்கின்றன. 15-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் டோக்கன் வழங்கப்படும் என ரேஷன் ஊழியர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இதனால், டோக்கன் பெற்றவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். முன்கூட்டியே எப்போது டோக்கன் விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை மூத்த அதிகாரிகள் தெளிவுப்படுத்தியிருந்தால், இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது.

`தந்தை பிறந்தநாளில் ஸ்டாலின் இதை நிறைவேற்ற வேண்டும்’ -அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்து சாதி மாணவர்கள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பணியிட மாற்றங்கள் விவகாரத்திலும் புதிய அரசு சறுக்கலைச் சந்தித்திருப்பதாக விமர்சனம் எழுகிறது. சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமித்து ஓர் அறிவிப்பு வெளியானது. அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள், ‘ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிக்கு அதிக பணம் புரளும் நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கப்பட்டதன் மர்மம் என்ன?’ எனக் கேள்வி எழுப்பியவுடன், உடனடியாக கார்த்திகேயனை உயர்கல்வித்துறைக்கு மாற்றி அடுத்த உத்தரவு வெளியானது. உயரதிகாரிகள் நியமனத்தில் அரசு தெளிவாக நடந்துகொள்ளவில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாகவும் ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, சமீபத்தில் அமைச்சர் சேகர்பாபு, இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் நேரடியாகச் சென்று மீட்டிருப்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தனது செயல்பாட்டில் சில ஏமாற்றங்களைத் தந்திருந்தாலும், கடந்த ஒரு மாதத்தில் பல நடவடிக்கைகள் மூலமாக ஏற்றமாகவே செயல்பட்டிருக்கிறது ஸ்டாலின் அரசு. சிறு சிறு தவறுகளைச் சரிசெய்துகொண்டு, நேர்மையான ஆட்சியைத் தந்தால், இந்த ஏற்றம் ஆட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் உயர்வைத் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.

`இது டிரெய்லர்தான்; இனிமேல்தான் மெயின் பிக்சர்' - வடபழனி கோயில் இடத்தை மீட்ட அமைச்சர் சேகர்பாபு!
அடுத்த கட்டுரைக்கு