Published:Updated:

`6 இஸ்லாமிய நண்பர்களைக் காப்பாற்றிய பிரேம்காந்த்!'- இரவு முழுவதும் தீக்காயங்களுடன் போராடிய சோகம்

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

``எங்கள் பகுதியில் இந்து மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால், களத்தில் நடந்த வன்முறை அதன் மற்றொரு பக்கத்தைக் காட்டியது"

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதனால், அப்பகுதிகள் போர்க்களமாகக் காட்சியளித்தது. வன்முறைகள் தற்போது ஓய்ந்துவிட்டது என்றாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. வன்முறையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மக்கள் மீதான கடுமையான தாக்குதல்களுக்கு இடையே பாதிப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் களத்தில் நடந்துள்ளன.

பிரேம்காந்த் பாகேல்
பிரேம்காந்த் பாகேல்
indiatimes

சிவி விகார் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்காந்த் பாகேல். வன்முறையில் அவரது வீட்டின் அருகில் இருக்கும் இஸ்லாமிய நண்பர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீ வைத்துள்ளனர். இதைப் பார்த்த பிரேம்காந்த் எரியும் வீடுகளுக்குள் சிக்கிய இஸ்லாமிய நண்பர்களைக் காப்பாற்ற முன் வந்துள்ளார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது இஸ்லாமிய நண்பர்கள் ஆறு பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். ஆனால், நெருப்பில் சிக்கித் தவித்த நண்பரின் வயதான தாய் ஒருவரைக் காப்பாற்ற பிரேம்காந்த் முயற்சி செய்யும்போது தீயில் சிக்கியுள்ளார். இதனால், அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

`மிகப் பெரிய வலியைக் கொடுத்திருக்கும்!'- துப்பாக்கியை எதிர்த்துநின்ற டெல்லி`வைரல்' போலீஸ் நெகிழ்ச்சி

பாதிப்பில் சிக்கித் தவித்த பலரின் உயிரை பிரேம்காந்த் காப்பாற்றிய போதும் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் எதுவும் வரவில்லை. அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்த போதும் அது சம்பவ இடத்திற்கு வந்தடையவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த இரவு முழுவதும் தன் உடலில் ஏற்பட்ட 70 சதவிகித தீக்காயங்களுடன் அவர் போராடி வந்துள்ளார். எனினும், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். அடுத்தநாள் காலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்
AP

இந்த நிலையிலும், பிரேம்காந்த் தனது நண்பரின் தாயைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். மேலும், ``எங்கள் பகுதியில் இந்து மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். ஆனால், களத்தில் நடந்த வன்முறை அதன் மற்றொரு பக்கத்தைக் காட்டியது" என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது.

டெல்லி வன்முறை வழக்கில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட `1984'... அப்போது என்ன நடந்தது?
அடுத்த கட்டுரைக்கு